இலங்கையின் மிகப்பெரியது எனக் கருதப்படும் மனிதப் புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பான நிபுணர் அறிக்கையை எதிர்த்து, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தமிழ் உறவினர்கள், அதில் உள்ள ‘சர்ச்சைக்குரிய முடிவுகளை’ நிராகரிக்குமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
“யாழ்ப்பாணம், செம்மணி தடயவியல் தொல்லியல் அகழ்வாய்வு” (Forensic Archaeological Excavation in Chemmani Jaffna) என்ற தலைப்பிலான அறிக்கையைத் தொல்லியல் நிபுணர்களான பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் அனுஷா வன்னிநாயக்க ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்த அறிக்கை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஒக்டோபர் 20ஆம் தேதி சமர்ப்பிக்கப்பட்டது.
“இந்த அறிக்கையில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள சான்றுப் பொருட்களின் தொகுப்பு, ஆராயப்பட்ட புதைகுழிகளின் தன்மை மற்றும் பண்புகள் தொடர்பாகத் திட்டவட்டமான முடிவொன்றை எட்டுவதற்குப் போதுமானதாக இல்லை” என 190 பக்கங்களைக் கொண்ட சுருக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“எனினும், தொல்பொருட்களும் அவற்றுடன் தொடர்புடைய சூழல் சார்ந்த சான்றுகளும், உலகின் ஏனைய பகுதிகளில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள இரகசியப் புதைகுழிகளை விட, முறையான அடக்க நடைமுறைகளைக் கொண்ட இடங்களுடன் இந்த இடம் அதிக ஒற்றுமையைக் கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டுகின்றன” என அந்தத் தொல்லியல் நிபுணர்கள் இருவரும் வலியுறுத்தியுள்ளனர். அறிக்கையில் இந்தக் கருத்து தடித்த எழுத்துகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு இரண்டு நாட்களுக்குப் பின்னர், பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் சட்டத்தரணி கஸ்தூரி அஹலங்கன் அதே நீதிமன்றத்தில் ஆட்சேபனை மனுவொன்றைத் தாக்கல் செய்தார். குறித்த சுருக்க அறிக்கையில் உள்ள ‘கண்டறிதல்கள், அவதானிப்புகள், விளக்கங்கள் மற்றும் முடிவுகள், முக்கியமான சூழ்நிலைகளையும் கிடைக்கக்கூடிய சான்றுகளையும் முற்றிலும் கவனத்தில் கொள்ளத் தவறியுள்ளன’ என அந்த மனுவில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

“போதுமான அளவில் பௌதிகச் சான்றுகளும் தொல்லியல் சூழலும் ஆராயப்படாமல், ஊகத்தின் அடிப்படையில் சாதாரண அடக்கம் இடம்பெற்றதாக நிறுவப்பட்டுள்ளதாகக் கூறப்படும் எந்தவொரு முடிவையும் பாதிக்கப்பட்ட தரப்பினர் எதிர்க்கின்றனர்” என ஒன்பது பக்கங்களைக் கொண்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நீதித்துறையால் குற்றச் சம்பவம் இடம்பெற்ற இடமாக அங்கீகரிக்கப்பட்ட புதைகுழி தொடர்பான இந்தச் சர்ச்சை, பாரிய அட்டூழியங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு சர்வதேசத் தலையீடு அவசியம் என்ற தமிழர்களின் நீண்டகாலக் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இந்த அட்டூழியங்கள் பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
போரினால் பாதிக்கப்பட்ட அந்தப் பிராந்தியத்தைச் சேர்ந்த தமிழர்கள், செம்மணிப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட 500க்கும் மேற்பட்டவர்களின் உடல்கள், அவற்றில் சிசுக்களும் குழந்தைகளும் அடங்குவதாகவும், அவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உடல்கள் எனவும் வலுவாக நம்புகின்றனர்.
1990-களின் நடுப்பகுதியில் செம்மணிப் புதைகுழி முதன்முதலில் கண்டறியப்பட்டபோது, அதிகாரிகளுக்கு அந்த இடத்தை அடையாளம் காட்டிய சிப்பாய் சோமரத்ன ராஜபக்ச, கடத்தப்பட்ட அல்லது தடுத்து வைக்கப்பட்ட தமிழர்களின் உடல்களே அங்கு புதைக்கப்பட்டிருந்ததாக ஒப்புக்கொண்டார்.
