இலங்கையில் அடையாளம் காணப்பட்ட 24 மனிதப் புதைக்குழிகளில் மிகப் பெரிய மனிதப் புதைக்குழியாக தற்போது அகழப்பட்டு வரும் யாழ்ப்பாணம் – செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைக்குழி அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைக்குழியிலிருந்து இதுவரை 454 எலும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், நேற்றைய தினம் வரை 440 எலும்பு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் ரனிதா ஞானராஜா தெரிவிக்கின்றார்.
இலங்கையில் உள்நாட்டு போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 17 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள போதிலும், போரினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் இன்று வரை காணப்படுகின்றன.
இந்த நிலையில், இலங்கையின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்வேறு மனிதப் புதைக்குழிகள் அடையாளம் காணப்பட்டு தோண்டப்பட்டிருந்தன.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைக்குழிகளில் செம்மணி மனிதப் புதைக்குழியிலிருந்து தோண்ட தோண்ட முறையற்ற விதத்தில் புதைக்கப்பட்ட சந்தேகத்திற்கிடமான மேலும் பல மனித எலும்புக்கூடுகள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு தொடர்ந்தும் அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றன.

செம்மணி மனிதப் புதைக்குழி என்றால் என்ன?
இலங்கையின் தமிழர்கள் அதிகளவில் செறிந்து வாழும் வடக்கு பகுதியின் யாழ்ப்பாணம் நகருக்குள் பிரவேசிக்கும் நுழைவாயில் பகுதியில் அமைந்துள்ள ஒரு இடமே செம்மணி பிரதேசமாகும்.
இந்த செம்மணி பகுதியில் 1999ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது அந்த இடத்தில் மனிதப் புதைக்குழியொன்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
வடப் பகுதியை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து யாழ்ப்பாணத்தை, இலங்கை அரசாங்கம் 1995ம் ஆண்டு கைப்பற்றியிருந்தது.
இந்த காலப் பகுதியில் யாழ்ப்பாணம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் காணாமல் போனதாக கூறப்படும் தமிழர்கள் செம்மணி பகுதியில் புதைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இவ்வாறு வெளியான தகவல்களின் அடிப்படையில் 1999ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளில் அந்த இடத்தில் மனிதப் புதைக்குழி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த மனிதப் புதைக்குழியின் அகழ்வு பணிகளில் பல எலும்பு கூடுகள் அந்த காலப் பகுதியில் மீட்கப்பட்டதுடன், அந்த நடவடிக்கை இடைநடுவில் கைவிடப்பட்டது.
இவ்வாறான பின்னணியில், செம்மணி பகுதியிலுள்ள சித்துபாத்தி இந்து மயான பூமியின் அபிவிருத்தி பணிகளுக்கான நடவடிக்கை கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் அந்த இடத்தில் முறையற்ற விதத்தில் புதைக்கப்பட்ட சடலங்களின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து, நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

செம்மணியில் தோண்டப்படுவது உண்மையாகவே மனிதப் புதைக்குழியா? அல்லது மயானமா?
செம்மணி – சித்துபாத்தி இந்து மயானம் என்ற போதிலும், அந்த இடத்தில் சடலங்கள் புதைக்கப்பட்டுள்ள விதம் முறையற்ற முறையில் காணப்படுவதாக வழக்கறிஞர் வி.எஸ்.நிரஞ்ஜன் தெரிவிக்கின்றார்.
”இதுவொரு இந்து மயானம். இந்;து மயானத்தில் சடலங்கள் புதைக்கப்படமாட்டாது. தகனம் செய்யப்படும். அவ்வாறு புதைக்கப்படுவதாக இருந்தாலும், அதற்கான முறையொன்று இருக்கின்றது. இந்த பக்கத்தில் தலை வைக்க வேண்டும். கையை எப்படி வைக்க வேண்டும். காலை எப்படி வைக்க வேண்டும். எப்படி வைக்க வேண்டும் என்ற முறையொன்று இருக்கின்றது. இது அப்படியில்லை. ஒரு சடலத்திற்கு மேல் இன்னுமொரு சடலத்தை வைத்து. ஒரு பக்கத்தில் தலை, மறுபக்கத்தில் மற்றைய தலை. கால்கள் மடிக்கப்பட்டு இருக்கின்றது, நீதிமன்றமே இதுவொரு குற்றப் பிரதேசமாக பிரகடனப்படுத்தியுள்ளது.”” என வி.எஸ்.நிரஞ்ஜன் குறிப்பிடுகின்றார்.
இதன்படி, யாழ்ப்பாணம் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய, அரசாங்கத்தின் உதவியுடன் சித்துபாத்தி மனிதப் புதைக்குழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
தலையற்ற மனித எலும்பு கூடுகள், அமர்ந்த நிலையிலுள்ள மனித எலும்பு கூடு, ஒன்றின் மேல் ஒன்றாக காணப்படும் மனித எலும்பு கூடு, சிறு குழந்தைகளின் மனித எலும்பு கூடு என பல்வேறு விதத்தில் முறையற்ற முறையில் புதைக்கப்பட்ட மனித எலும்பு கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டு வருகின்றன.

