அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

சௌதி சிறைக்குள் அனோஜன் மீது தாக்குதல் – நடந்தது என்ன?

சௌதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன்

நபிகள் நாயகத்திற்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளத்தில் கருத்து பகிர்ந்த குற்றச்சாட்டின் கீழ் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு, சௌதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் என்ற இலங்கை இளைஞன் மீது சிறைச்சாலைக்குள் வைத்து தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

சிவராசா அனோஜன் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமாம் சிறைச்சாலையின் சிறைக்கூடத்திலுள்ள சக கைதியொருவரினாலேயே இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவிக்கின்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் நாடாளுமன்றத்தில் நேற்று (ஆக்டோபர். 07) எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்த தாக்குதல் சம்பவத்தினால் அனோஜனின் முகத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அந்த காயங்கள் சக கைதியின் நகங்களின் கீறல்களினால் ஏற்பட்ட காயம் என்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

கத்தி உள்ளிட்ட வேறு எந்தவொரு ஆயுதங்களினாலும் அனோஜன் தாக்கப்படவில்லை என அமைச்சர் விஜித்த ஹேரத் உறுதிப்படக் கூறியுள்ளார்.

இதேவேளை, சிவராசா அனோஜனின் உயிருக்கு சிறைக்கூடத்தில் எந்தவித ஆபத்தும் இல்லை என்பதை சிறைச்சாலை அதிகாரிகள், இலங்கை தூதரக அதிகாரிகளிடம் உறுதிப்படுத்தியதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

மேலும், தாக்குதலின் பின்னர் சிவராசா அனோஜன், தமாம் சிறைச்சாலையின் வேறொரு சிறைக்கூடத்திற்கு மாற்றப்பட்டு, தற்போது பாதுகாப்பாக இருப்பதை அந்த நாட்டு சிறைச்சாலை அதிகாரிகள் இலங்கை தூதரக அதிகாரிகளிடம் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சௌதி விரைந்த சட்ட வல்லுநர்கள் குழு.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்

சிவராசா அனோஜனின் விடுதலை தொடர்பில் அந்த நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்யும் நோக்கில் இலங்கையிலிருந்து விசேட வழக்கறிஞர்கள் குழுவொன்று சௌதி அரேபியா நோக்கி விரைந்துள்ளது.

சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிஸ்டர் ஜெனரல் நவாலி, மூத்த ஜனாதிபதி வழக்கறிஞர்களான பைசர் முஸ்தபா மற்றும் உபுல் குமரபெரும ஆகிய மூவரடங்கிய வழக்கறிஞர்கள் குழுவொன்றே இவ்வாறு சௌதி அரேபியா நோக்கி விரைந்துள்ளது.

சௌதி அரேபியாவின் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட மரண தண்டனையை சவாலுக்கு உட்படுத்தி, எதிர்வரும் சில தினங்களில் உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுவொன்று தாக்கல் செய்யப்படவுள்ளது.

இலங்கையிலுள்ள சிறப்பு தேர்ச்சி பெற்ற வழக்கறிஞர்கள், அந்த நாட்டு சிறப்பு தேர்ச்சி பெற்ற வழக்கறிஞர்கள் குழுவுடன் கலந்துரையாடல்களை நடாத்தி, இந்த மேன்முறையீட்டை செய்யவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் குறிப்பிட்டார்.

கடந்த செப்டம்பர் மாதம் 17ம் தேதி அனோஜனுக்கு அந்த நாட்டு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பின்னணியில், அதனை சவாலுக்கு உட்படுத்தி, அந்த நாட்டு உச்ச நீதிமன்றத்தில் 30 நாட்களுக்குள் மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய வேண்டும்.

இந்த நிலையில், இன்னும் 10 நாட்களுக்குள் மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய வேண்டிய நிலையில், எதிர்வரும் ஓரிரு தினங்களில் மேன்முறையீட்டு தாக்கல் செய்ய முடியும் என விஜித்த ஹேரத் இன்று நம்பிக்கை வெளியிட்டார்.

இதேவேளை, தனது மகனை மரண தண்டனையிலிருந்து காப்பாற்றி, விரைவில் நாட்டிற்கு அழைத்து வரும் படி, அவரது தாயார் கோரிக்கை விடுக்கின்றார்.

தொடர்புடைய செய்தியை வாசிக்க :- சௌதியில் இலங்கை இளைஞனுக்கு வழங்கப்பட்ட சிறைத் தண்டனை, எவ்வாறு மரண தண்டனையானது?

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of R.A. Prasadh

R.A. Prasadh