அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

சௌதியில் இலங்கை இளைஞனுக்கு வழங்கப்பட்ட சிறைத் தண்டனை, எவ்வாறு மரண தண்டனையானது?

சௌதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன்

இலங்கையைச் சேர்ந்த சிவராசா அனோஜனுக்கு, சௌதி அரேபியா நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருந்த ஐந்து வருட கடூழிய சிறைத் தண்டனை எவ்வாறு மரண தண்டனையாக அதிகரிக்கப்பட்டது என்ற கேள்வி தற்போது பலரது மத்தியில் எழுந்த வண்ணம் உள்ளது.

நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பொன்று, மேன்முறையீடு செய்யப்படும் போது குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த தீர்ப்பு மேலும் வலுப்படுத்தப்பட்டு மரண தண்டனை வரை அதிகரிக்கப்பட்டமை குறித்து இலங்கை அரசாங்கம் தெளிவூட்டியுள்ளது.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், நாடாளுமன்றத்தில் இன்று விசேட உரையொன்றை நிகழ்த்தி, சௌதி அரேபியாவில் நடந்த வழக்கு விசாரணைகள் தொடர்பில் விளக்கமளித்திருந்தார்.

சிவராசா அனோஜன், தொழில் நிமிர்த்தம் 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 04ம் தேதி சௌதி அரேபியா நோக்கி பயணித்துள்ளார்.

இந்த நிலையிலேயே, சிவராசா அனோஜன் இந்த சர்ச்சைக்குள் சிக்குண்டுள்ளார்.

சிவப் பெருமானை நிந்திக்கும் வகையில் பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட கருத்தொன்றுக்கு நபிகள் நாயகத்தை தவறாக சித்தரித்து, அனோஜன் வெளியிட்ட பதிவே இவ்வாறு சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

இந்த நிலையில், குறித்த பேஸ்புக் பதிவு பாரிய சர்ச்சையை தோற்றுவித்த நிலையில், அவரை உடனடியாக நாட்டிற்கு அழைத்து வருமாறு, அவரது உறவினர்கள் கடந்த ஜுலை மாதம் முதலாம் தேதி வெளிவிவகார அமைச்சிடம் கடிதமொன்றை கையளித்துள்ளனர்.

இவ்வாறு எழுத்துமூலம் கடிதம் கையளிக்கப்பட்ட தினத்திலேயே, சௌதியிலுள்ள இலங்கை தூதரகம், சிவராசா அனோஜன் பணிப்புரிந்த நிறுவனத்திடம் விடயங்களை ஆராய்ந்துள்ளது.

சிவராசா அனோஜனை உடனடியாக தாய்நாட்டிற்கு அனுப்பி வைக்குமாறு, சௌதியிலுள்ள இலங்கை தூதரகம், அவர் பணிப்புரிந்த நிறுவனத்திடம் கோரியுள்ளது.

இவ்வாறான நிலையில், சிவராசா அனோஜன் அந்த நாட்டு போலீஸாரினால் கைது செய்யப்பட்டதாக அவர் பணிப்புரிந்த நிறுவனத்தின் மனிதவள பிரிவினால் ஜுலை மாதம் இரண்டாம் தேதி சௌதியிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சைபர் குற்றத்தின் ஊடாக சௌதி அரேபியாவில் நடைமுறையிலுள்ள சட்டம் மீறப்பட்டுள்ளதாகவும், மத நிந்தனை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியே அனோஜன் கைது செய்யப்பட்;டுள்ளதாக சௌதி அரேபியாவிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு அறிய கிடைத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் குறிப்பிடுகின்றார்.

இந்தநிலையில், ஜுலை மாமம் 27ம் தேதி மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைகள் நடாத்தப்பட்டுள்ளன.

சௌதி அரேபியாவின் சைபர் குற்றவியல் சட்டத்தின் 6ன் கீழ் ஒன்று பிரிவின் படி அனோஜன் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

எனினும், மத நிந்தனை செய்யப்பட்டுள்ளதாக அரச தரப்பு சட்டத்தரணியினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ், அந்த சந்தர்ப்பத்தில் அவர் குற்றவாளியாக அடையாளம் காணப்படவில்லை என விஜித்த ஹேரத் நாடாளுமன்றத்தின் சுட்டிக்காட்டியிருந்தார்.

விஜித்த ஹேரத் – வெளிவிவகார அமைச்சர் – இலங்கை

ஷரிஆ சட்டத்தின் கீழ் அனோஜனுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முதலிலேயே முன்வைக்கப்பட்டிருந்ததையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தார்.

எனினும், அந்த கோரிக்கையை அந்த நீதிமன்றம் ஏற்றுக்கொண்டிருக்கவில்லை எனவும், சைபர் குற்றத்தின் கீழ் மாத்திரமே தண்டனை வழங்கப்பட்டிருந்ததாகவும் அவர கூறுகின்றார்.

