தமிழக சட்டமன்றத் தேர்தலில் மயிலம் தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் வெற்றி பெற்றத்தையடுத்து, தன்னுடைய மாநிலங்களை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். முன்னதாக கர்நாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஜார்கண்ட மாநிலங்களிலும் ராஜ்யசபா எம்பி பதவி காலியாக உள்ளது. நாடு முழுவதும் காலியாக உள்ள 24 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வருகின்ற 18 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
தமிழகத்தில் காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ளது தமிழக வெற்றிக் கழகம். இந்த சூழலில் மாநிலங்களவை இடைத்தேர்தலில் தவெக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் முன்னதாக முதல்வர் ஜோசப் விஜய்யை காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் சந்தித்து மாநிலங்களவை உறுப்பினர் பதவியை காங்கிரசுக்கு ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து தமிழக வெற்றிக்கழகம் தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு உறுப்பினர் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்ரவர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார். இதே போன்று கர்நாடகத்தில் மல்லிகார்ஜூன கார்கே, பவன் கேரா, மன்சூர் அலி கான் வே்ட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மத்திய பிரசேதத்தில் மீனாட்சி நடராஜன், ராஜஸ்தானில் நீரஜ் டாங்கி, ஜார்க்கண்டில் பிரணவ் ஜா ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளாதாக காங்கிரஸ் மேலிடம் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ள பிரவீன் சக்ரவர்த்தி யார்? இவரின் அரசியல் வாழ்க்கை என்ன? என்பது குறித்த விரிவான தகவல்களை இங்கே அறிந்துக் கொள்வோம்.
பொருளாதார வல்லுநர் பிரவீன் சக்ரவர்த்தி:
சென்னையைச் சேர்ந்த பிரவீன் சக்ரவர்த்தி பிட்ஸ் பிலானி பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றவர். அதன் பிறகு அமெரிக்காவின் புகழ்பெற்ற பென்சில்வேனியா பல்கலைக்கழத்தின் வஹார்டன் பள்ளியில் எம்.பி. ஏ பட்டம் பெற்றார். இதையடுத்து மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்களிலும் பணியாற்றியுள்ளார்.
பின்னர் அரசியலிலும் கால்பதித்தார். ஆம் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியின் போது மத்திய திறன் மேம்பாட்டு திட்டத்தில் பணியாற்றினார். இதையடுத்து 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்துடன் இணைந்து காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவிலும் பணியாற்றினார். இவ்வாறு அரசியலில் அதிக ஆர்வம் இருந்தமையால் அரசியல் சார்ந்த படிப்புகளையும் முடித்து பட்டம் பெற்றுள்ளார். ராகுல் காந்தியின் நண்பர் என்பதால் அரசியலில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற தன்னுடைய விருப்பத்தைத் தெரிவித்திருந்தார். பின்னர் 2019 ஆம் தேர்தலில் முக்கிய பங்காற்றினார். ஆனாலும் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதமாக அமையவில்லை. ஆனாலும் ராகுல் ஒருபோதும் எந்த இடத்திலும் பிரவீன் சக்ரவர்த்தியைக் கொடுத்ததில்லை என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இதை நிரூபனம் செய்யும் விதமாக தமிழகத்தில் தவெக மற்றும் காங்கிரஸ் இணைவதற்கு முக்கிய காரணமாக இருந்தார் பிரவீன் சக்ரவர்த்தி. பதவியேற்பு விழாவின் போது கூட பிரவீன் சக்ரவர்த்தியை தன்னுடைய நண்பர் என விஜய் குறிப்பிட்டிருந்தார். அவருக்கே எம்பி பதவியைக் கொடுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.