யாழ்ப்பாணம் – செம்மணி – சித்துப்பாத்தி பகுதியிலுள்ள மனிதப் புதைக்குழியிலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 501ஆக அதிகரித்துள்ளது.
செம்மணி மனிதப் புதைக்குழியின் அகழ்வுப் பணிகள் 100 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இலங்கையில் 24 மனிதப் புதைக்குழிகள் இதுவரை அடையாளம் காணப்பட்டு அகழப்பட்டுள்ள நிலையில், நாட்டிலேயே மிகப் பெரிய மனிதப் புதைக்குழியாக செம்மணி . சித்துப்பாத்தி மனிதப் புதைக்குழி வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.
இந்த மனிதப் புதைக்குழியிலிருந்து இதுவரை 507 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 501 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி மனிதப் புதைக்;குழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 46வது நாள் அகழ்வுகள் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டன.
நேற்றைய தினம் நடாத்தப்பட்ட அகழ்வு பணிகளின் போது புதிதாக 8 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டதுடன், 7 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டன.
நேற்றைய தினம் நடாத்தப்பட்ட அகழ்வு பணிகளில் சிறுமி ஒருவரின் எலும்புக்கூடொன்று அடையாளம் காணப்பட்டு, தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சிறுமியின் எலும்புக்கூட்டுத் தொகுதிக்கு இருபுறத்திலும் இரு காப்புக்கள் மற்றும் ஊசி ஒன்றும் சான்றுப் பொருளாக தோண்டி எடுக்கப்பட்டு, நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நேற்றைய அகழ்வுகளின் போது எலும்பு எச்சங்கள் குவியல்களாகவே தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, குறித்த மனிதப் புதைக்குழியிலிருந்து இதுவரை குவியல்களாக தோண்டி எடுக்கப்பட்ட மனித எச்சங்களின் எண்ணிக்கை 40 என கூறப்படுகின்றது.
இதேவேளை, செம்மணி பகுதியில் எழுமாறாகத் தோண்டப்பட்ட இருவேறு குழிகளில், ஒரு குழியிலிருந்து மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, இந்த குழியின் அகழ்வுப் பணிகள் குறித்து அதிகாரிகள் எதிர்வரும் சில தினங்களில் தீர்மானமொன்றை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
செம்மணி மனிதப் புதைக்குழியுடன் தொடர்புடைய செய்தி :- இலங்கையில் தோண்ட தோண்ட வரும் மனித எலும்புக்கூடுகள் – தமிழர் பகுதியில் தொடரும் சர்ச்சை