தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கை மீண்டும் அரசியல் விவாதத்தின் மையத்துக்கு வந்துள்ளது.
கடந்த சில நாட்களில் சாலை வழிகாட்டிப் பலகை முதல் அரசு மருத்துவமனைகளின் மருந்துக் கவர்கள் வரை, தமிழ் மற்றும் ஆங்கிலத்துடன் இந்தி இடம்பெற்றது தொடர்பாக அடுத்தடுத்து சர்ச்சைகள் எழுந்துள்ளன. ஒரு பக்கம், இது தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கைக்கு முரணானது என அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. மறுபக்கம், சில சம்பவங்கள் முந்தைய ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட நடைமுறைகள் என்றும், சில இடங்களில் நிர்வாகத் தவறு மட்டுமே நடந்துள்ளதாகவும் ஆளும் தரப்பு விளக்கம் அளிக்கிறது.
அப்படியானால், இது தொடர்ச்சியாக நிகழும் நிர்வாகக் கவனக்குறைவா? அல்லது தமிழ்நாட்டின் மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் கண்காணிப்புக் குறைபாடா?
சாத்தான்குளம் சாலைப் பலகை: இருமொழிக் கொள்கை எங்கே?
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே மாநில நெடுஞ்சாலை 93-ல் புதிதாக வைக்கப்பட்ட வழிகாட்டிப் பலகையில் தமிழ் மற்றும் ஆங்கிலத்துடன் இந்தி இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அல்வார்திருநகரி-வள்ளியூர் சாலையில் வைக்கப்பட்டிருந்த அந்தப் பலகையில் பல்வேறு ஊர்களின் பெயர்கள் மூன்று மொழிகளில் இடம்பெற்றிருந்தன. எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து, சில மணி நேரங்களிலேயே இந்தி எழுத்துகள் அகற்றப்பட்டன.
இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறையைச் சேர்ந்த உதவிக் கோட்டப் பொறியாளர் பூமிநாதன் மற்றும் உதவிப் பொறியாளர் முத்துலட்சுமி ஆகிய இருவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். இருமொழிக் கொள்கைக்கு எதிராகச் செயல்படும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு தெரிவித்தது.
இந்த நடவடிக்கையை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்தார். ஒன்றிய அரசின் இந்தித் திணிப்பை எதிர்த்து வந்த தமிழ்நாடு அரசு, தற்போது அதே பாதையில் செல்வதாக அவர் குற்றம்சாட்டினார். எதிர்ப்பு எழுந்தவுடன் முடிவுகளைத் திரும்பப் பெறுவது போன்ற நடவடிக்கைகள் நடைபெறுவதாகவும் அவர் கூறினார்.
இதற்கு நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலளித்தார். பேரறிஞர் அண்ணா கொண்டுவந்த இருமொழிக் கொள்கை தவெகவின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றே என்றும், அதில் எந்த சமரசமும் இருக்காது என்றும் அவர் தெரிவித்தார். இருமொழிக் கொள்கைக்கு எதிரான எந்தச் சவாலையும் எதிர்கொள்வோம் என்றும் கூறினார்.
ஆனால், விவகாரம் இத்துடன் முடிந்துவிடவில்லை.
தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை டிப்ளமோ பொறியாளர்கள் சங்கம், இரு அதிகாரிகளின் பணியிடைநீக்கத்தைத் திரும்பப் பெற வேண்டும் எனக் கோரியுள்ளது. மத்திய நிதியில் சீரமைக்கப்படும் மாநில நெடுஞ்சாலைகளில் எந்தெந்த மொழிகள் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதற்கான தெளிவான வழிகாட்டுதல் இதுவரை வழங்கப்படவில்லை என்றும், விசாரணை நடத்துவதற்கு முன்பே அதிகாரிகளை இடைநீக்கம் செய்திருப்பது நடைமுறைக்கு ஏற்றதல்ல என்றும் சங்கம் தெரிவித்துள்ளது.
