மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் (14C) தேசிய சைபர் குற்ற அச்சுறுத்தல் பகுப்பாய்வு பிரிவு (NCTAU), வாட்ஸ் அப் (WhatsApp Web)ஐப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது குறித்த வழிகாட்டுதல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அங்கீகரிக்கப்பட்ட வாட்ஸ் அப் வெப் அமர்வு சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்றும், இதன் மூலம் ஒரு பயனரின் வாட்ஸ் அப் கணக்கை அனுமதியின்றி அணுக வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவுத்தல் என்பது, வாட்ஸ் அப் பயன்பாட்டுக்கு முழுமையான தடை விதிப்பதாகப் பொருளல்ல என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும் அதற்கு மாறாக, அரசு அலுவலகங்கள் மற்றும் முக்கியமான தகவல்களைக் கையாளும் நிறுவனங்களில் அதன் பயன்பாட்டால் ஏற்படக்கூடிய பாதுகாப்பு அபாயங்களைத் தவிர்ப்பதே இதன் முக்கிய நோக்கமாக உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஏன் இந்த திடீர் அறிவிப்பு?
அரசு அலுவலகங்களில் வாட்ஸ் அப் வெப் பயன்படுமத்தும் போது, தனிப்பட்ட நபரின் கணக்கின் செயலில் உள்ள அமர்வைப் பயன்படுத்தி, சைபர் குற்றவாளிகள் அனுமதியின்றி கணக்கிற்குள் நுழைந்து அவர்களது குறுஞ்செய்திகளைப் படிக்க முடியும். மேலும், கணக்கின் உரிமையாளரைப் போலவே மற்றவர்களுக்குச் செய்திகளை அனுப்புதல், தொடர்புப் பட்டியல் மற்றும் குழு உரையாடல்களை அணுகுதல் போன்ற செயல்களில் ஈடுபட முடியும். இதுமட்டுமின்றி, சம்பந்தப்பட்ட நபரின் நம்பகத்தன்மையைப் பயன்படுத்தி மோசடி, போலி இணைப்புகள் மூலம் தகவல் திருட்டு மற்றும் சமூகப் பொறியியல் தாக்குதல்கள் போன்ற சைபர் குற்றங்களிலும் ஈடுபட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
லாக் அவுட் செய்வது ஏன் அவசியம்?
வாட்ஸ் அப் வெப் பயன்படுத்திய பிறகு பிரவுசர் விண்டோ அல்லது டேப்பை மட்டும் மூடினால், கணக்கின் இணைப்பு முழுமையாகத் துண்டிக்கப்படாது என I4C தெரிவித்துள்ளது. எனவே, ஒவ்வொரு முறை பயன்படுத்தி முடித்த பிறகும் பயனர்கள் தங்களது WhatsApp Web கணக்கிலிருந்து முறையாக லாக் அவுட் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, அலுவலகக் கணினிகள், பலர் பயன்படுத்தும் கணினிகள், பொது கணினிகள் அல்லது மற்றவர்களால் அணுகக்கூடிய சாதனங்களில் வாட்ஸ் அப் வெப் பயன்படுத்தும்போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அரசு, நிறுவனங்கள், நிதி தொடர்பான விவரங்கள், ரகசிய ஆவணங்கள் மற்றும் பிற முக்கியமான தகவல்களை கணினிகளில் பயன்படுத்தப்படும் வாட்ஸ் அப் வெப் அமர்வுகள் மூலம் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒருவேளை உங்களது பணிகளுக்குக் கட்டாயம் வாட்ஸ் அப் பயன்படுத்த வேண்டும் என தவிர்க்க முடியாத சூழல் ஏற்படும் பட்சத்தில், அந்த நேரத்தில் உங்களது வாட்ஸ் அப் வெப்பில் Incognito Mode அல்லது Private Browsing வசதியைப் பயன்படுத்தலாம் என I4C பரிந்துரைத்துள்ளது. இது கணினியில் உலாவல் தொடர்பான சில தரவுகள் சேமிக்கப்படுவதைக் குறைக்க உதவும். இருப்பினும், இது முழுமையான பாதுகாப்பை உறுதி செய்யாது எனவும் தெரிவித்துள்ளது. முடிந்தவரை அரசு அதிகாரிகள் தகவல்களைப் பாதுகாப்பாக வைக்கவும், தேவையில்லாத பிரச்சனைகளைத் தவிர்க்கவும், பணியை விட்டு செல்லும் போது வாட்ஸ் அப் வெப்பை லாக் அவுட் செய்துவிட வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், சைபர் கஃபேக்கள், பொது இடங்களில் உள்ள கணினிகள், ஹோட்டல்களின் வணிக மையங்களில் உள்ள கணினிகள், மற்றவர்களிடம் கடன் வாங்கிப் பயன்படுத்தும் லேப்டாப்கள் மற்றும் நம்பகத்தன்மையற்ற கணினிகளில் வாட்ஸ் அப் கணக்கை லாகின் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் மத்திய அரசின் சைபர் பாதுகாப்புப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது. எனவே, அரசு ஊழியர்கள் மட்டுமின்றி தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் பொதுமக்களும் தங்களது வாட்ஸ் அப் கணக்குகளைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது அவசியமாகிறது. குறிப்பாக, மற்றவர்கள் பயன்படுத்தும் கணினிகளில் கணக்கை இணைப்பதைத் தவிர்ப்பதும், பயன்படுத்திய பிறகு லாக் அவுட் செய்வதும் முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
,,