இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங், ஐபிஎல் 2027 தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளர் மற்றும் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், 2015ஆம் ஆண்டு டெல்லி அணிக்காக விளையாடிய அவர், தற்போது புதிய பொறுப்பில் அந்த அணியுடன் மீண்டும் இணைகிறார்.
எக்ஸ் தளத்தில் யுவராஜ் சிங்கை வரவேற்ற டெல்லி கேபிடல்ஸ்:
யுவராஜ் சிங்கின் நியமனத்தை டெல்லி கேபிடல்ஸ் அணி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் அக்டோபர் 13, 2026 அன்று அறிவித்தது.
அந்தப் பதிவில், “ஒரு சாம்பியன். ஒரு தலைவர். ஒரு புலி. பல தலைமுறைகளுக்கு உத்வேகம் அளித்த ஜாம்பவான், டெல்லியின் பெருமையை உருவாக்கத் தயாராகிவிட்டார். மீண்டும் வரவேற்கிறோம், யுவி பா!” என அணி தெரிவித்தது.
A champion. A leader. 𝐀 𝐓𝐢𝐠𝐞𝐫. 🐅🔥
— Delhi Capitals (@DelhiCapitals) October 13, 2026
The legend who inspired generations is ready to shape Dilli's legacy. Welcome home, Yuvi paa! 💙❤️ pic.twitter.com/i7A77rv2tJ
உலகக் கோப்பை வெற்றிகளில் யுவராஜின் பங்களிப்பு:
இந்திய கிரிக்கெட்டின் முக்கிய வீரர்களில் ஒருவரான யுவராஜ் சிங், 2007ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையையும் 2011ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையையும் வென்ற இந்திய அணிகளில் இடம்பெற்றிருந்தார்.
2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக அவர் தொடரின் சிறந்த வீரர் விருதைப் பெற்றார். அதற்கு முன்பு, 2007ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்களை அடித்து சாதனை படைத்தார்.
டெல்லி அணியுடனான முந்தைய பயணம்:
2015ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் என்ற பெயரில் செயல்பட்ட அணிக்காக யுவராஜ் விளையாடினார். அந்த ஆண்டின் ஐபிஎல் ஏலத்தில் அவர் ரூ.16 கோடிக்கு வாங்கப்பட்டார். அப்போது, ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரராக அவர் இருந்தார்.
தற்போதைய நியமனத்தின் மூலம், சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் அவர் பெற்ற அனுபவத்தை டெல்லி அணியின் வீரர்களுக்குப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இளம் வீரர்களுக்கு வழிகாட்டுவாரா யுவராஜ்?
ஷுப்மன் கில், அபிஷேக் சர்மா உள்ளிட்ட இளம் இந்திய வீரர்களுக்கு யுவராஜ் சிங் வழிகாட்டியாகச் செயல்பட்டுள்ளார். அந்த அனுபவம், டெல்லி கேபிடல்ஸ் அணியின் பேட்டிங் பிரிவைத் தயார்படுத்துவதற்குப் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் இந்திய அணித் தலைவர் சவுரவ் கங்குலியும் டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சிக் குழுவில் இடம்பெற்றுள்ள நிலையில், 2027 சீசனுக்கான அணியின் தயாரிப்பில் யுவராஜ் சிங்கின் பங்களிப்பு கவனிக்கப்படுகிறது. குழுவில் இடம்பெற்றுள்ள நிலையில், 2027 சீசனுக்கான அணியின் தயாரிப்பில் யுவராஜ் சிங்கின் பங்களிப்பு கவனிக்கப்படுகிறது.