அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

கேரள முதல்வராக வி.டி.சதீசன் தேர்வு! 10 நாள் இழுபறிக்குப்பின் முடிவு… யார் இந்த சதீசன்?

கேரளம் சட்டப்பேரவைத் தேர்தலில், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியை தோற்கடித்து காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ள நிலையில், 10 நாட்களாக நடந்த நீண்ட இழுபறிக்குப்பின், காங்கிரஸ் மேலிடம் வி.டி.சதீசனை முதல்வராக தேர்வு செய்துள்ளது.

தமிழ்நாட்டைப் போலவே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேரளம் மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த மாதம் நிறைவடைந்தது. 140 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 9ம் தேதி நடந்து முடிந்த நிலையில், கடந்த 4ம் தேதி தமிழ்நாடு தேர்தல் முடிவுகளுடன் சேர்த்து கேரளம் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

கேரளாவைப் பொறுத்தவரையில், கம்யூனிஸ்ட் கட்சியில் தலைமையிலான – இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF) முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் ஆட்சி செய்து வந்தது.

கடந்த இரண்டு சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் வெற்றி பெற்றிருந்த எல்.டி.எப்., கூட்டணி, இரண்டு முறை தேர்தலில் வெற்றி பெற்று, 2016ம் ஆண்டு முதல் 2026 வரையில் பத்து ஆண்டுகள் ஆட்சி செய்து வந்தன.

இப்படியான நிலையில், சமீபத்திய தேர்தலில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி 77 இடங்களில் போட்டியிட்டு வெறும் 26 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றன.

எதிர்க்கட்சியான காங்கிரஸ் 92 இடங்களில் போட்டியிட்டு, 63 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜகவினர் 98 இடங்களில் போட்டியிட்டு வெறும் 3 இடங்களில் வெற்றி பெற்றிருந்தன.

ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையான 71 இடங்களில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) 102 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கும் தகுதியைப் பெற்றது.

முதல்வர் ரேசில் மூன்று பேர்!

தேர்தல் முடிவு வெளியான நாளில் இருந்தே, கேரளத்தின் அடுத்த காங்கிரஸ் முதல்வர் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

ஆனால், கட்சியில் சீனியரான கேரள சட்டசபை எதிர்க்கட்சி முன்னாள் தலைவர் ரமேஷ் சென்னிதலா, அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீசன் ஆகிய மூவரும் முதல்வர் ரேசில் இருந்தனர்.

கேரளத்தின் தற்போதைய சட்டசபை மே 23-ம் தேதிதான் முடிவடைகிறது என்பதால் முதல்வர் வேட்பாளரை தேர்வுசெய்ய காங்கிரஸுக்கு கால அவகாசம் நிறைய இருந்தது. ஆனால், கே.சி.வேணுகோபால் ஆதரவாளர்கள், வி.டி.சதீசன் ஆதரவாளர்கள் மற்றும் ரமேஷ் சென்னிதலா ஆதரவாளர்களும் பிளக்ஸ் போர்டுகள் வைப்பது, ரோட்டில் இறங்கி போராட்டங்கள் நடத்துவது என பரபரப்புகளை கிளப்பி வந்தனர்.

கே.சி.வேணுகோபால் முதல்வராக வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் வைத்த போர்டுகளை, வி.டி.சதீசன் ஆதரவாளர்கள் கிழித்தெறிந்து அதிர்ச்சியை கிளப்பினர். கடுதுருத்தி பகுதியில் வி.டி.சதீசன் ஆதரவாளர் ஒருவர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைக்க முயன்றது அரசியலை பரபரப்பாக்கியது. தலைவர்கள் டெல்லிக்கு சென்றுவருவதும், டெல்லி தலைவர்கள் கேரளத்துக்கு வந்து ஆலோசனை நடத்துவதும் தொடர்ந்தது.

