2016ல் பொள்ளாச்சி பகுதி தென்னை மரங்களில் பரவிய வெள்ளை ஈக்கள், இன்று இந்தியா முழுமைக்கும் பரவி 50 சதவீத மகசூலை காலி செய்து வருகிறது. ஒரு தசாப்தமாகியும் கட்டுப்படுத்த முடியாமல் இந்தியா திணறுவது ஏன்? அமெரிக்க வென்றது எப்படி?
பருவநிலை மாற்றம், விலை குறைவு, நிலையற்ற மார்க்கெட் விலை, உரம் மற்றும் பூச்சிக்கொல்லி விலை உயர்வு என விவசாயிகள் எதிர்கொள்ளும் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் நிம்மதியை இழக்கச் செய்துள்ளது rugose spiraling whitefly எனப்படும் வெள்ளை ஈக்கள்.
முதன் முதலில் இதன் பாதிப்பை பதிவு செய்த அமெரிக்கா இதை, ‘பாதிப்பை உருவாக்கும் பூச்சி’ என்ற லிஸ்டில் இருந்தே அகற்றியுள்ளதுடன், பாதிப்பை கிட்டத்தட்ட முற்றிலும் குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால், இந்தியாவோ இதன் பாதிப்பை குறைக்க முடியாமல் திணறுகிறது. காரணம் என்ன? விவசாயிகள் எதிர்கொள்ளும் பாதிப்புகள் என்ன? என்பதை அறிய நாம் கள ஆய்வு செய்தோம்.
இந்தியாவில் தென்னை விவசாயம்!
இந்தியாவைப் பொறுத்தவரையில் தென்னை சாகுபடி பல மாநிலங்களில் பிரதானமாக உள்ளன. குறிப்பாக தென்னிந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் 492,610 ஹெக்டேர், கேரளாவில் 7,65,840 ஹெக்டேர், கர்நாடகத்தில் 5,64,620 ஹெக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்தியாவின் ஒட்டுமொத்த 2.165 மில்லியன் ஹெக்டேர் சாகுபடியில் தென்னிந்தியா 84 சதவீதத்தை பெற்றுள்ளது.
குறிப்பாகச் சொன்னால் பருவநிலை மாற்றம் காரணமாக, திடீரென பெய்யும் அதீத பருவமழை, பருவமழை பொய்த்துப்போவது, வறட்சி என கடந்த 20 ஆண்டுகளில், அதிக நீர் தேவைப்படும் பயிர் சாகுபடியை விடுத்து பலரும் தென்னை விவசாயத்துக்கு மாறியுள்ளனர்.

இந்நிலையில், 2016ம் ஆண்டு இந்தியாவின் முதல் முறையாக, கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தென்னை ஈ தாக்குதல் கண்டறியப்பட்டது. ஆய்வுகளின் முடிவில் இது முதன் முதலின் அமெரிக்காவின் கரிபியன் மண்டலத்தில் ஃபுலோரிடா பகுதியில் இருந்து வந்தது உறுதி செய்யப்பட்டது.
ஆனால், பொள்ளாச்சியில் கண்டறியப்பட்ட வெள்ளை ஈக்கள் மெல்ல மெல்ல பரவி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா என இன்று நாடு முழுவதிலும் பரவிக்கிடக்கிறது.
அமெரிக்கா வெள்ளை ஈக்கள் பாதிப்பு துவங்கி வெறும் 3 ஆண்டுகளில் அதன் பாதிப்பையும், பரவலையும் கட்டுப்படுத்தி, பாதிப்பைத்தரும் பூச்சிகளின் பட்டியலில் இருந்தே நீக்கியுள்ளது.
