தமிழகத்தில் சுமார் 40 ஆண்டுகளாக ஜெம் கிரானைட் நிறுவனம் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தை ஆர். வீரமணி கவனித்து வருகிறார். தன்னிடம் உதவிக்கேட்டு வரக்கூடிய சிறுமிகள் உள்பட பலரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இதற்காக வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்ததாகவும், அதில் பல சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இத்தகைய செயல்களில் பல ஆண்டுகளாக ஜெம் வீரமணி ஈடுபட்டு வந்த நிலையில், சென்னை காவல்துறையில் கடந்த 2025 ஆம் ஆண்டு காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதனுடன் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பான வீடியோக்களுடன் ஆதாரங்களுடன் கொடுக்கப்பட்ட நிலையில் விசாரணையும் நடைபெற்றுவருகிறது. ஆரம்பகட்ட விசாரணையில் பாதிக்கப்பட்ட கூறப்படும் நபரை அடையாளம் காண முடியவில்லை எனக்கூறி கடந்த 2026 ஆம் ஆண்டு நடவடிக்கை தேவையில்லை என்ற நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் நீதிமன்றத்தின் தலையீட்டைத் தொடர்ந்து வழக்கு மீண்டும் தீவிரமாக விசாரிக்கப்பட்டது.
முன்னதாக இந்த புகார் மனு இந்தப் புகார் மனு மத்திய குற்றப் பிரிவின் அப்போதைய கூடுதல் ஆணையருக்கு அனுப்பப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் அதே ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி போக்சோ சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
சிறப்பு நீதிமன்றத்தின் தலையீடு:
காவல்துறையின் சார்பில், வழக்கை முடிவுக்குக் கொண்டு செல்லும் முயற்சி தொடர்பாக நீதிமன்றத்தில் கேள்விகள் எழுந்த நிலையில், சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் வழக்கை விசாரிக்க உத்தரவிட்டது. இதையடுத்து இந்த விவகாரம் மீண்டும் கவனம் பெற்றதுடன், பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நபர்களிடமிருந்து தகவல்கள் பெறப்பட்டு விசாரணை விரிவுபடுத்தப்பட்டது. வழக்கின் விசாரணையானது தீவிரமாக நடைபெற்ற நிலையில், ஜெம் வீரமணி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். அவருடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்மன் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர். வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், வீரமணி மீது ஒன்றுக்கும் மேற்பட்ட போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் மற்றொரு முக்கிய திருப்பமாக, சுமார் 22 ஆண்டுகளுக்கு முன்பு சிறுமி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாகவும் வீரமணி மீது புதிய போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது.
விசாரணையின் அடுத்த கட்டமாக வீரமணியுடன் முன்பு பணியாற்றியதாகக் கூறப்படும் மூன்று முன்னாள் ஓட்டுநர்களையும் சிறப்பு புலனாய்வு கைது செய்தது. சிறுமிகளை வீரமணியுடன் தொடர்புடைய இடங்களுக்கு அழைத்துச் சென்றது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் நபர்களின் வட்டாரம் குறித்தும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை தீவிரப்படுத்தி வருகிறது.
17 கட்டங்களைத் தாண்டி விசாரணை:
தமிழகத்தை உலுக்கிய சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்குகள் தீவிரமாக நடைபெற்று வரக்கூடிய நிலையில், 17 கட்டங்களைத் தாண்டி விசாரணையானது நடைபெற்று வருகிறது. ஏன் காவல்துறை வீடியோ ஆதாரங்களை மூடி மறைத்தது? அரசியல் ஆதரவு எதுவும் உள்ளதா? உள்ளிட்ட அனைத்துக் கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சூழலில் புதிதாக மதுரையைச் சேர்ந்த சிறுமி தொடர்பான புகாரின் அடிப்படையில், 2026 அக்டோபர் 7 ஆம் தேதி வீரமணி மீது மேலும் புதிய போக்சா வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த புதிய வழக்கில் வீரமணி சென்னை போக்சா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கைத்தடியுடன் காவல்துறையின் பாதுகாப்புடன் போக்சா நீதிமன்றத்திற்கு வருகை தந்த ஜெம் வீரமணிக்கு அக்டோபர் 21 வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஜெம் வீரமணி மீதான குற்றச்சாட்டுகள் குறித்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனுவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தற்போது சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருவதாலும், விசாரணை முறையாக நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பு தெரிவித்ததாலும், இந்த நிலையில் சிபிஐ விசாரணை தேவையில்லை என்ற நிலைப்பாடு தெரிவிக்கப்பட்டது. மேலும் விசாரணையின் அடுத்தகட்ட அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு அவகாசம் வழங்கப்பட்டதோடு வழக்கின் விசாரணையானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.