“நான் மருத்துவராகி பலருக்கு ஏழை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஆசையோடு” பயணிக்கும் மாணவர்களின் கனவை முடக்கியது நீட் தேர்வுகள். பன்னிரெண்டாம் வகுப்பில் எத்தனை மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் அதெல்லாம் போதாது என்றும், இளங்கலை மருத்துவ படிப்பில் சேர வேண்டும் என்றால் நீட் தேர்வு கட்டாயம் வேண்டும் என்ற கொள்கையை மத்திய அரசு கொண்டு வந்தது. நீட் தேர்வு என்பது மாணவர்களின் கல்வியைப் பறிக்கும் செயல் என்றும், இதெல்லாம் நடைமுறைக்கு வந்தால் கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவுகள் அனைத்தும் கனவாகவே போய்விடும் என்பது போன்ற பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஆரம்பத்தில் இருந்தே தமிழகத்தில் நீட் தேர்விற்கு எதிராக அரசியல் கட்சிகள் குரல் கொடுத்து வந்தனர். நீட் தேர்வு நடத்தலாம் என்பதை மாநில கல்விக் கொள்கை முடிவெடுத்துக் கொள்ளலாம் என்பதை தீர்மானமாக நிறைவேற்றி மத்திய அரசின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனாலும் தற்போது வரை அதற்கு மத்திய அரசாங்கம் செவி சாய்க்கவில்லை.
இந்நிலையில் தான் டெல்லியில் நீட் தேர்வில் நடைபெற்ற வினாத்தாள் மோசடி மற்றும் நீட் தேர்வுகள் வேண்டாம் என்பதை முன்வைத்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். குறிப்பாக நீட் தேர்வு முறைகேடுகளுக்கு காரணமான மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் விலகக்கோரியும் போராட்டம் நடத்தப்பட்டது. இப்போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக நிறுத்த முயற்சி செய்தனர். அப்போது ஏற்பட்ட கலவரம் அனைவரையும் கிளர்ச்சி அடைய செய்தது. டெல்லியில் நடைபெற்ற போராட்டம் தற்போது நாடு முழுவதும் பெரும் போராட்டமாக மாறியுள்ளது. குறிப்பாக தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை, மதுரை, கோவை போன்ற மாவட்டங்களில் மாணவ அமைப்புகள் தங்களது போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
தற்போது இந்த போராட்டம் மாணவர்கள் மத்தியில் மட்டுமல்ல, சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சியினரிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்களும் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக தங்களது கருத்துக்களை முன்வைக்கின்றனர்.
திமுக தலைவர் மு.க ஸ்டாலின்:
நீட் தேர்வை ஒழிப்பதற்கான சரியான நேரம் என்றும், சுமையைக் குறைத்தல், வணிகமயமாக்குத்தலைத் தவிர்த்தல், கல்வி தரத்தை மேம்படுத்துதல் என்ற வாக்குறுதிகளோடு அறிமுகப்படுத்தப்பட்ட நீட் தேர்வுகள் அதன் தரத்தைக் குறைத்து விட்டது. நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக கரப்பான்பூச்சி ஜனதா தளம் கட்சியினர் மற்றும் மாணவர்கள் ஆரம்பித்த போராட்டம் தற்போது வலுப்பெற்றுள்ளது என தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார். தற்போது நடைபெறும் போராட்டத்திற்கு பிறகாவது மத்திய அரசு ஆலோசனை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சியினர் மட்டுமல்ல நீட் தேர்விற்கு எதிராக அமீர், பா. ரஞ்சித், வெற்றிமாறன், பாலிவுட் நடிகர் சல்மான் போன்ற சினிமா திரையுலக பிரபலங்களும் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.
மாணவர்களின் போராட்டம் வெற்றி பெறுமா?
நாடு முழுவதும் மாணவர்களின் போராட்டம் பெரும் எழச்சியை ஏற்படுத்தி வரக்கூடிய சூழலில், நீட் தேர்வு ரத்தாகுமா? என்பது கேள்விக்குறி தான். ஒருவேளை ஜல்லிக்கட்டு போராட்டம் போன்று நீட் தேர்வு முறைகேடு குறித்த மாணவர்களின் போராட்டம் பொதுக் கவனத்தை ஈர்த்து கொள்கை விவாதத்தை முன்னெடுக்க உதவலாம். மேலும் பல மாநிலங்கள் ஒரே கோரிக்கையை முன்வைத்து, பல தரப்பட்ட அரசியல் மற்றும் பொதுமக்களின் ஆதரவு உருவானால் கட்டாயம் மாற்றங்கள் ஏற்பட்டு பரிசீலிக்கப்பட வாய்ப்புகள் இருக்க வாய்ப்புள்ளது. ஆனால் நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா? என்பது நீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் மத்திய அரசின் கொள்கை முடிவுகள் மற்றும் நாடாளுமன்ற நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணிகளைப் பொறுத்து நடவடிக்கை எடுக்க வாய்ப்புகள் பல உள்ளது.