ஆனால், இந்தியாவிலோ வெள்ளை ஈத்தாக்குதல் துவங்கி ஒரு தசாப்தமாகியும் மத்திய வேளாண் அமைச்சகம் கட்டுப்படுத்த முடியாமல் திணறுகிறது. ஒவ்வொரு மாநிலங்களில் வேளாண் துறை, இந்திய பூச்சியில் ஆராய்ச்சி நிறுவனமான ICAR நிறுவனத்தின் விஞ்ஞானிகள் சொல்லும் ஒரு மேலாண்மை முறை கூட நடைமுறையில் பயனளிப்பதில்லை, பயனற்ற மேலாண்மை முறைகளால் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த முடியவில்லை எனவும், விளைச்சல் 60 சதவீதத்திற்கு மேல் குறைந்துள்ளதாகக்கூறி கண்ணீர் வடிக்கின்றனர் விவசாயிகள்.

கடந்த ஒரு தசாப்தமாக தென்னை மரங்களில் வெள்ளை ஈக்களை எப்படியான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது என்பதை அறிய, கேரள மாநிலம் பாலக்காடு மாவட்ட பகுதிகளிலும், தமிழ்நாடு மாநிலத்தில் கோவை மாவட்ட பகுதிகளிலும் நாம் கள ஆய்வு மேற்கொண்டோம்.
நாம் பார்த்தவரையில் பச்சை நிறத்தில் இருக்க வேண்டிய தென்னை மரத்தின் சோகைகள் எல்லாம், வெள்ளை ஈக்கள் தாக்குதலை எதிர்கொண்டு கருப்பு நிறத்தில் இருப்பதை காண முடிந்தது.
தமிழ்நாடு விவசாயிகள் கூறுவது என்ன?
கோவை மாவட்டத்தின் பொள்ளாச்சியைச் சேர்ந்த மூத்த விவசாயியான ஸ்ரீனிவாசன் (68) B.Sc வேளாண் படித்துள்ளார். கடந்த 38 ஆண்டுகளுக்கும் மேலாக தென்னை சாகுபடி செய்து வருகிறார்.
இந்தியாவில் முதன் முதலாக 2016ம் ஆண்டு பொள்ளாச்சி பகுதியில் தான் வெள்ளை ஈ தாக்குதலை இந்திய வேளாண் அமைச்சகம் கண்டறிந்ததாக கூறியுள்ளது. ஆனால், 2010 துவக்கத்திலேயே தான் வெள்ளை ஈக்கள் தாக்குதலை கண்டுள்ளதாக தெரிவிக்கிறார் அவர்.
’’நாங்கள் பாரம்பரியமாக தென்னை விவசாயம் செய்கிறோம். என் தாத்தா, அப்பாவிற்கு பிறகு 55 ஏக்கரில் தென்னை சாகுபடி செய்துள்ளேன். இளநீர் விற்பனை செய்வதற்காக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு Hybrid ரகமான சாவக்காடு ஆரஞ்சு ரக தென்னை சாகுபடி செய்துள்ளேன்.

தென்னையில் ஏற்படும் அனைத்து பாதிப்புகளையும் நான் எதிர்கொண்டுள்ளேன். 2010ம் ஆண்டு துவக்கத்தில் முதன் முதலாக நான் வெள்ளை ஈக்கள் தாக்குதலை சந்தித்தேன். ஆனால், 2016ம் ஆண்டு தான் வேளாண்துறை இதை உறுதிப்படுத்தியுள்ளது. எனக்கு தெரிந்த வரையில் நாட்டு தென்னை மரங்களை விட Hybrid ரகங்களில் வெள்ளை ஈக்களின் பாதிப்பு அதிகமாக உள்ளது,’’ என்கிறார் அவர்.
50 சதவீதத்திற்கு மேல் மகசூல் குறைவு!
வெள்ளை ஈக்களால் ஏற்படும் பொருளாதார பாதிப்பு குறித்து பேசிய அவர், ‘‘தென்னை ஓலைகளின் அடிப்பகுதியில் தேங்கும் வெள்ளை ஈக்கள் அதிலுள்ள பச்சையத்தை உறிஞ்சி குடிக்கிறது. வெள்ளை ஈக்கள் தாக்கிய பகுதியில் ஒருவகை பூஞ்சானம் சோகையை தாக்குவதால் அந்த பாதிப்பிலிருந்து வெளியாகும் கரும்பு நிறத்திலான பசை போன்ற திரவம் ஓலைகள் முழுவதிலும் பரவி தென்னை மரத்தை பார்த்தாலே கருப்பு நிறத்தில் காணப்படுகிறது. ஓலைகள் முழுமைக்கும் கருப்பு நிற திரவம் படிந்துள்ளதால், மரத்திற்கு போதிய அளவில் பச்சையம் கிடைக்காமல் சத்துக்கள் கிடைக்காமல் பலவீனமாகிறது. இதனால், மரத்தின் மகசூல் பெரும் அளவில் குறைந்துவிடுகிறது.
