தமிழ்நாட்டை பல ஆண்டுகளாக ஆட்சி செய்த மாபெரும் கட்சியான அதிமுக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப்பின் தொடர் 11 படுதோல்விகளைச் சந்தித்துள்ளது. இன்று கட்சியே இரண்டாக பிளவுபட்டுக் கிடப்பதால், அதிமுகவின் எதிர்காலம் என்னவாகும்? கட்சி உயிர்த்தெழுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ்நாடு அரசியலில் அ.தி.மு.க
தமிழ்நாடு அரசியலில் தவிர்க்க முடியாத கட்சியாக அ.தி.மு.க. உள்ளது. தி.மு.க.வில் இருந்து வெளிவந்த எம்.ஜி.ஆர். 1972ல் அ.தி.மு.க.வைத் துவங்கி 1977ல் சட்டப்பேவைத் தேர்தலைச் சந்தித்து தமிழ்நாட்டின் முதல்வரானார். அவரின் மறைவுக்குப் பின் கட்சியை முழுவதுமாக ‘டேக் ஓவர்’ செய்தார் ஜெயலலிதா.
தேர்தல்களில் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்து ஜெயலலிதா முதல்வராக இருந்த காலங்களில் அவரது நிழல் போல் இருந்த சசிகலா ஆட்சி அதிகாரத்திலும் நிழல் தலைவராகவே செயல்பட்டார். குறிப்பாக அவரது கணவர் நடராஜனும் சசிகலாவின் உறவினரான டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோரும் கட்சிக்குள்ளும் ஆட்சியிலும் மிகுந்த செல்வாக்குடன் கோலோச்சினர்.
இருந்தும் அவர்கள் ஜெயலலிதாவுக்கு வழக்கு நெருக்கடிகள் ஏற்பட்டு சிறை செல்ல நேர்ந்த போது, முதல்வர் பொறுப்பை ஏற்கவில்லை. அரசவை நிலைய வித்துவான் போல், அ.தி.மு.க. அவசர கால முதல்வராக ஓ.பன்னீர்செல்வமே தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு அந்த வாய்ப்பைப் பெற்றுத்தந்தது சசிகலா அன்ட் கோ தான்.

இந்நிலையில், ஜெயலலிதாவின் மறைவும், சசிகலாவின் கணவர் நடராஜனின் மறைவும் சொத்துக் குவிப்பு வழக்கும் சசிகலாவைத் தடுமாறச் செய்தது. எப்போதும் நம்பிய பன்னீர்செல்வத்தை நம்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக உணர்ந்த சசிகலா, எடப்பாடி பழனிசாமியிடன் கட்சியையும் ஆட்சியையும் ஒப்படைத்தார்.
அப்படி, தமிழ்நாட்டின் திடீர் முதல்வரான பழனிசாமி, ஆட்சி அதிகாரத்தைப் பிடித்த சில மாதங்களிலேயே தனக்கு முதல்வர் பதவியையும் கட்சியையும் கொடுத்துச் சிறை சென்ற சசிகலாவையும், டி.டி.வி.தினகரனையும் கட்சியில் இருந்து வெளியேற்றினார். அப்படியே படிப்படியாக சசிகலா விசுவாசிகள் ஓரங்கப்பட்டு, ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியான பன்னீர்செல்வத்தையும் பழனிச்சாமி கூட்டம் ஓரங்கட்டி வெளியேற்றியது. ஜெயலலிதா மறைவு முதல் இன்று வரையில் பழனிச்சாமியின் கட்டுப்பாட்டில் அ.தி.மு.க இருக்கிறது.
2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் வாக்குச்சேகரிப்பின் போது பேசிய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ‘‘சிறந்த ஆட்சியைக் கொடுப்பது மோடியா? இல்லை இந்த லேடியா?’’ எனப்பேசி, பா.ஜ.க.வைக் கடுமையாகச் சாடினார். இப்படி பா.ஜ.க.வைத் தன் கடுமையான விமர்சனங்கள் மூலம் தொலைத்தெடுத்த அ.தி.மு.க.வின் ஆலமரமான ஜெயலலிதா மறைந்த பின், அ.தி.மு.க.வை பா.ஜ.க.விடம் ஒட்டுமொத்தமாக அடகு வைத்ததைப்போலான நிலையைப் பழனிசாமி உருவாக்கியதாக அ.தி.மு.க. தொண்டர்களே பேசத் தொடங்கினர்.