இதன்படி, கைது செய்யப்பட்ட நாள் முதல் ஐந்து வருட சிறைத் தண்டனையும், 3 மில்லியன் சௌதி ரியால் தண்டப் பணமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.

அத்துடன், குற்றத்தை செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட இலத்திரனியல் உபகரணத்தை அரசுடமைக்குமாறும், குறித்த சமூக வலைத்தள கணக்கை முடக்குமாறும் நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

தான் செய்த குற்றத்தை ஏற்றுக்கொண்டு, அதற்கான மன்னிப்பை கோரி, அனோஜனினால் வெளியிடப்பட்ட வீடியோவையும் சாட்சியமாக நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, அவர் குற்றம் செய்ததை அந்த வீடியோவின் ஊடாக நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த தீர்ப்பை அடுத்து, சிறை வைக்கப்பட்ட சிவராசா அனோஜனுடன், இலங்கை தூதரக அதிகாரிகள் தொலைபேசியூடாக கலந்துரையாடியுள்ளனர்.

தனக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தி, மேன்முறையீடு செய்யுமாறு அனோஜனினால், இலங்கை தூதரக அதிகாரிகளிடம் வாய்மூலம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விஜித்த ஹேரத் குறிப்பிடுகின்றார்.

இந்த விடயம் தொடர்பில் அனோஜனின் குடும்பத்தாருக்கு அறிவிக்கப்பட்ட பின்னணியில், அனோஜனின் விடுதலை தொடர்பில் மேன்முறையீடு செய்யுமாறு அவரின் தந்தையினால் வெளிவிவகார அமைச்சிடம் எழுத்துமூலம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, சௌதியிலுள்ள இலங்கை தூதரகத்துடன் நீண்ட நாட்களாக பணிப்புரியும் சட்ட ஆலோசனை நிறுவனமொன்றின் ஊடாக மேன்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு அனோஜன் சார்பில் மேன்முறையீடு செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில், அரச தரப்பு சார்பில் அனோஜனுக்கு எதிராக மற்றுமொரு மேன்முறையீடு செய்யப்பட்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சிவராசா அனோஜனுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையை அதிகரிக்குமாறும், ஷரிஆ சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் அரச தரப்பு சார்பில் மேன்முறையீடு செய்யப்பட்டிருந்ததை அமைச்சர் இதன்போது குறிப்பிட்டிருந்தார்.

குற்றவியல் சட்டத்தின் கீழ் அல்லாது, ஷரிஆ சட்டத்தின் கீழ் சிவராசா அனோஜனுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை சௌதி அரசாங்கம் சார்பில் முன்னிலையான அரச தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் முன்வைத்திருந்தனர்.

இந்த வழக்கு மீதான விசாரணைகள் கடந்த 17ம் தேதி இடம்பெற்ற போது, சிவராசா அனோஜனுக்கு மரண தண்;டனை வழங்கப்பட்டதாக சௌதி அரேபியாவிலுள்ள இலங்கை தூதரகம், 18ம் தேதி வாய்மூலம் வெளிவிவகார அமைச்சுக்கு அறிவித்திருந்ததாகவும் அவர் கூறுகின்றார்.

சிவராசா அனோஜன் சார்பில் முன்னிலையான சட்டத்தரணியினால், இந்த விடயம் தூதரகத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

”அவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. நாங்கள் சமர்பித்த மேன்முறையீட்டை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.” என அமைச்சர் விஜித்த ஹேரத் கூறுகின்றார்.

இதன்படி, ஷரிஆ சட்டத்தின் கீழ் இந்த தண்டனை தீர்மானிக்கப்பட்டுள்ளது என இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் குறிப்பிடுகின்றார்.

எனினும், நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ தீர்ப்பு அடங்கிய ஆவணங்கள் கிடைக்கும் வரை, அந்த தீர்ப்பை உறுதிப்படுத்த முடியாது என அனோஜன் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் இலங்கை தூதரகத்திற்கு அறிவித்திருந்தார்கள்.

இதன்படி. நீதிமன்றத்தின் தீர்ப்பு அடங்கிய அதிகாரப்பூர்வ ஆவணம், தூதரகத்திற்கு கடந்த 20ம் தேதி கிடைக்கப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, சிவராசா அனோஜனின் விடுதலை தொடர்பில் மேன்முறையீடு செய்வது தொடர்பில் ஆராய்ந்து அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.

மேலும், அனோஜனின் விடுதலை தொடர்பிலான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்றை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இவ்வாறு அமைக்கப்படவுள்ள குழுவில் அரச மற்றும் எதிர் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்குவதாகவும் வெளிவிவகார அமைச்சர் இதன்போது குறிப்பிட்டிருந்தார்.

சிறைத் தண்டனை வழங்கப்பட்ட இலங்கை தமிழ் இளைஞனுக்கு, மரண தண்டனை விதித்த சவுதி நீதிமன்றம்

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of R.A. Prasadh

R.A. Prasadh