அப்படியானால், தவறு அதிகாரிகளுடையதா? வழிகாட்டுதல் வழங்காத நிர்வாகத்தினுடையதா? அல்லது இரண்டுமே தொடர்புடையவையா? இந்தக் கேள்விக்கு தெளிவான பதில் தேவைப்படுகிறது.
மருந்துக் கவரிலும் இந்தி: புதிய சர்ச்சை
சாத்தான்குளம் விவகாரம் முடிவடைவதற்குள், கரூர் மற்றும் கோவை அரசு மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்ட மருந்துக் கவர்களில் தமிழ், ஆங்கிலத்துடன் இந்தி இடம்பெற்றது மற்றொரு சர்ச்சையை உருவாக்கியது.
மருந்தை காலை, மதியம், இரவு எப்போது எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கான வழிமுறைகள் மூன்று மொழிகளில் அச்சிடப்பட்டிருந்தன.

இந்தப் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்த திமுக முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தமிழ்நாடு மருத்துவமனைகளிலும் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படுகிறதா என்ற கேள்வியை எழுப்பினார். முதலில் கரூரிலும், பின்னர் கோவையிலும் இதே நடைமுறை இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
விவகாரம் எழுந்ததும், கோவை மற்றும் கரூர் அரசு மருத்துவமனைகள் அந்த மருந்துக் கவர்களின் பயன்பாட்டை நிறுத்தின.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அதிகாரிகள், இந்தக் கவர்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டவை அல்ல என்றும், நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தவை என்றும் தெரிவித்தனர். குறிப்பாக, மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான புறநோயாளிகள் வருவதுடன், வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும் கணிசமான எண்ணிக்கையில் சிகிச்சை பெறுவதாக மருத்துவமனை தரப்பு தெரிவித்துள்ளது.
இதனால், இங்கு இன்னொரு கேள்வி எழுகிறது.
மருந்தின் பயன்பாட்டை நோயாளிக்கு எளிதாகப் புரிய வைப்பதற்கான நிர்வாகத் தேவையா இது? அல்லது மாநிலத்தின் மொழிக் கொள்கையை மீறிய பயன்பாடா?
“இது முந்தைய ஆட்சிக் காலத்தில் அச்சிடப்பட்டது” – அமைச்சர் அருண்ராஜ்
மருந்துக் கவர் விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் க.ஜி.அருண்ராஜ், தி.மு.க.வின் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

கரூரில் வழக்கமாக மத்திய சிறை மூலம் பெறப்படும் கவர்களே பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும், 2025 டிசம்பரில் கவர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டதால் ஈரோடு மாவட்ட அச்சகத் தொழில் கூட்டுறவு சங்கத்திடம் நான்கு லட்சம் கவர்கள் அவசரமாக அச்சிட ஆர்டர் கொடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்தக் கவர்கள் 2026 ஜனவரியிலேயே, தி.மு.க ஆட்சிக் காலத்தில் பயன்பாட்டுக்கு வந்ததாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
கோவையில் பயன்படுத்தப்பட்ட கவர்களும் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சிக் காலத்திலேயே நிர்வாக ரீதியாக அங்கீகரிக்கப்பட்டு அச்சிடப்பட்டவை என அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசு ஏற்கெனவே இருந்த வடிவமைப்பு மற்றும் மொழியில் எந்த மாற்றமும் செய்யவில்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும், விவகாரம் அரசின் கவனத்திற்கு வந்தவுடன் கரூர் மற்றும் கோவையில் அந்தக் கவர்களின் பயன்பாடு நிறுத்தப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
“ஒரு இந்தி வார்த்தைதான் பிரச்சினையா?” – பாஜக
இந்த விவகாரத்தில் பாஜக மாநிலத் தலைவர் ராமா சீனிவாசன் வேறுபட்ட கருத்தை முன்வைத்துள்ளார்.
