தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் கொண்டு வரப்பட்டது. கடந்த 2021 ல் ஆட்சி பொறுப்பேற்றவுடன் அரசு நகரப்பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் என்ற திட்டத்திற்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கையெழுத்திட்டார். இத்திட்டத்தின் படி தமிழகத்தில் உள்ள நகரப் பேருந்துகளில் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் எவ்வித கட்டணமின்றி பயணிக்கலாம் என அறிவித்திருந்தது. இந்தத் திட்டம் பெண்களின் அன்றாடப் போக்குவரத்துச் செலவைக் குறைத்து, வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டது.
அன்றைய நாளிலிலுருந்து பெண்கள் தங்களுக்கான மற்றும் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கு தாங்களே நகரப் பேருந்துகளில் பயணிக்க ஆரம்பித்தனர். இதோடு பணிக்குச் செல்லக்கூடிய பெண்களுக்கு உபயோகமாக இருந்தது. இத்திட்ட தொடக்கத்தில் மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் என்று அழைக்கப்பட்டது. நகர பேருந்துகளில் இலவச பயணமானது பெண்களின் வாழ்க்கையில் புதிய விடியலை உருவாக்கும் பயணமாக அமையும் என்ற நோக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு மகளிர் விடியல் பயணம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அன்றைய நாளிலிருந்து இதுவரை மகளிர் விடியல் பயணம் என்ற பெயருடன் செயல்பட்டு வந்த பேருந்தின் பெயரில் விடியல் என்ற வார்த்தையை நீக்கி மகளிர் பயணம் என பெயர் மாற்றத்தை தவெக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பையடுத்து தமிழகத்தில் பெரும்பாலான நகர பேருந்துகளில் மகளிர் பயணம் என்று மாறிவிட்டது.
மகளிர் பயணம் பெயரால் ஏற்பட்ட சர்ச்சை…
கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்ப்டட திட்டங்களில் பெயரை இப்படி மாற்றி இருப்பது அரசியல் அடையாளங்களை அழிக்கும் நோக்கம் தான். வேறு எதுவும் இல்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. இதோடு திமுக அரசு பொண்டு வந்த பெயரை வேண்டும் என்றாலும் மாற்றிக் கொள்ளலாம். வரலாற்றை மாற்ற முடியாது எனவும் நல்ல திட்டங்களின் பெயர் மாற்றத்திற்குச் செலவிடும் நேரத்தை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்திட செலவழிக்கலாம் என திமுக குற்றம் சாட்டியுள்ளது. சொல் முந்தைய திமுக ஆட்சியைக் குறிக்கும் வார்த்தையாகப் பார்க்கப்படுவதால், தனிப்பட்ட அரசியல் அடையாளங்களை அரசுத் திட்டங்களில் தவிர்க்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தவெக அமைச்சர்கள் பதில்:
மகளிர் பயணம் என நகரப் பேருந்துகளில் பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் விமர்ச்சிக்கும் சூழலில் இதுக்குறித்து பேசிய தவெக அமைச்சர் பார்த்திபன், மகளிர் பயணம் தானே அது, மகளிர் பயணம், மகளிருக்கான பயணம் தான், அது தான் மகளிர் பயணம் என போட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் அதில் என்ன இருக்கிறது? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பெயர் மாற்றத்தை மட்டும் பார்க்காதீர்கள், தமிழ்நாடே திரும்பி பார்க்கக்கூடிய வகையில் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று வரவுள்ளதாகவும் அமைச்சர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.