எடுத்துக்காட்டாக ஆரோக்கியமான Hybrid இளநீர் கொடுக்கும் தென்னை மரம் ஆண்டிற்கு 200 – 300 காயும், சாதாரண தேங்காய் கொடுக்கும் நாட்டு தென்னை மரத்தில் ஆண்டிற்கு 150 – 160 காய் கிடைக்கும். ஆனால், இத்தாக்குதல் வந்த பிறகு நாட்டு ரகத்தில் 50–70 காய்களும், Hybrid ரகத்தில் 100 – 120 காய்கள் மட்டுமே கிடைக்கிறது.

மரத்தை கவனிக்காமல் விட்டால் நிலமை படுமோசம் தான். இந்த வெள்ளை ஈக்களால் மகசூல் குறைவது ஒருபக்கம் என்றால் தேங்காய், இளநீரின் தரம், நீரின் அளவு, அதன் உருவம் பாதிக்கிறது. தேங்காயின் உருவம் மாறினாலும் விற்பனை செய்து விடலாம். ஆனால், இளநீரின் உருவம், சுவை, அளவு மாறுவதால் அதன் விலை மார்க்கெட்டில் குறைகிறது. பார்ப்பதற்கு அழகான இளநீரை தான் மக்கள் வாங்கி குடிக்கிறார்கள், வெள்ளை ஈ பாதித்த உருவம், நிறம், தரம் மாறிய இளநீரை வாங்க தயங்குகிறார்கள்,’’ என்கிறார்.
‘இந்திய வேளாண்துறையை நம்பி ஒரு பயனும் இல்லை – அவர்களின் அறிவுரை waste’!
மத்திய வேளாண்துறை அல்லது மாநில வேளாண்துறையை நம்பியிருந்தால் எந்த பயனும் இல்லை எனவும், வெள்ளை ஈக்கள் குறித்த விஞ்ஞானிகளின் எந்த ஒரு மேலாண்மை முறையும் களத்தில் செயல்படுவதில்லை, என குற்றம்சாட்டும் அவர், trial and error வகையில் தானே பல மருந்துக்களை கொடுத்து பார்த்து மரத்தின் வளத்தை அதிகப்படுத்துவதன் மூலம் மகசூல் பாதிப்பை சமாளிப்பதாக கூறுகிறார் ஸ்ரீனிவாசன்.
‘‘தமிழ்நாடு அரசும் சரி, இந்திய வேளாண்துறையும் சரி, தென்னை மரத்தின் கீழ் தண்ணீரை பீய்ச்சி அடியுங்கள், மஞ்சள் ஒட்டுப்பொறி ஒட்ட வேண்டும், வெள்ளை ஈக்களை அழிக்கும் இயற்கை எதிரிகளான என்கார்சியா ஒட்டுப்பொறி வைக்க வேண்டும் என பலவற்றை கூறுகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அதைப் பயன்படுத்தியும் எவ்வித பயனும் இல்லை, அவர்களின் அறிவுரை மேலாண்மை முறைகள் waste எனக்கருதுகிறேன்.
நாட்டு ரக தென்னை மரங்கள் 40 அடி உயரத்திற்கு மேல் உள்ளதால் மோட்டாரை வைத்து தண்ணீர் பீய்ச்சி அடித்தாலும் படாது, Hybrid வகைகளில் உயரம் 15 – 30 அடி இருக்கும் அதில் மட்டுமே பயன்படுத்த முடியும், இந்த processக்கு ஏக்கருக்கு 7,000 வரையில் செலவு செய்ய வேண்டி வரும். வேளாண்துறை சொல்வது போல தண்ணீரை பீய்ச்சி அடிப்பது, என்கார்சியா ஒட்டுண்ணி விடுதெல்லாம் நடைமுறையில் சாத்தியம் இல்லை என்பதைத் தெரிந்து கொண்ட நான், மரங்களை காக்க திட்டமிட்டேன்,’’ என்றார்.