தமிழ்நாட்டில் மருத்துவமனைகளின் தரம் குறித்து யாரும் கவலைப்படாமல், மருந்துக் கவரில் இருக்கும் ஒரு இந்தி வார்த்தை குறித்து மட்டும் பிரச்சினை எழுப்புவது ஏன் என்ற கேள்வியை அவர் எழுப்பியுள்ளார்.
இதன் மூலம், விவாதம் ஒரு மருந்துக் கவரைத் தாண்டி, தமிழ்நாட்டின் மொழிக் கொள்கை, நிர்வாகத் தேவைகள், மாநில உரிமை மற்றும் இந்தி பயன்பாடு என்ற பெரிய அரசியல் விவாதமாக மாறியுள்ளது.
இந்தி இடம்பெறுவது மட்டும்தான் பிரச்சினையா?
இந்த விவகாரங்களில் கவனிக்க வேண்டிய இன்னொரு அம்சமும் உள்ளது.
கோவை போன்ற தொழில் நகரங்களில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். அவர்களில் சிலருக்கு தமிழ் தெரியாமல் இருக்கலாம். அவர்களுக்கு மருந்து எடுத்துக்கொள்ளும் நேரத்தைப் புரிய வைப்பதற்காக பல மொழிகளில் வழிமுறைகளை வழங்குவது நடைமுறை ரீதியாக உதவக்கூடும் என மருத்துவமனை தரப்பு கூறுகிறது.
ஆனால் அதே நேரத்தில், தமிழ்நாட்டின் அரசு நிறுவனங்களில் எந்த மொழிகள் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதற்கான மாநிலத்தின் கொள்கையும் புறக்கணிக்கப்படக் கூடாது. எனவே, இந்த விவகாரத்தை வெறுமனே “இந்தி இருக்கலாமா, இருக்கக்கூடாதா?” என்ற ஒரே கேள்விக்குள் சுருக்கிவிட முடியாது.
மாநிலத்தின் இருமொழிக் கொள்கைக்கும், பொதுமக்களின் நடைமுறைத் தேவைகளுக்கும் இடையில் ஒரு தெளிவான நிர்வாக நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளதா என்பதுதான் முக்கியமான கேள்வி.
ஒவ்வொரு முறையும் சர்ச்சைக்குப் பிறகே நடவடிக்கையா?
சாத்தான்குளத்தில் இந்தி இடம்பெற்ற பலகை அகற்றப்பட்டது. அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். கரூர், கோவையில் இந்தி இடம்பெற்ற மருந்துக் கவர்கள் பயன்பாட்டிலிருந்து நிறுத்தப்பட்டன. தஞ்சாவூர் ரயில் நிலையத்திலும் இந்தி பெயர்ப்பலகைக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

திருச்சி ரயில்வே அலுவலகத்தில் ‘Kartavya Dwar’ என்ற பெயர் இடம்பெற்ற விவகாரமும் ஏற்கெனவே அரசியல் சர்ச்சையை உருவாக்கியிருந்தது. சம்பவங்கள் ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு பின்னணிகள் இருக்கலாம். ஆனால், வெவ்வேறு துறைகளில் இதுபோன்ற பிரச்சினைகள் மீண்டும் மீண்டும் எழுவது, அரசு நிறுவனங்களில் மொழிப் பயன்பாட்டை கண்காணிக்கும் நடைமுறை குறித்து கேள்வியை எழுப்புகிறது.
ஒரு பலகை வைக்கப்பட்ட பிறகு எதிர்ப்பு.
ஒரு மருந்துக் கவர் விநியோகிக்கப்பட்ட பிறகு சர்ச்சை.
அதன் பிறகுதான் நடவடிக்கை.
அப்படியானால், மொழிக் கொள்கையை முன்கூட்டியே கண்காணிக்கும் நிர்வாக அமைப்பு எங்கே?