இலங்கையிலுள்ள மனிதப் புதைக்குழிகளின் விபரங்கள்.
இலங்கையில் சுமார் 20க்கு மேற்பட்ட மனித புதைக்குழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கடந்த வருடம் அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்திருந்த நிலையில், அந்த அறிக்கை வெளியிடப்பட்டதன் பின்னர் மேலும் மூன்று மனிதப் புதைக்குழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைக்குழி, கொழும்பு துறைமுக மனிதப் புதைக்குழி மற்றும் யாழ்ப்பாணம் – சிந்துப்பாத்தி மனிதப் புதைக்குழி ஆகியன கடந்த ஒரு வருட காலத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைக்குழியாக பதிவாகியுள்ளன.
01.யாழ்ப்பாணம் – துரையப்பா விளையாட்டு அரங்கம்
02.யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைக்குழி
03.யாழ்ப்பாணம் – மிருசுவில் மனிதப் புதைக்குழி
04.கிளிநொச்சி – மனிதப் புதைக்குழி
05.கிளிநொச்சி – கணேசபுரம் மனிதப் புதைக்குழி
06.முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு மனிதப் புதைக்குழி
07.முல்லைத்தீவு – 2 முல்லைத்தீவு மனிதப் புதைக்குழிகள்
08.மன்னார் – மன்னார் மனிதப் புதைக்குழி
09.மன்னார் – திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைக்குழி
10.குருநாகல் – நிகவரபிட்டிய மனிதப் புதைக்குழி
11.கம்பஹா – மினுவங்கொட வல்பிட்ட அரச பண்ணை
12.கம்பஹா – எஸ்செல்ல மனிதப் புதைக்குழி
13.கம்பஹா – வவுல்கெல்ல நித்தம்புல மனிதப் புதைக்குழி
14.கொழும்பு – கோகந்தர மனிதப் புதைக்குழி
15.கொழும்பு – பொல்கொட எரி மனிதப் புதைக்குழி
16.மாத்தறை – அக்குரஸ்ஸ வில்பிட்ட மனித புதைக்குழி
17.இறக்குவானை – சூரியகந்தை மனிதப் புதைக்குழி
18.மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி மனிதப் புதைக்குழி
19.மாத்தளை – மாத்தளை மருத்துவமனை மனிதப் புதைக்குழி
20.கண்டி – அங்கும்புர மனிதப் புதைக்குழி
21.முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைக்குழி
22.கொழும்பு துறைமுக மனிதப் புதைக்குழி
23.அரியாலை – சித்துபாத்தி மனிதப் புதைக்குழி

சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்த சித்துபாத்தி மனிதப் புதைக்குழி
யாழ்ப்பாணம் – செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைக்குழி விவகாரமானது, தற்போது சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட தூதுக்குழுவொன்று யாழ்ப்பாணம் – சித்துபாத்தி மனிதப் புதைக்குழி அகழப்பட்டு இடத்திற்கு இன்றைய தினம் விஜயம் செய்து, விடயங்களை ஆராய்ந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட தூதுக்குழு செம்மணி பகுதியை அண்மித்த தருணத்தில், வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டமொன்றை நடாத்தியிருந்தனர்.
உள்நாட்டு பொறிமுறையின் கீழ் விசாரணைகளை நிறுத்தி, சர்வதேச விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்திற்கு அரசியல்வாதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலரும் ஆதரவை வழங்கியிருந்தனர்.

மன்னார் மனிதப் புதைக்குழி மனித எச்சங்கள் அமெரிக்காவில் விசாரணை.
மன்னாரில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைக்குழியிலிருந்து எடுக்கப்பட்ட மனித எச்சங்களில் மாதிரிகள் ஆய்வுகளுக்காக அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள பீட்டா ஆய்வு கூடத்தில் பல வருடங்களுக்கு முன்னர் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
எனினும், அந்த மனித எச்சங்கள் ஐரோப்பிய ஆதிக்க காலத்திற்கு சொந்தமானவை என அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள பீட்டா ஆய்வு கூட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனித எச்சங்கள் கிறிஸ்த்துக்கு பின் 1477 – 1642ஆம் ஆண்டு காலப் பகுதிக்கு இடைப்பட்டவை என அந்த அறிக்கையின் ஊடாக அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், இந்த விசாரணைகள் தொடர்பிலும் தமிழர்கள் சந்தேகங்களை வெளியிட்டு வருகின்றனர். குறித்த மனித எச்சங்கள் கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்டு மாற்றப்பட்டு அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் தமிழர்கள் தமது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
இவ்வாறு முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை கடந்த கால அரசாங்கங்கள் நிராகரித்திருந்தன. இவ்வாறான நிலையிலேயே, தொடர்ச்சியாக அவ்வப்போது இவ்வாறான மனிதப் புதைக்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், மனிதப் புதைக்குழியை தோண்டும் நடவடிக்கைகளை உரிய முறையில் முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தொடர்ச்சியாக நிதியுதவிகளை வழங்கி வருகின்றது.