சட்டப்பேரவைக்குத் தேர்வான காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளிடம் கருத்து கேட்டு அறிக்கை தாக்கல் செய்ய, அஜய் மக்கான் மற்றும் முகுல் வாஸ்னிக் தலைமையிலான குழு அமைக்கப்பட்டிருந்தது. இந்தக்குழு கருத்துக்கேட்பு நடத்தி ஒரு வாரமான நிலையில், 10 நாள்கள் விவாதத்துக்குப் பின் இன்று கேரள முதல்வர் பதவிக்கு வி.டி.சதீசன் பெயரை கட்சி தலைமை அறிவித்துள்ளது.

புதிய முதல்வர் வி.டி.சதீசனுக்கு அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கே.சி.வேணுகோபால், “கேரள முதல்வர் குறித்து கட்சியின் மேலிடம் தீர்மானம் எடுக்கும் என நான் ஏற்கனவே சொல்லியிருந்தேன். மேலிடத்தின் முடிவை ஏற்றுக்கொண்டு வி.டி.சதீசனுக்கு எல்லாவிதத்திலும் ஆதரவாக இருப்போம்” எனப்பேசியிருந்தார்.

முதல்வராக தேர்வானதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சதீசன், ‘‘இந்தப்பதிவியை நான் ஒரு தனிப்பட்ட சாதனையாகக் கருதவில்லை. இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கிணைத்து உறுதுணையாக இருந்தது வேணுகோபால் தான், அவரது ஆதரவு என்பது மகத்தானது. அதேபோல், சென்னிதலாவும் எனக்கு ஆதரவளித்தார்,’’ எனப்பேசியுள்ளார்.

கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சிக்கட்டிலில் அமர காங்கிரஸ் முயன்று வந்த நிலையில், வி.டி.சதீசன் தலைமையில் கேரளத்தை ஆளப்போகிறது காங்கிரஸ் கட்சி.

யார் இந்த வி.டி.சதீசன்?

கேரள மாநிலம் நெட்டூர், பணங்காடு பகுதிகளில் பள்ளிக் கல்வி முடித்த வி.டி.சதீசன், எர்ணாகுளம் சேக்ரெட் ஹார்ட் கல்லூரியில் பட்டப்படிப்பும், ராஜகிரி சமூக அறிவியல் கல்லூரியில் சமூக சேவையில் முதுநிலை டிப்ளோமாவும் பெற்றுள்ளார். பின்னர் திருவனந்தபுரம் லா அகாடமியில் சட்டப்படிப்பும், அரசு சட்டக் கல்லூரியில் எல்.எல்.எம். பட்டமும் பெற்றுள்ளார்.

கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணியாற்றிக் கொண்டிருந்தபோதே, 2001ஆம் ஆண்டு எர்ணாகுளம் மாவட்டத்தின் நார்த் பரவூர் தொகுதியில் இருந்து சட்டமன்றத்துக்கு அறிமுகமானவர் வி.டி.சதீசன். மாணவர் அரசியலில் பள்ளிக் காலத்திலிருந்தே ஈடுபட்ட இவர், கேரள ஸ்டூடன்ட்ஸ் யூனியன் (KSU) வழியாக எம்.ஜி. பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவராக உயர்ந்தார். பின்னர், காங்கிரஸ் கட்சியின் தேசிய மாணவர் சங்கம் (NSU) செயலாளராகவும் பணியாற்றினார்.

தற்போது, வடக்கு பரவூரில் வெற்றி பெற்றிருக்கும் சதீசன், கேரள காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாக உறுப்பினராகவும், எதிர்கட்சித்தலைவராகவும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினராகவும் உள்ளார். சிறந்த பேச்சாற்றல் கொண்ட சட்டமன்ற உறுப்பினராக அறியப்படும் சதீசன், கேரள சட்டமன்றத்தில் தொடர்ந்து முக்கிய பிரச்சினைகளை எழுப்பி கவனம் பெற்றவர். அவரது பேச்சுகள் சட்டமன்றத்தைத் தாண்டி பொதுவெளியிலும் விவாதங்களை தூண்டியுள்ளன. தீவிர வாசகர், இயற்கை ஆர்வலர், ட்ரெக்கிங் பயணங்களில் ஈடுபடும் நபர் என பல முகங்களைக் கொண்ட சதீசன் இனி கேரளத்தை வழிநடத்தவுள்ளார்.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of திலீபன்

திலீபன்