‘‘தென்னை மரத்தின் வயதைப் பொறுத்து 10–20 ml Monocrotophas மருந்தை 100 மில்லி நீரில் கலந்து வேர் வழியாக கொடுத்து வருகிறேன். மருந்தின் வீரியம் மரத்தில் இருக்கும் வரையில் வெள்ளை ஈக்கள் பாதிப்பு குறைவாக இருக்கிறது, அதன்பின் மீண்டும் அதிகரிக்கிறது. அதிகமாக Monocrotophas பயன்படுத்துவதும் தேங்காயில் நச்சு ஏற்படும் மற்றும் பூச்சிகளுக்கு எதிர்ப்பு சக்தியை உருவாக்கிவிடும் எனத்தெரியும். ஆனாலும் எங்களுக்கு வேறு வழியில்லாமல் இதைச் செய்கிறோம்,’’ எனக்கூறி வேதனைப்படுகிறார் ஸ்ரீனிவாசன்.
அதீத வெப்பநிலை வெள்ளை ஈக்கள் பாதிப்பு அதிகமாகிக் கொண்டே செல்கிறது!
கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக மழை குறைவு மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக நெல் விவசாயத்தை கைவிட்டு தென்னை சாகுபடி செய்தவர்களில் 60 வயதான விவசாயியான பட்டீஸ்வரனும் ஒருவர்.
நம்மிடம் பேசிய பொள்ளாச்சி அடுத்த ஆனைமலையை சேர்ந்த பட்டீஸ்வரன், ‘‘அப்பா, தாத்தா காலத்தில் இருந்து 20 ஏக்கரில் நெல், கரும்பு, வாழை சாகுபடி செய்து வந்தேன். ஆனால், கடந்த 30 ஆண்டுகளாக பருவமழை தவறுவது, திடீர் வறட்சி, அதீத மழை காரணம் மற்றும் தொடர்ந்து வறட்சி ஏற்பட்டதால் போதிய பாசன நீர் கிடைக்காமல், நெல், கரும்பு மற்றும் வாழை சாகுபடியை தவிர்த்துவிட்டு, 16.5 ஏக்கரில் hybrid ரக தென்னை சாகுபடி செய்துள்ளேன். ஆரம்பத்தில் வெள்ளை ஈக்கள் தாக்குதல் குறைவாக இருந்த நிலையில் தொடர்ச்சியாக வெயில் அதிகரித்து அதன் பாதிப்பும் அதிகரித்துள்ளது.

மழைக்காலம் வரும் போதெல்லாம் தென்னை ஓலையில் இருக்கும் கருப்பு போன்ற திரவம், வெள்ளை ஈக்கள் குறைந்துவிடும். அப்போது, மகசூல் பாதிப்பு குறைந்துவிடும். ஆனால், வெயில் காலத்தில் வெள்ளை ஈக்கள் பாதிப்பு மிக அதிகமாக இருக்கும், மகசூல் பெரும் அளவு குறைந்து கடும் பொருளாதார பாதிப்பு ஏற்படுகிறது. தமிழ்நாடு அரசோ அல்லது மத்திய அரசோ வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த எந்தவித மானிய திட்டங்களும், உதவித்தொகையும் கொடுப்பதே இல்லை. நெல், வாழையும் சாகுபடி செய்ய முடியவில்லையென தென்னைக்கு மாறினால் இதிலும் அதிக பாதிப்பு எப்படி விவசாயம் செய்வதென்றே தெரியவில்லை,’’ என்கிறார்.
தமிழ்நாடு வேளாண் பல்கலையின் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து எந்த உதவியும் கிடைப்பதில்லை என்கிறார் பட்டீஸ்வரன்.