தமிழ்ப் பாடசாலை மாணவியான கிருஷாந்தி குமாரசாமியை கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திக் கொலை செய்ததுடன், அவரது தாய், சகோதரர் மற்றும் குடும்ப நண்பர் ஆகியோரைக் கொலை செய்த குற்றத்திற்காக சோமரத்ன ராஜபக்சவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்த உடல்கள் செம்மணியில் வீசப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டன. மீட்கப்பட்ட நூற்றுக்கணக்கான உடல்களும் இராணுவத்தினரால் கொல்லப்பட்ட தமிழர்களுடையவை என அந்தச் சிப்பாய் தொடர்ந்து கூறி வருகிறார்.
2025 பெப்ரவரியில் தற்செயலாக மனித எலும்பு எச்சங்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட அகழ்வுப் பணிகள் 2026 ஒகஸ்ட் மாதம் வரை தொடர்ந்தன. சுமார் 80 நாட்கள் நடைபெற்ற அகழ்வுப் பணிகளின்போது குறைந்தபட்சம் 574 தனிநபர்களின் மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டதாகத் தொல்லியல் நிபுணர்களின் அண்மைய அறிக்கை தெரிவிக்கிறது.
எனினும், அகழ்வுப் பணிகள் இடம்பெற்ற இடத்தில் முன்னதாக ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்ட தகவல்களில், மூன்று கட்டங்களாக 110 நாட்கள் நடைபெற்ற அகழ்வுப் பணிகளின்போது மொத்தம் 583 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டதாக பதிவிடப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களுடன் கண்டெடுக்கப்பட்ட பொருட்களில் பாலூட்டும் போத்தல்கள், புத்தகப் பைகள், பொம்மைகள், நாணயங்கள் மற்றும் மழை அங்கி ஆகியவை அடங்குகின்றன. கண்டறிதல்கள் முதன்முதலில் வெளியிடப்பட்டபோது யாழ்ப்பாண நீதவான், அகழ்வுப் பணிக் குழுக்களைச் சேர்ந்த தொல்லியல் நிபுணர்கள், சட்ட வைத்திய அதிகாரிகள், சட்டத்தரணிகள் மற்றும் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (OMP) பிரதிநிதிகள் ஆகியோர் அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.
பேராசிரியர் சோமதேவ சமர்ப்பித்த முந்தைய மூன்று அறிக்கைகளிலிருந்து மாறுபட்டு, அண்மைய அறிக்கை இந்த இடத்தை மனிதப் புதைகுழி என அடையாளப்படுத்தத் தவறியுள்ளது. இது ‘வேண்டுமென்றே தவிர்க்கப்பட்ட செயல்’ எனப் பாதிக்கப்பட்டவர்கள் வர்ணிக்கின்றனர்.
“பேராசிரியர் ராஜ் சோமதேவ தனது இந்த இடைக்கால அறிக்கையிலிருந்து ‘மனிதப் புதைகுழி’ என்ற சொல்லை வேண்டுமென்றே தவிர்த்துள்ளார். ஆனால், அவர் தனது முந்தைய மூன்று அறிக்கைகளிலும் இதே சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். இந்தத் தவிர்ப்பு, இடைக்கால அறிக்கையின் துல்லியம் மற்றும் செல்லுபடித்தன்மை தொடர்பில் கடுமையான சந்தேகங்களை எழுப்புகிறது” என அறிக்கையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்துக்கும் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட ஏனைய சர்வதேச அமைப்புகளுக்கும் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு முந்தைய அறிக்கைகள் இந்த இடத்தை மனிதப் புதைகுழியாக அடையாளப்படுத்தியிருந்தன.
