இலங்கையில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் சடுதியாக அதிகரித்துள்ள நிலையில், நாடு முழுவதும் அச்ச நிலைமை தோன்றியுள்ளது.
இதன்படி, இந்த ஆண்டின் இதுவரையான காலம் வரை டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளதென் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவிக்கின்றது.
2025ம் ஆண்டின் முதல் 7 மாத காலத்தில் டெங்கு காய்ச்சலினால் 29 பேர் மாத்திரமே உயிரிழந்திருந்ததாகவும் அந்த பிரிவின் தரவுகள் தெரிவிக்கின்றன.
2025ம் ஆண்டு 0.05 வீதமான காணப்பட்ட டெங்கு மரண விகிதம், இந்த ஆண்டு 0.07 விகிதமாக அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

இந்த நிலையில், இலங்கை முழுவதும் டெங்கு காய்ச்சல் சடுதியாக பரவி வருகின்ற பின்னணியில், அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு சுகாதார பிரிவு பாரிய பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றது.
டெங்கு காய்ச்சலினால் இந்த ஆண்டின் முதல் 29 வாரங்களில் 76034 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2025ம் ஆண்டின் முதல் 29 வாரங்களில் 32318 பேர் மாத்திரமே பாதிக்கப்பட்டிருந்ததாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு குறிப்பிடுகின்றது.
டெங்கு காய்ச்சலினால் அதிகளவிலான பாதிப்புக்கள் கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளன.
இதன்படி, மேல் மாகாணத்தில் 41236 பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 26 பேர் மேல் மாகாணத்தில் உயிரிழந்துள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் 13 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 10 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 3 பேரும் டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு குறிப்பிடுகின்றது.
அத்துடன், தென் மாகாணத்தில் 11950 பேரும், மத்திய மாகாணத்தில் 6603 பேரும், சபரகமுவ மாகாணத்தில் 6540 பேரும், வடமேல் மாகாணத்தில் 3781 பேரும், கிழக்கு மாகாணத்தில் 3397 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்கள் அதிவுயர் டெங்கு ஆபத்தை கொண்ட மாவட்டங்களாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், மாத்தறை, கண்டி, களுத்துறை, இரத்தினபுரி, காலி, ஆகிய பகுதிகளில் அதிக ஆபத்தான பகுதிகள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன், மேலும் சில பகுதிகள் மிதமான ஆபத்தை கொண்ட பகுதிகள் என குறிப்பிடப்பட்டுள்ளன.
2024 மற்றும் 2025ம் ஆண்டுகளில் டெங்குவினால் மிகவும் குறைவான பாதிப்புக்களை எதிர்நோக்கிய இலங்கை, இந்த ஆண்டு பாரிய அபாயத்தை எதிர்நோக்கியுள்ளமை தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் தரவுகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
வீட்டுத் தோட்டம் உள்ளிட்ட தமது சுற்று சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறு சுகாதார பிரிவினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.