‘‘எங்கள் ஊரில் இருந்து வெறும் 14 கிலோ மீட்டரில் தமிழ்நாடு அரசின் தென்னை ஆராய்ச்சி நிலையம் இருக்கிறது. இங்கு, புதிய ரக தென்னை வெளியிடுவது, மானியத்தில் நாற்று வழங்குவது, பூச்சி மற்றும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த விஞ்ஞானிகள் இருக்கிறார்கள். அவ்வப்போது கண்துடைப்பிற்காக வெள்ளை ஈக்கள் கட்டுப்படுத்த ஆலோசனைக்கூட்டம் நடத்துகிறார்கள்.
என்கார்ச்சியா ஒட்டுண்ணியுடன் கூடிய தென்னை ஓலைகளை சிறியதாக கட் செய்து, ஒரு பாக்கெட்டில் பத்து சிறிய ஓலைகளை வைத்து பத்து ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். ஏக்கருக்கு 10 பாக்கெட்களை ஓலையில் stapler வைத்து pin செய்யச் சொல்கிறார்கள். நான் 7 ஆண்டுகளாக இதைச் செய்தும் ஒரு பயணும் இல்லை, விஞ்ஞானிகள் சொல்லும் எதுவுமே பயனில்லை.
மஞ்சள் ஒட்டுப்பொறி ஒட்டுகிறேன், ஏக்கருக்கு 6,000 ரூபாய் மற்றும் நீர் பயன்படுத்தி தண்ணீர் தெளிக்கிறேன், வேம்பு எண்ணெய் கலந்தும், அரிசியை வேகவைத்து எடுத்த கஞ்சியை தென்னை ஓலையில் தெளிக்கிறேன், என்கார்சியா விட்டேன் எந்தவொரு பலனும் இல்லை. விடையறியா கேள்வி ஒன்று தான், எப்போது தான் இதற்கு ஒரு தீர்வை கண்டுபிடிப்பார்கள் விஞ்ஞானிகள்,’’ என வேதனையுடன் கேட்கிறார் பட்டீஸ்வரன்.
தமிழ்நாட்டு தென்னை விவசாயிகளின் பாதிப்புகளை பதிவு செய்த நாம், கேரள மாநிலம் பாலக்காடு மாவட்ட விவசாயிகளிடம் பேசினோம். ஆனால், அவர்களும் கடுமையான பாதிப்புகளை எதிரொலித்தனர்.
‘எந்த அதிகாரியும் வரவில்லை எந்த உதவியும் கிடைக்கவில்லை…’
நம்மிடம் பேசிய கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் எருத்தேன்பதி ஊராட்சியைச் சேர்ந்த பெண் விவசாயியான சரிதா முருகானந்தம், ‘‘நான் சிறு வயதிலிருந்து விவசாயம் செய்கிறேன். நாங்கள், 10.5 ஏக்கரில் நாட்டு ரக தென்னை சாகுபடி செய்துள்ளோம். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வெள்ளை ஈக்கள் தாக்குதல் இருந்தும் இதுவரை எங்கள் பகுதிக்கு, கேரள அரசின் வேளாண்துறை சார்பில் யாரும் வந்து ஆய்வு செய்தது இல்லை. தமிழ்நாட்டிலுள்ள என் அப்பாவின் தென்னை தோப்பில் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர், மஞ்சள் ஒட்டுப்பொறு மானியத்தில் வழங்கினர். ஆனால், கேரள அரசு சார்பில் எனக்கு எந்த ஒரு உதவியோ அல்லது அறிவுரை கூட கிடைக்கவில்லை,’’ என்கிறார்.
தனியார் போலி பூச்சிக் கொல்லி விற்பனையாளர்களால் ஏமாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கிறார் சரிதா.

