இலங்கையில் நடைபெறவுள்ள எக்ஸ்போ 2027 நிகழ்வில் பங்குப்பற்றுமாறு இந்திய வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தக தலைவர்களுக்கு இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மஹிஷினி கொலொன்னே அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான வலுவான பொருளாதாரக் கூட்டாண்மைகளை உருவாக்குவதற்கான வாய்ப்புக்கள் குறித்தும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
புதுடில்லியில் கடந்த 5ம் தேதி நடைபெற்ற இந்திய சர்வதேச நிலையத்தில் நடைபெற்ற BIMSTEC நாடுகளில் வர்த்தக வாய்ப்புக்கள் என்ற மாநாடொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த அழைப்பை விடுத்திருந்தார்.
மில்லேனியல் இந்திய சர்வதேச வர்த்தக, கைத்தொழில் மற்றும் விவசாய சபையினால் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த மாநாட்டில் BIMSTEC அமைப்பின் ஏழு உறுப்பு நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மூத்த இராஜதந்திரிகள், இந்திய வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் இந்திய வர்த்தக, கைத்தொழில் துறைகளைச் சேர்ந்த சுமார் 80 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். பிராந்தியத்தில் பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துதல் மற்றும் வர்த்தகக் கூட்டாண்மைகளை மேம்படுத்துதல் தொடர்பான வாய்ப்புகளை ஆராய்வதே மாநாட்டின் நோக்கமாக இருந்தது.
இந்திய வெளிவிவகார அமைச்சின் கிழக்குப் பிராந்தியச் செயலாளர் தூதுவர் ருத்ரேந்திர டாண்டன் மாநாட்டில் உரையாற்றியபோது, BIMSTEC நாடுகளுக்கு இடையிலான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளை எடுத்துரைத்தார். அத்துடன், அண்டை நாடுகளின் சந்தைகளில் காணப்படும் வாய்ப்புகளை ஆராயுமாறு இந்திய வர்த்தக நிறுவனங்களையும் அவர் ஊக்குவித்தார்.
MIICCIA அமைப்பின் தலைவர் தூதுவர் அனில் திரிகுணாயத், BIMSTEC நாடுகளுடன் இந்தியாவின் வர்த்தகம், முதலீடு மற்றும் வணிக உறவுகளை மேம்படுத்துவதில் அந்த அமைப்பு ஆற்றும் பங்கு குறித்து விளக்கினார்.
BIMSTEC அமைப்பின் பொதுச் செயலாளர் தூதுவர் இந்திர மணி பாண்டே காணொளி வாயிலாக மாநாட்டில் உரையாற்றினார். பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பை முன்னெடுப்பதற்காக வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான நேரடித் தொடர்புகளையும் தனியார் துறையின் பங்களிப்பையும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
BIMSTEC உறுப்பு நாடுகளைச் சேர்ந்த மூத்த பிரதிநிதிகளும் தத்தமது நாடுகளில் காணப்படும் பொருளாதார மற்றும் வர்த்தக வாய்ப்புகள் தொடர்பில் தமது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.
தனது உரையில், இலங்கையின் மூலோபாய அமைவிடம், போக்குவரத்து மற்றும் இணைப்புச் சேவைகள், இந்தியாவுடனான நீண்டகால பொருளாதார உறவுகள் ஆகியவற்றை உயர்ஸ்தானிகர் மஹிஷினி கொலொன்னே எடுத்துரைத்தார்.
மேலும், வர்த்தகம், முதலீடு, துறைமுகங்கள் மற்றும் சரக்குப் போக்குவரத்துத் தளவாடங்கள், உற்பத்தித்துறை, சுற்றுலாத்துறை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் டிஜிட்டல் சேவைகள் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஏற்கனவே வலுவான பொருளாதார மற்றும் மக்களிடையிலான தொடர்புகள் காணப்படுவதாகத் தெரிவித்த அவர், இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகக் கூட்டாண்மைகளையும் பரஸ்பர முதலீடுகளையும் மேலும் அதிகரிப்பதற்குப் பெருமளவிலான வாய்ப்புகள் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா எக்ஸ்போ 2027 இல் பங்கேற்க அழைப்பு

இலங்கையின் முக்கிய சர்வதேச வர்த்தகக் கண்காட்சியான இலங்கை எக்ஸ்போ 2027, எதிர்வரும் ஆண்டு ஜனவரி 14ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறவுள்ளது.
இந்தக் கண்காட்சியில் பங்கேற்குமாறு இந்திய வர்த்தக நிறுவனங்களுக்கும் BIMSTEC நாடுகளைச் சேர்ந்த வர்த்தகச் சமூகங்களுக்கும் உயர்ஸ்தானிகர் மஹிஷினி கொலொன்னே அழைப்பு விடுத்தார்.
இலங்கை ஏற்றுமதியாளர்கள், சர்வதேச வர்த்தகக் கொள்வனவாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் கைத்தொழில் துறைத் தலைவர்கள் ஒரே தளத்தில் சந்தித்து, புதிய வர்த்தக மற்றும் முதலீட்டுக் கூட்டாண்மைகளை ஆராய்வதற்கு இந்தக் கண்காட்சி வாய்ப்பளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