அதுமட்டுமின்றி, கட்சிக்குள் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி போன்ற கொங்கு வெள்ளாள கவுண்டர்களின் தலையீடு அதிகானதுடன், எடப்பாடி பழனிச்சாமி தான் சார்ந்த கொங்கு வெள்ளாள கவுண்டர்களை மட்டுமே பவர் சென்டர்களாக வைத்திருந்ததால், ‘கவுண்டர்கள் பிடியில் அ.தி.மு.க சிக்கவிட்டது’ என்ற விமர்சனத்தையும் எதிர்கொண்டார்.
தொடர்ந்து பத்து தோல்விகளை சந்தித்த அ.தி.மு.க
ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு, பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்த பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. சந்தித்த முதல் தேர்தல், ஜெயலலிதா இறப்பால் வெற்றிடமான சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு, 2017ல் நடந்த இடைத்தேர்தல் தான். இதில், அப்போது ஆளும்கட்சியாக இருந்த அ.தி.மு.க.வின் வேட்பாளர் மதுசூதனனை, சுயேட்சியாகக் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட டி.டி.வி.தினகரன் 40,707 வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
ஆளும்கட்சியாக இருந்தபோதிலும் அ.தி.மு.க. தோல்வியைத் தழுவியது. அதன்பின் 2019ல் நடந்த மக்களவைத் தேர்தலில், அ.தி.மு.க. ஆளும்கட்சியாக இருந்தபோதிலும் தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளையும் எதிர்க்கட்சியான தி.மு.க. கைப்பற்றியது. இது பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.விற்கு மாபெரும் தோல்வியாக அமைந்தது. 2019ல் நடந்த 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும், 2020ல் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் படுதோல்வியைச் சந்தித்தது பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அதன்பிறகு நடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் படுதோல்வியைத் தழுவி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., ஆட்சியைத் தி.மு.க.விடம் பறிகொடுத்தது. இந்தத் தொடர் தோல்விகள் அ.தி.மு.க. தொண்டர்களும், நிர்வாகிகளும் அக்கட்சியின் தலைமை மீது வைத்திருந்த நம்பிக்கையைத் தகர்த்தன.
அதன்பின், எதிர்க்கட்சித் தலைவராக பழனிசாமி எதிர்கொண்ட, 2021ல் நடந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2022 நகர்ப்புற உள்ளாட்சி, 2023 ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல், 2020 கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தல் என, அடுத்தடுத்து நடந்த ஒன்பது தேர்தல்களிலும் தொடர் தோல்வியைச் சந்தித்துள்ளார்.
பத்தாவது தோல்வியாக 2024ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் மீண்டும் திமுக கூட்டணி 39 இடங்களில் வெற்றி பெற்று அ.தி.மு.கவிற்கு மரண அடியை கொடுத்திருந்தது.
இப்படி தொடர்ச்சியாக பத்து தோல்விகளைச் சந்தித்த எடப்பாடி பழனிச்சாமியை அரசியல் களத்தில் பலரும் ‘பத்து தோல்வி பழனிச்சாமி’ என கேலி செய்யும் நிலை ஏற்பட்டு, அ.தி.மு.க எனும் மாபெரும் இயக்கம் தன் அரசியல் வரலாற்றிலேயே அதிக தோல்விகளைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டது. அ.தி.மு.க தொண்டர்கள் இந்தத் தோல்விகளைக் கண்டு கலங்கியிருந்தனர்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் படுதோல்வி!
பல தோல்விகளைச் சந்தித்திருந்தாலும் தொடர்ச்சியாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க தேர்தல்களில் ஓயாது ஓடியோடி பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தது.