‘‘2017 வறட்சிக்குப்பின் அதீத வெப்பம் நிலவவியதால், 2019 துவக்கத்தில் மகசூல் கடுமையாக குறைந்தது. அப்போது, எங்கள் பகுதிக்கு வந்த தனியார் விற்பனையாளர்கள் சிலர், எங்கள் பகுதி விவசாயிகளிடம் வெள்ளை ஈக்களுக்கு எங்களிடம் பூச்சிக்கொல்லி மருந்து இருக்கிறது இதைப் பயன்படுத்தினால் தாக்குதல் குறையும் என்றனர். இதை நம்பி நானும் என் அருகிலிருந்த 6 விவசாயிகள் ஏக்கருக்கு 6,400 ரூபாய் செலவு செய்தோம். அவர்கள் வேரில் பூச்சிக்கொல்லி மருந்துகள் கட்டி விட்டனர். ஆனால், பாதிப்பு குறையவே இல்லை. சில மாதங்கள் கழித்து தான் தெரிந்தது அது போலியான மருந்து விற்பனை கும்பல் என. இப்படியும் ஏமாந்துவிட்டோம், அரசு எங்களை காக்கவில்லை என்றால் நாங்கள் என்ன செய்வது,’’ என கேள்வி எழுப்புகிறார் அவர்.
பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு தென்னை விவசாயியான கண்ணப்பன் (51), ‘‘நான் பள்ளிக்குச் செல்லவில்லை, சிறு வயதிலிருந்தே விவசாயம் தான் செய்து வருகிறேன். பூர்வீக நிலமான 1.35 ஏக்கரில் 72 தென்னை மரங்கள் வைத்துள்ளேன். வெள்ளை ஈக்களை எப்படி கட்டுப்படுத்துவது என எனக்கு யாரும் தெளிவுபடுத்தியதும் இல்லை, என் தோட்டத்திற்கு வேளாண்துறை அதிகாரிகள் வந்ததும் இல்லை. தேங்காய் விற்பனை, கொப்பரையில் தேங்காய் எண்ணெய் தயாரிப்பு செய்து வாழ்ந்து வருகிறேன். கடந்த பத்து ஆண்டுகளாக என் தென்னை மரத்தில், ஒரு மரத்திற்கு வெறும் 45–55 காய்கள் தான் கிடைக்கிறது.

வெள்ளை ஈக்கள் பாதிப்பு வருவதற்கு முன்பு 90–110 காய்கள் மகசூல் பெற்றுள்ளேன். மரங்களுக்கு மாட்டு சாணம் வைப்பது, வேம்பு புண்ணாக்கு, நூண்ணூட்டச்சத்து கொடுப்பதுடன், தனியார் உரக்கடைக்காரர்கள் சொல்லும் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தி வருகிறேன். அது என்ன பூச்சிக்கொல்லி என்றெல்லாம் எனக்குத்தெரியாது. ஆனால், எதைச்செய்தும் பயனில்லை. இந்த பாதிப்பு துவங்கியபோது பரவலாக இது பேசப்பட்ட போதிலும் இதை ஒரு பேரிடராகக் கருதி அரசு சரிசெய்யவில்லை,’’ என்கிறார் அவர்.
மாநிலமோ தேசிய அமைப்புகளோ எங்கிருந்தும் பதில் வரவில்லை!
தமிழ்நாடு விவசாயிகளின் பாதிப்பை பதிவு செய்யும் போது, அவர்கள் ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையம் தங்களுக்கு பல ஆண்டுகளாக அறிவுரை வழங்கி வருவதாகக்கூறினர்.
இதையடுத்து, நாம் அவர்களின் குற்றச்சாட்டுக்களுக்கு விளக்கம் கேட்க, தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ் செயல்படும், கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையத்திற்கு சென்றிருந்தோம். அங்கு அதன் பூச்சியியல் துறையைச் சேர்ந்த Dr. R.அருள்பிரகாஷ் (Associate Professor (Agricultural Entomology), Entomology) சந்தித்து பேசினோம்.
நம்மிடம் பேசிய அவர், இத்தனை ஆண்டுகளாக வேளாண்துறையின் இணையதளத்தில் உள்ள வெள்ளை ஈக்கள் வந்த வரலாறு, என்கார்சியா ஒட்டுப்பொறி வைப்பது, தண்ணீரை பீய்ச்சி அடிப்பது போன்ற பல ஆண்டு கதைகளையே தான் நம்மிடம் பேசினார்.