“2025 செப்டம்பரில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு செம்மணிப் புதைகுழி விசாரணை தொடர்பான தனது உண்மை கண்டறியும் அறிக்கையை வெளியிட்டதுடன், சர்வதேச மனித உரிமைகள் தரநிலைகளுக்கு அமைவாக நம்பகமான, வெளிப்படையான மற்றும் விஞ்ஞான ரீதியாக வழிநடத்தப்படும் செயற்பாட்டை உறுதிப்படுத்துவதற்கான பரிந்துரைகளையும் முன்வைத்தது” என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் பேராசிரியர் சோமதேவ, “உடல்கள் ஒரே சீரான திசையில் அமைக்கப்படாமை, அவற்றுடன் தொடர்புடைய அடக்கப் பொருட்கள் இல்லாமை மற்றும் முறையான அடக்க மரபுகள் வெளிப்படையாகப் புறக்கணிக்கப்பட்டமை ஆகியவை, இறந்தவர்களை கலாசார ரீதியாக அர்த்தமுள்ள வகையில் கௌரவிக்கும் நோக்கத்துடன் இந்த அடக்கங்கள் மேற்கொள்ளப்படவில்லை என்பதைக் கூட்டாகச் சுட்டிக்காட்டுகின்றன. மாறாக, இந்த அடக்கங்களின் அமைப்பியல், உடல்கள் அவசரமாக அகற்றப்பட்டிருக்கலாம் என்றும், அவை வற்புறுத்தல் அல்லது வன்முறைச் சூழ்நிலைகளில் இடம்பெற்றிருக்கலாம் என்றும் கருதுவதற்கான அடிப்படையை வழங்குகிறது. இது மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய மனிதப் புதைகுழிகளின் அறியப்பட்ட பண்புகளுடன் ஒத்துப்போகிறது” எனத் தெரிவித்திருந்தார்.

எனினும், தொற்றுநோய் அல்லது இயற்கைப் பேரழிவு காரணமாக இந்த அடக்கங்கள் இடம்பெற்றிருக்கலாம் எனக் குறிப்பிடும் அவரது புதிய அறிக்கை, பாதிக்கப்பட்ட தரப்பினரால் கடுமையாக எதிர்க்கப்படுகின்றன.
சுருக்க அறிக்கையில், “தொற்றுநோய் அல்லது வேறு ஏதேனும் இயற்கைப் பேரழிவின் விளைவாக இந்தப் புதைகுழிகள் உருவாகியிருந்தால், அவற்றுடன் தொடர்புடைய பொருட்கள் குறைவாகக் காணப்படுவது எதிர்பாராத ஒன்றாக இருக்காது. இத்தகைய சூழ்நிலைகளில், கணிசமான அளவிலான பொருட்களையோ தனிப்பட்ட உடைமைகளையோ வைப்பதை விட, உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவாக அகற்றுவதற்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கலாம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், அதே அறிக்கையில் ‘பல தாயத்துகள்’ மற்றும் ‘கணிசமான எண்ணிக்கையிலான இலங்கை நாணயங்கள்’ ஆகியவை ‘சடங்கு நடைமுறைகளுடன் தொடர்புடைய’ தொல்பொருட்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. அதேவேளை, ‘அவற்றின் துல்லியமான பயன்பாடுகளை தொல்லியல் சூழலின் அடிப்படையில் மட்டும் உறுதிப்படுத்த முடியாது’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்றுநோய் அல்லது இயற்கைப் பேரழிவு ஏற்பட்டதற்குப் போதுமான சான்றுகளைத் தொல்லியல் நிபுணர்களின் அறிக்கை கொண்டிருக்கவில்லை எனப் பாதிக்கப்பட்டவர்கள் வாதிடுகின்றனர்.
“அடையாளம் காணக்கூடியதும் சரிபார்க்கக்கூடியதுமான விஞ்ஞானச் சான்றுகளால் ஆதரிக்கப்படாத நிலையில், எலும்புக்கூடுகளின் எச்சங்கள் தொற்றுநோய், இயற்கைப் பேரழிவு அல்லது குற்றச்செயல் அல்லாத வேறு ஏதேனும் சம்பவத்தால் ஏற்பட்டிருக்கலாம் என்ற அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள எந்தவொரு கருத்தையும் பாதிக்கப்பட்ட தரப்பினர் குறிப்பாக எதிர்க்கின்றனர்” என சட்டத்தரணி கஸ்தூரி அஹலங்கன் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
2025 ஒகஸ்ட் மாதம் செம்மணிப் புதைகுழிக்கு உண்மை கண்டறியும் விஜயமொன்றை மேற்கொண்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, சைவ சமயத்தவர்களின் வழக்கமான அடக்க நடைமுறைகளின்படி இந்தப் புதைகுழிகள் அமைக்கப்படவில்லை எனத் தெரிவித்தது.
மேலும், “இந்த அடக்கங்கள் சட்டவிரோதமானவையாகவும், நீதிமன்றத்திற்கு வெளியே மேற்கொள்ளப்பட்ட கொலைகளின் விளைவாகவும் அமைந்திருக்கக்கூடிய நியாயமான சாத்தியக்கூறு காணப்படுகிறது” எனவும் அது குறிப்பிட்டது.