நடப்பு சட்டப்பேரவைத் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி அ.தி.மு.கவை மீட்டுப்பார் என்ற எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருந்தது. இந்த தேர்தலுக்காக ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் மாநிலம் முழுவதிலும் சுற்றுப்பயணம் சென்று, மக்களைச் சந்தித்து தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

பட்டிதொட்டியெல்லாம் அ.தி.மு.க பிரச்சாரம் செய்தது, தினமும் பேச்சு பேட்டி அறிக்கை என தி.மு.க அரசுக்கு எதிராக தீவிர பிரச்சாரம் செய்து தான் இந்தத்தேர்தலை எதிர்கொண்டது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க; இந்த முறை பா.ஜ.கவுடன் மட்டுமின்றி, டி.டி.வி தினகரன், பாட்டாளி மக்கள் கட்சியும் அ.தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றன.
ஆனால், தேர்தல் முடிவுகளோ அ.தி.மு.கவிற்கு பேரடியாகத்தான் இருந்தது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் அ.தி.மு.க வெறும் 47 இடங்களில் வென்றது, பாட்டாளி மக்கள் கட்சி 4 இடங்கள் மற்றும் பா.ஜ.க வெறும் 1 இடத்தில் வெற்றி பெற்றது.
ஆளும் தி.மு.க 59 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் ஐந்து இடத்திலும், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மா.கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் தலா இரண்டு இடங்களின் வென்றது. யாரும் எதிர்பாராத வகையில், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களின் வெற்றி பெற்றது.
தவெகவிற்கு ஆதரவளித்த சி.வி.சண்முகம், வேலுமணி ‘குரூப்’
ஆட்சியமைக்க பெரும்பான்மையாக 118 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், விஜய் முதல்வராகி ஆட்சியமைக்க 11 எம்.எல்.ஏக்கள் தேவைப்பட்டனர். திமுக கூட்டணியில் நின்று வெற்றி பெற்ற காங்கிரஸ் முதன் முதலாக தனது 5 எம்.எல்.ஏக்களுடன் தவெகவிற்கு ஆதரவளிக்க அவர்களுக்கு 6 எம்.எல்.ஏக்கள் தேவைப்பட்டனர்.
அதன்பின், முன்னாள் முதல்வர் ஸ்டாலினுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு, ‘தி.மு.க கூட்டணியில் தான் தொடர்கிறோம். ஆனால், குடியரசுத்தலைவர் ஆட்சி வராமல் தடுக்க தவெகவிற்கு ஆதரவளிக்கிறோம்,’ எனக்கூறிய, விசிக, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தவெகவிற்கு ஆதரவளித்தது. மொத்தம் 120 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன், விஜய் முதல்வராக பொறுப்பேற்றார்.
இதற்கிடையில், திமுக – அதிமுக கூட்டணியில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகிறார், திமுகவின் ஆதரவைப் பெற்றது அதிமுக என்றெல்லாம் அரசியல் களத்தில் பேசப்பட்டது.
இப்படியான நிலையில் தான், சட்டப்பேரவையில் Floor Test எனப்படும் பெரும்பான்மை நிரூபிக்கும் முயற்சியில், தவெகவிற்கு ஆதரவளிப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையிலான 25 அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் அறிவித்ததுடன், முதல்வர் விஜயையும் அவர்கள் சந்தித்து பூங்கொத்து கொடுத்து பாராட்டினர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
— SP Velumani – Say YES to AIADMK (@SPVelumanicbe) May 12, 2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள், இன்றைய தினம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக மூத்த நிர்வாகிகளை… pic.twitter.com/IMO8xKoUpC
அரசியல் களத்தில் யாரும் எதிர்பாராத இந்த சம்பவங்களால், அ.தி.மு.வினர் அதிர்ச்சிக்குள்ளானதுடன், எடப்பாடி பழனிச்சாமியை இச்சம்பவங்கள் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. ‘குதிரை பேரம் நடத்தி விஜய் ஆட்சியமைக்க முயற்சிக்கிறார், அமைச்சர் பதவி ஆசையில் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் சட்ட விரோதமாக விஜய்க்கு ஆதரவளிக்கின்றனர்,’ என கடுமையாக சாடியிருந்தார்.