அப்போது நாம், வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த தற்போது எந்ந மாதிரியான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகிறது? இதுவரையில் ஆராய்ச்சியில் கண்டறிந்தது என்ன? தென்னை ஆராய்ச்சி நிலையம் வகுத்த மேலாண்மை முறைகளின் success rate என்ன? வெள்ளை ஈக்களை கட்டுப்பாட்டில் உள்ளதா? என்ற கேள்விகளை முன்வைத்து நாம் விளக்கம் கேட்டோம்.
நம்மிடம் அப்போது விளக்கம் அளிக்க மறுத்த அவர், இந்த தகவல்களுக்கு முழு தகவல்களுடன் Writeupஆக அனுப்பி பதிலளிப்பதாக தெரிவித்தார். ஆனால், அவரிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை.
தென்னை ஆராய்ச்சி நிலையத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும், தமிழ்நாடு வேளாண் பல்கலையின் பதிவாளர், தமிழ்நாடு வேளாண்துறை செயலாளர், தோட்க்கலைத்துறை டீன், பூச்சியியல் துறை, என பலருக்கும் நாம் மெயில் அனுப்பியும் யாரும் பதிலளிக்கவில்லை.
ஒரே ஒரு அதிகாரப்பூர்வ விளக்கம்…
மாநில அளவில் ஒரு பதிலும் கிடைக்காத நிலையில், நமக்கு விரிவான அதிகாரப்பூர்வ பதிலை அளித்த ஒரே நபர், கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள மத்திய அரசின் ICAR – Central Plantation Crops Research Institute (CPCRI)-ன் பயிர் பாதுகாப்புத் துறைத் தலைவர் டாக்டர் வினாயக் ஹெக்டே மட்டுமே.
நம்மிடம் பேசிய அவர், “2016ம் ஆண்டு பொள்ளாச்சி பகுதியில் விவசாயிகள் இதுவரை இல்லாத அளவிலான வெள்ளை ஈ தாக்குதலை புகாரளித்த பிறகே, Rugose Spiralling Whitefly (RSW) தாக்குதலை இந்தியாவில் முதன்முறையாக உறுதி செய்தோம். இந்த பூச்சி, அமெரிக்காவின் ஃபுளோரிடா அல்லது அதனை ஒட்டியுள்ள கரீபியன் பகுதிகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தாவரங்கள் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்திருக்கலாம்,” என்றார்.

இந்தியா ஆரம்பத்தில் மேற்கொண்ட மேலாண்மை முறைகள் அனைத்தும், ஃபுளோரிடா மாநிலம் முதலில் கையாண்ட உயிரியல் கட்டுப்பாட்டு (Biocontrol) உத்திகளையே பின்பற்றியதாகவும் அவர் கூறுகிறார்.
“தென்னை ஓலைகளின் அடிப்பகுதியில் அதிக அழுத்தத்தில் தண்ணீர் பீய்ச்சி அடிப்பது, மஞ்சள் ஒட்டுப்பொறிகள் அமைப்பது, வேம்பு எண்ணெய் தெளிப்பது, Encarsia ஒட்டுண்ணிகளை விடுவிப்பது மற்றும் இயற்கை எதிரிகளை பாதுகாப்பது போன்ற முறைகளையே பரிந்துரைத்தோம். இவை அனைத்தும் உயிரியல் மேலாண்மை முறைகள். ஆய்வகங்களில் இவை சிறப்பாக செயல்படுகின்றன. ஆனால் இந்தியாவின் களநிலையிலோ, குறிப்பாக பெரிய அளவிலான தென்னைத் தோட்டங்களில் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம்,” என்கிறார்.
பருவநிலை மாற்றம் பிரச்சினையை பல மடங்கு தீவிரப்படுத்தியுள்ளது
வெள்ளை ஈ தாக்குதலைக் கட்டுப்படுத்த முடியாததற்குப் பின்னால் பருவநிலை மாற்றமும் முக்கிய காரணமாக இருப்பதாக டாக்டர் ஹெக்டே சுட்டிக்காட்டுகிறார்.
