சீனா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற ஒரு சில நாடுகளில் மட்டும் உள்ள ஹைட்ரஜன் ரயில் சேவையானது, இந்தியாவில் முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடியால் இன்று திறந்து வைக்கப்பட்டது. பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த இந்த ரயிலானது முதல் முறையாக ஹரியாணா மாநிலம் ஜிந்த்- சோனிபர் இடையே இயக்கப்படுகிறது. சுமார் 1200 கிலோவாட் திறன் கொண்ட ஹைட்ரஜன் எரிபொருள் மின்கல உந்துவிலை அமைப்பின் மூலம் இயங்கும் இந்த ரயிலானது, மணிக்கு 75 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் செல்லும் வகையில் சென்னை பெரம்பூர் ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை (ஐசிஎப்- ICF) தயாரித்துள்ளது. சுமார் 89 கிமீ தொலைவை 2 மணி நேரத்தில் கடக்கும் என இந்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது. தற்போது 10 பெட்டிகளுடன் சுமார் 2600 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டதாக இந்த ரயில் சேவை அமைந்துள்ளது.
ஹைட்ரஜன் ரயில் சேவை எப்படி இயங்குகிறது?
பொதுவாக இந்திய ரயில்வே துறையின் மூலம் இயக்கப்படும் ரயிலானது மேல்நிலை மின்கம்பிகளில் இருந்து மின்சாரத்தைப் பெறும் வழக்கமான மின்சார ரயில்களைப் போலில்லை. மாறான தற்போது இயக்கப்படும் ஹைட்ரஜன் ரயிலானது ஹைட்ரஜன் ஆக்ஸிஜன் வேதிவினை மூலம் ரயிலுக்குள்ளேயே மின்சாரத்தை உற்பத்தி செய்து பயன்படுத்தும். ஹைட்ரஜன் கசிவுகள், வெப்பம், தீப்புழம்புகள், புகையை முன்கூட்டிக் கண்டறியும் பன்முகப் பாதுகாப்பு அம்சங்களுடன் பாதுகாப்பான ரயில் என்ற சிறப்பம்சங்களோடு ஹைட்ரஜன் ரயில் இயக்கப்படுகிறது. கரியமில வாயு வெளியீடின்றி செயல்படும் என்பதால் தூய எரிபொருள் என்ற சிறப்பம்சங்களையும் இந்த ரயில் பெறுகிறது.
தற்போது 99 சதவீதத்திற்கும் அதிகமான அகல ரயில் பாதை வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டுள்ளது. மேல்நிலை மின்சாரக் கம்பிகள் மூலம் செயல்படும் மின்சார ரயில்களைப் போல் அல்லாமல் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கக் கூடிய ரயில், ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனுக்கு இடையே ரசாயன வினை மூலம் ரயிலிலேயே மின்சாரத்தை உற்பத்தி செய்யும். இதில் நீராவி துணைப் பொருளாக மட்டுமே வெளியேறும்.