குஜராத்தின் தாஹோத் மாவட்டத்தில் மிகவும் அரிதான உடல் அமைப்பைக் கொண்ட வுல்ஃப் பாம்பு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. ஒரே உடலில் இரண்டு தலைகள் மற்றும் நான்கு கண்களுடன் காணப்பட்ட இந்த பாம்பு வன உயிரின ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தன்பூர் தாலுகாவுக்கு உட்பட்ட அகஸ்வானி கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் இந்த பாம்பு தென்பட்டுள்ளது. இதைப் பார்த்த பொதுமக்கள், தாஹோத் பிரக்ருதி மித்ர மண்டல் அமைப்பினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அங்கு சென்ற மீட்புக் குழுவினர் பாம்பை பத்திரமாக மீட்டனர்.
சுமார் 5 முதல் 6 அங்குல நீளமுள்ள இந்த பாம்பு, வுல்ஃப் பாம்பு வகையைச் சேர்ந்தது என்பது புகைப்படங்களை நிபுணர்களிடம் அனுப்பி ஆய்வு செய்த பின்னர் உறுதி செய்யப்பட்டதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த வகை பாம்புகள் விஷமற்றவை.
இரண்டு தலைகளுடன் ஒரே உடல்:
இந்த பாம்பின் இரண்டு தலைகளும் தனித்தனியாக செயல்படுவதாகக் கூறப்படுகிறது. இத்தகைய அரிய உடல் அமைப்பு ‘பைசெபலி’ (Bicephaly) எனப்படுகிறது. கரு வளர்ச்சியின்போது ஏற்படும் அரிதான வளர்ச்சிக் குறைபாட்டின் காரணமாக ஒரே உடலில் இரண்டு தலைகள் உருவாகலாம்.
மீட்புக் குழுவின் தகவல்படி, குஜராத்தில் இரண்டு தலை கொண்ட பாம்பு பதிவாகியிருப்பது இதுவே முதல் முறையாகும். இந்திய அளவில் இதற்கு முன்பும் இதுபோன்ற சில சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட பாம்பு தற்போது வனத்துறையின் கண்காணிப்பில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அதன் உடல்நிலை மற்றும் அரிய உடல் அமைப்பு குறித்து தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.