இந்தியாவில் பிரபலமான குடிநீர் நிறுவனங்களில் ஒன்றான பிஸ்லெரி நிறுவனம் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. அந்நிறுவனத்தின் கோவா உற்பத்தி ஆலையில் இருந்து சேகரிக்கப்பட்ட குடிநீர் மாதிரியில், அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான வேதிப்பொருட்கள் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வு முடிவுகளைத் தொடர்ந்து, பிஸ்லெரி நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடரவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் பாட்டில் குடிநீரின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.
ஆய்வில் கண்டறியப்பட்ட வேதிப்பொருட்கள் என்ன?
கடந்த 2025 செப்டம்பர் 30-ம் தேதி, கோவாவில் உள்ள பிஸ்லெரி நிறுவனத்தின் உற்பத்தி ஆலையில் இருந்து அதிகாரிகள் ஆறு குடிநீர் மாதிரிகளைச் சேகரித்தனர். அவற்றில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட ஆய்வில், ஒரு மாதிரியில் புரோமேட் என்ற வேதிப்பொருள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது.
குடிநீரில் புரோமேட்டின் அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட அளவு ஒரு லிட்டருக்கு 10 மைக்ரோகிராம் ஆகும். ஆனால், சம்பந்தப்பட்ட மாதிரியில் 12 மைக்ரோகிராம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த மாதிரி உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாப்பற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த முடிவை எதிர்த்து பிஸ்லெரி நிறுவனம் மேல்முறையீடு செய்ததைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மாதிரி மீண்டும் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. மேலாய்வில் புரோமேட் அளவு அனுமதிக்கப்பட்ட வரம்பிற்குள் இருந்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், அதே மாதிரியில் பலவளைய நறுமண ஹைட்ரோகார்பன்கள் எனப்படும் வேதிப்பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டதாகவும், இதன் அடிப்படையில் அந்த மாதிரி மீண்டும் பாதுகாப்பற்றதாக அறிவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேதிப்பொருட்கள் பல்வேறு வகைகளைக் கொண்டவை. அவற்றில் சில புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய தன்மை கொண்டவை என அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் இந்த ஆய்வு முடிவு கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது.
வழக்குத் தொடர அனுமதி வழங்கிய உணவுப் பாதுகாப்பு ஆணையம்!
இரண்டு கட்ட ஆய்வுகளிலும் பாதுகாப்பு தொடர்பான குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டதைத் தொடர்ந்து, பிஸ்லெரி நிறுவனத்திற்கு எதிராக உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2006-ன் கீழ் வழக்குத் தொடர இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

மேலும், இந்த விவகாரத்தைத் தொடர்ந்து பிஸ்லெரி நிறுவனத்தின் பிற தயாரிப்புகள் மட்டுமின்றி, மற்ற குடிநீர் நிறுவனங்களின் மாதிரிகளையும் ஆய்வு செய்ய உணவுப் பாதுகாப்பு அமைப்பு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குற்றச்சாட்டை மறுத்து பிஸ்லெரி நிறுவனம் விளக்கம்!

உணவுப் பாதுகாப்பு ஆணையத்தின் ஆய்வு முடிவுகள் தொடர்பாக பிஸ்லெரி நிறுவனமும் தனது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளது.
இந்த விவகாரம் 2025 செப்டம்பர் மாதம் கோவாவில் உள்ள நிறுவனத்தின் உற்பத்தி ஆலையில் தயாரிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட தொகுதி குடிநீர் தொடர்பானது மட்டுமே என்றும், அனைத்து பிஸ்லெரி தயாரிப்புகளுக்கும் இதைப் பொதுவான பிரச்சினையாகக் கருதக்கூடாது என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதிகாரிகள் சேகரித்த ஆறு குடிநீர் மாதிரிகளில் ஐந்து மாதிரிகள் நிர்ணயிக்கப்பட்ட தரத்தைப் பூர்த்தி செய்ததாகவும், ஒரு மாதிரியில் மட்டுமே புரோமேட் அளவு அதிகமாக இருந்ததாகவும் கூறியுள்ளது.
மேலும், மேலாய்வில் புரோமேட் அளவு அனுமதிக்கப்பட்ட வரம்பிற்குள் இருந்ததாகவும், உணவுப் பாதுகாப்பு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மற்றொரு ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலும் இதே முடிவு கிடைத்ததாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வு முடிவுகளை 2026 பிப்ரவரி 2-ம் தேதி உணவுப் பாதுகாப்பு ஆணையத்தின் மேற்கு மண்டல அலுவலகத்தில் சமர்ப்பித்ததாகவும், அதன் பின்னர் அதிகாரிகளிடமிருந்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்றும் பிஸ்லெரி கூறியுள்ளது. தற்போது வழக்குத் தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
தங்களது உற்பத்தி நடைமுறையில் 10 கட்டங்களாக 90-க்கும் மேற்பட்ட தரப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், குடிநீரின் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் செய்யப்படாது என்றும் நிறுவனம் உறுதியளித்துள்ளது. இந்த விவகாரத்தில் உணவுப் பாதுகாப்பு ஆணையத்தின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
குடிநீரின் பாதுகாப்பு குறித்து எழும் கேள்விகள்!
ஒருபுறம் உணவுப் பாதுகாப்பு ஆணையத்தின் ஆய்வு முடிவுகள், மறுபுறம் பிஸ்லெரி நிறுவனத்தின் மறுப்பு என இந்த விவகாரம் தொடர்ந்து கவனத்தைப் பெற்று வருகிறது.
இருப்பினும், ஒரு குறிப்பிட்ட குடிநீர் மாதிரியில் கண்டறியப்பட்ட குறைபாட்டை வைத்து நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளும் பாதுகாப்பற்றவை என்று முடிவு செய்ய முடியாது. அதேபோல், வழக்குத் தொடர அனுமதி வழங்கப்பட்டிருப்பது மட்டுமே நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டதாகப் பொருளல்ல.
இந்த விவகாரத்தின் இறுதி முடிவு சட்ட நடைமுறைகள் மற்றும் மேலதிக விசாரணைகளின் அடிப்படையிலேயே தெரியவரும். மக்களின் அன்றாடத் தேவைகளில் ஒன்றான குடிநீரின் தரத்தை உறுதி செய்வதில் உரிய கண்காணிப்பும் தொடர்ச்சியான பரிசோதனைகளும் எவ்வளவு அவசியம் என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் உணர்த்தியுள்ளது.