“கடந்த 20 ஆண்டுகளாக வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் வெள்ளை ஈக்களின் இனப்பெருக்க வேகம் கணிசமாக அதிகரித்துள்ளது. அதன் பரவலும் மக்கள் தொகை வளர்ச்சியும் முன்பை விட வேகமாக நடைபெறுவதை நாங்கள் பதிவுசெய்துள்ளோம்,” என்றார்.
அமெரிக்காவின் சூழலும் இந்தியாவின் யதார்த்தமும் வேறுபட்டவை, அமெரிக்காவில் வெற்றி பெற்ற மேலாண்மை முறைகள் இந்தியாவில் ஏன் அதே பலனை அளிக்கவில்லை என்பதற்கான காரணத்தையும் அவர் விளக்குகிறார்.
‘‘ஃபுளோரிடாவில் தென்னை மற்றும் பனை மரங்கள் பெரும்பாலும் அலங்கார மரங்களாக, இடைவெளி விட்டு வளர்க்கப்படுகின்றன. ஆனால் இந்தியாவில் தென்னை என்பது கோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம். ஒரு ஏக்கரில் சராசரியாக 70 தென்னை மரங்கள் வரை வளர்க்கப்படுகின்றன. இவ்வளவு அடர்த்தியான தோட்டங்களில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்துவது இயல்பாகவே மிகவும் சவாலானது,” என்கிறார்.
வெள்ளை ஈ கட்டுப்பாட்டில் இந்தியா எதிர்கொள்ளும் மிகப்பெரிய சிக்கல் குறித்து அவர் வெளிப்படையாகப் பேசுகிறார்.

“ஒரு பகுதியில் உள்ள அனைத்து விவசாயிகளும் ஒரே மேலாண்மை முறையை, ஒரே காலகட்டத்தில் பின்பற்றினால் மட்டுமே வெள்ளை ஈ தாக்குதலைக் கட்டுப்படுத்த முடியும். சிலர் அதைச் செய்யாமல் விட்டாலும், அருகிலுள்ள தோட்டங்களில் இருந்து பூச்சி மீண்டும் பரவி விடும். இந்தியா போன்ற நாட்டில் அந்த அளவிலான ஒருங்கிணைப்பை உருவாக்குவது மிகவும் கடினம்,” என்கிறார்.
தற்போது வாழை, கோகோ, பனை உள்ளிட்ட பல்வேறு பயிர்களிலும் வெள்ளை ஈக்களின் தாக்குதல் பதிவாகி வருவது குறித்து நாம் அவரிடம் கேட்டபோது, இது தற்போது தேசிய அளவிலான விவசாயப் பிரச்சினையாக மாறிவிட்டதாக டாக்டர் ஹெக்டே ஒப்புக்கொள்கிறார்.
“கேரளா, தமிழ்நாடு, கர்நாடகத்தில் தொடங்கிய இந்த பூச்சித் தாக்குதல், இன்று இந்தியா முழுவதும் பரவியுள்ளது. தற்போது வாழை உள்ளிட்ட பல பயிர்களிலும் பாதிப்பு பதிவாகியுள்ளது. இதுவரை எந்த ரசாயன பூச்சிக்கொல்லியையும் நாங்கள் பரிந்துரைக்கவில்லை. குறிப்பிட்ட சில தேர்ந்தெடுக்கப்பட்ட ரசாயனங்கள் உதவுமா என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். ஆனால், அதைப் விவசாயிகளுக்கு பரிந்துரைக்கும் முன் போதுமான அறிவியல் ஆதாரங்கள் கிடைக்க வேண்டும்,” என்கிறார் டாக்டர் வினாயக் ஹெக்டே.
வெள்ளை ஈக்கள் பரவிய ஆரம்ப காலத்திலேயே ஒரு பேரிடராகக் கருதி, இந்திய அரசு முறையான ஆய்வு செய்து, கட்டுப்பாட்டு முறைகளை தீவிரப்படுத்தி இருந்தால் இத்தனை பாதிப்புகள் வந்திருக்காது. எப்போது தான் இதற்குக் கிடைக்கும் தீர்வு? விடையறியா கேள்வி தான்!