பிரதமர் நரேந்திர மோடி அரசுத் தலைமைப் பொறுப்பில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். 2001ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி குஜராத் முதல்வராகப் பதவியேற்ற அவர், 2014ஆம் ஆண்டு நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்றார். இதையடுத்து, மாநில அரசியலில் தொடங்கிய அவரது நிர்வாகப் பயணம் தேசிய அளவில் தொடர்ந்தது.
குஜராத்தில் தொடங்கிய ஆட்சி:
2001 முதல் 2014 வரை குஜராத் முதல்வராக இருந்த மோடி, 2014 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பிரதமரானார். 2019 மற்றும் 2024 தேர்தல்களுக்குப் பின்னரும் அவர் பிரதமர் பதவியைத் தொடர்ந்து வகித்து வருகிறார்.இதன் மூலம் தொடர்ந்து மூன்று முறை பிரதமராகப் பதவியேற்ற தலைவராக மோடி உள்ளார்.
குஜராத் முதல்வராக இருந்த காலத்தில் நரேந்திர மோடி, சாலை, மின்சாரம், குடிநீர், கல்வி, தொழில் மற்றும் உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை முன்னெடுத்தார்.
பின்னர் 2014ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு, நாடு முழுவதும் வீடு, உள்கட்டமைப்பு, டிஜிட்டல் சேவைகள், ரயில் மற்றும் சாலை இணைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
நிர்வாக முயற்சிகள்:
குஜராத்தில் முதல்வராக இருந்தபோது அறிமுகப்படுத்தப்பட்ட நிர்வாக முயற்சிகளில் ஸ்வாகத் (SWAGAT )திட்டம் முக்கியமானது. பொதுமக்களின் குறைகளை நேரடியாகப் பெற்று அவற்றுக்கு தீர்வு காணும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இந்த முயற்சிக்கு 2010ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொது சேவை விருது வழங்கப்பட்டது. பின்னர் மத்திய அரசின் ப்ரகதி தளத்திலும் இதேபோன்ற கண்காணிப்பு மற்றும் குறைதீர்ப்பு அணுகுமுறை பயன்படுத்தப்பட்டது.
ஆட்சியில் முன்னிறுத்தப்பட்ட திட்டங்கள்:
மோடி தலைமையிலான மத்திய அரசின் காலகட்டத்தில் நிதிச் சேர்க்கை, வீட்டு வசதி, விவசாயிகளுக்கான நிதியுதவி, GST மற்றும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
UPI பயன்பாட்டின் விரிவாக்கம், மின்னணு மற்றும் பாதுகாப்பு உற்பத்தி, செமிகண்டக்டர் துறைக்கான நடவடிக்கைகள் ஆகியவையும் அரசின் முக்கிய முன்னெடுப்புகளாக உள்ளன. கொரோனா தடுப்பூசி உற்பத்தி மற்றும் சந்திரயான்-3 வெற்றியும் இந்த காலகட்டத்தின் முக்கிய நிகழ்வுகளாகக் குறிப்பிடப்படுகின்றன.
பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை:
தேசிய பாதுகாப்பில் 2016ஆம் ஆண்டு சர்ஜிக்கல் ஸ்டிரைக், 2019ஆம் ஆண்டு பாலகோட் வான்வழித் தாக்குதல் மற்றும் 2025ஆம் ஆண்டு ஆபரேஷன் சிந்தூர் ஆகியவை முக்கிய நிகழ்வுகளாக உள்ளன.சட்டப்பிரிவு 370 தொடர்பான நடவடிக்கை, ஒரே பதவி ஒரே ஓய்வூதியம், முப்படைகளுக்கான தலைமைத் தளபதி பதவி உருவாக்கம் ஆகியவையும் குறிப்பிடத்தக்க முடிவுகளாகும்.
சர்வதேச அளவில் ஜி20, பிரிக்ஸ் ,உலக தெற்குப் பகுதி நாடுகளுடனான இந்தியாவின் பங்களிப்பும் இந்த காலகட்டத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
நாடு முழுவதும் நிகழ்ச்சிகள்:
இந்த மைல்கல்லை முன்னிட்டு பாஜக சார்பில் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ‘சேவா சங்கல்ப் அபியான்’ மூலம் ரத்ததான முகாம்கள், தூய்மைப் பணிகள், நலத்திட்ட உதவிகள் மற்றும் கண்காட்சிகள் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்திலும் பிரதமர் மோடியின் நீண்டகால அரசுத் தலைமைப் பணியைப் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2047 நோக்கில் அடுத்த கட்டம்:
குஜராத் முதல்வராகத் தொடங்கிய மோடியின் நிர்வாகப் பயணம் தற்போது பிரதமர் பதவி வரை நீண்டுள்ளது. அடுத்தகட்டமாக, 2047ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை மத்திய அரசு முன்னிறுத்தி வருகிறது.
கோயில்களில் சிறப்பு வழிபாடு:

மோடியின் 25 ஆண்டுகால அரசுத் தலைமைப் பொறுப், டெல்லி சரோஜினி நகரில் உள்ள ஸ்ரீ விநாயக மந்திரில் அவர் நேரடியாக வழிபாடு செய்தார். இதனுடன், வாரணாசியின் காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் குஜராத்தின் வட்நகர் ஹட்கேஷ்வர் மகாதேவ் கோயிலிலும் 25 ஆண்டு நிறைவை முன்னிட்டு சிறப்பு வழிபாட்டு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.