சோமதேவ – வன்னிநாயக்க அறிக்கை தொடர்பான சர்ச்சைக்குப் பதிலளிக்கும் வகையில், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிப்பாய் சோமரத்ன ராஜபக்ச, 1996ஆம் ஆண்டு வடக்கில் நிலைகொண்டிருந்த இலங்கை இராணுவத்தினரால் கொல்லப்பட்டவர்களுடையவையே செம்மணிப் புதைகுழியிலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான உடல்கள் என்ற தனது கூற்றை மீண்டும் வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
“மயானப் பகுதியிலும் செம்மணியைச் சூழவுள்ள பகுதிகளிலும் உடல்கள் புதைக்கப்பட்டிருந்ததாக நான் ஏற்கனவே தெரிவித்துள்ளேன். எனவே, தற்போது மயானப் பகுதியில் கண்டெடுக்கப்படும் உடல்கள், இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டவர்களுடையவையாக இருக்கக்கூடும்” என சிப்பாய் ராஜபக்ச, கொழும்பைத் தளமாகக் கொண்ட தமிழ் நாளிதழுக்கு (வீரகேசரி) தெரிவித்துள்ளார்.
மரண தண்டனைக் கைதியின் சகோதரி ஊடாக இந்தக் கருத்து தெரிவிக்கப்பட்டதாக நாளிதழ் அறிக்கையிட்டுள்ளது.
“‘அகழ்வுப் பணிகளின் மூலம் அண்மையில் கண்டெடுக்கப்பட்ட 500க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள், செம்மணிப் பகுதியில் இராணுவத்தினரால் கொல்லப்பட்டவர்களுடையவை என நீங்கள் உறுதியாக நம்புகிறீர்களா?’ என்று நேரடியாகக் கேட்கப்பட்டபோது, சோமரத்ன ராஜபக்ச ‘ஆம்’ என்று பதிலளித்தார்” என நாளிதழ் தெரிவித்துள்ளது.
செம்மணியில் நூற்றுக்கணக்கான உடல்கள் கண்டறியப்பட்டமை தொடர்பாக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைக்கு, 1990களின் இறுதியில் இடம்பெற்ற முந்தைய புதைகுழி தொடர்பான நீதிமன்ற ஆவணங்கள் கிடைக்கப்பெற்றதாகத் தெரியவில்லை.
“1999ஆம் ஆண்டு மனிதப் புதைகுழி தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்த அறிக்கை, 2025ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட புதைகுழி தொடர்பான நீதவான் விசாரணைக்கு வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை. அந்தப் பதிவுகள் தொலைந்திருக்கலாம் அல்லது காணாமல் போயிருக்கலாம் எனத் தோன்றுகிறது” என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் 2025 ஜூலை மாதம் தெரிவித்திருந்தது.
தொல்லியல் நிபுணர்களின் அறிக்கையைப் பெற்றுக்கொண்ட பின்னர், செம்மணிப் புதைகுழி தொடர்பாக சிப்பாய் சோமரத்ன ராஜபக்சவிடம் புதிதாக வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) யாழ்ப்பாண நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் அனுமதி வழங்கினார்.
உள்ளூர் பொறிமுறைகள் மூலம் நீதி கிடைப்பது குறித்து சந்தேகம் கொண்டுள்ள தமிழ் பாதிக்கப்பட்டவர்கள், நாட்டின் எல்லைகளுக்கு அப்பால் நீதியைப் பெறுவதற்காக நீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளனர்.
“அறிக்கையிலிருந்து எழும் முக்கியமான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சுயாதீனமான சர்வதேச நிபுணர் மதிப்பாய்வு அல்லது மேலதிக தடயவியல் தொல்லியல் ஆய்வு அவசியமா என்பதைப் பரிசீலிக்க வேண்டும்” என அறிக்கையை எதிர்த்து சட்டத்தரணி அஹலங்கன் தாக்கல் செய்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
பொறுப்புக்கூறல் செயற்பாட்டில் சர்வதேசத் தலையீட்டை இலங்கை நிராகரித்துள்ளது. செம்மணி விசாரணைகளுக்குத் தேவையான நிதியை அரசாங்கம் வழங்கியுள்ளதாகவும், நீதித்துறையின் சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இலங்கை அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.