நேற்று நடந்த Floor Testல், அதிமுகவில் 22 எம்.எல்.ஏ.க்கள் தவெகவை எதிர்த்தும், 25 எம்.எல்.ஏ.க்கள் ஆதரித்தும் வாக்களித்தனர். வாக்கெடுப்பில் மொத்தம் 171 உறுப்பினர்கள் பங்கேற்ற நிலையில், 144 எம்.எல்.ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். தீர்மானத்தை எதிர்த்து 22 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்த நிலையில், 5 பேர் நடுநிலை வகித்தனர். பா.ம.க, பாஜ.க நடுநிலை வகித்தது.
கட்சிப்பதவிகளில் இருந்து நீக்கம்…
அ.தி.மு.க தற்போது எடப்பாடி பழனிச்சாமி அணி Vs சி.வி.சண்முகம் அணி என இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில், தவெகவிற்கு ஆதரவளித்த 25 எம்.எல்.ஏக்களை அ.தி.மு.கவின் பொதுச்செயலாளர் என்ற முறையில், கட்சியில் அனைத்து பதவிகளிலும் இருந்து நீக்கியுள்ளார் எடப்படி பழனிச்சாமி.
இத்தனை ஆண்டுகளாக தனது பவர் சென்டர்களாக தன்னுடன் இருந்தவர்களே தற்போது பதவி, பவர் கிடைக்குசென்ற ஆசையில் தன் முதுகில் குத்திவிட்டு துரோகம் செய்துள்ளதாக புலம்பி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி.
அமைச்சர் பதவிக்காக அதிமுகவிற்கு சிலர் துரோகம் இழைத்துள்ளனர்.
— AIADMK IT WING – SayYesToWomenSafety&AIADMK (@AIADMKITWINGOFL) May 13, 2026
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் pic.twitter.com/l61OEO8gTY
1985ம் ஆண்டு, 52வது சட்டத்திருத்தம் மூலம் கொண்டு வரப்பட்ட கட்சி தாவல் தடை சட்டம் 10வது அட்டவணையின் கீழ், தான் கட்சியின் பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில், கொறடாவை நியமித்து தவெகவிற்கு ஆதரவளித்த அ.தி.மு.க எம்.எல்.ஏக்களின் பதவிகளைப் பறிக்கும் முயற்சியைத் துவங்கியுள்ளார் பழனிச்சாமி.
மறுபக்கம் சி.வி.சண்முகம் தலைமையிலான குழுவினர், எடப்பாடி பழனிச்சாமியின் பதவியை பறிக்க வேண்டுமெனவும், அ.தி.மு.க எனும் மாபெரும் இயக்கத்தின் தொடர் தோல்விகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே காரணம் என்றும் பேசி வருகிறார்.
2021-ல் கழகம் ஆட்சிப் பொறுப்பை இழந்தது முதல் இன்றுவரை, இந்த இயக்கத்தை கட்டிக் காப்பதற்காக பல்வேறு போராட்டங்களை நான் சந்தித்து வருவதை, கழகத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் நன்கு அறிவார்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்ற உன்னத… pic.twitter.com/gMkAj4vPzQ
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) May 14, 2026
தற்போது, அ.தி.மு.க இரண்டாக பிளவுபட்டிருக்கும் நிலையில், ஏற்கனவே அக்கட்சி தொடர் தோல்விகளைச் சந்தித்து வருவதால், கட்சியின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே தொடர்ந்து 11 தோல்விகளைச் சந்தித்து, இரண்டாக பிளவுபட்டுள்ளதால் இந்த கடுமையான பின்னடைவுகளில் இருந்து அந்த இயக்கம் மீண்டெழுந்து உயிர்ப்பெற்று வருவது கடும் சிரமமானது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
தொடர் தோல்வி, பலமுறை கட்சி பிளவு, உட்கட்சிப்பூசல்களால் பலவீனமடைந்துள்ள மாபெரும் இயக்கமான அ.தி.மு.க, எப்படி மீண்டெழும் என்ற கேள்விகளுக்கு தற்போது யாரிடமும் பதில் இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.