உயர்கல்வி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்துவதற்கான அரசாணையைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ‘வெற்றி மடிக்கணினித் திட்டம்’ என்ற பெயரில் செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டத்தின் மூலம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளன. இதற்கான நிர்வாக அனுமதியையும், விரிவான வழிகாட்டு நெறிமுறைகளையும் வழங்கி முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
ரூ.2000கோடியில் வெற்றி மடிக்கணினித் திட்டம்.#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan | pic.twitter.com/If8MUEv8kj
— TN DIPR (@TNDIPRNEWS) November 7, 2026
உயர்கல்வி என்பது வகுப்பறைப் பாடங்களுடன் மட்டும் முடிந்துவிடுவதில்லை. இணையவழிக் கற்றல், ஆய்வுகள், மென்பொருள் பயன்பாடு, தரவுப் பகுப்பாய்வு, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பத் தளங்களையும் மாணவர்கள் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. குறிப்பாக, பொறியியல், அறிவியல், மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் கணினிப் பயன்பாடு தவிர்க்க முடியாததாக மாறியுள்ளது. இத்தகைய சூழலில், மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவது அவர்களின் கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
ஆனால், தனிப்பட்ட மடிக்கணினி வாங்குவதற்கான பொருளாதார வசதி அனைத்து மாணவர்களுக்கும் இருப்பதில்லை. ஒரே கல்லூரியில் படிக்கும் மாணவர்களிடையேகூட தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்துவதில் ஏற்றத்தாழ்வுகள் நிலவுகின்றன. இந்த இடைவெளியைக் குறைப்பதில் அரசின் இலவச மடிக்கணினித் திட்டம் முக்கியப் பங்கு வகிக்கக்கூடும்.
முதலாம் ஆண்டு முதல் மடிக்கணினி!
2026–2027ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பயிலும் முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு இளநிலைப் பட்டப்படிப்பு (UG), பட்டயப்படிப்பு (Diploma) மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற உள்ளனர்.
கலை மற்றும் அறிவியல், பொறியியல், பாலிடெக்னிக், தொழிற்பயிற்சி நிலையங்கள் (ITI), மருத்துவம், கால்நடை மருத்துவம், மீன்வளம், வேளாண்மை, சட்டம் உள்ளிட்ட பல்வேறு கல்விப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் இதில் இடம்பெற்றுள்ளனர்.
இதுதவிர, 2025–2026ஆம் கல்வியாண்டில் முந்தைய மடிக்கணினித் திட்டத்தின் கீழ் பயன்பெறாத அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பயிலும் மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு தொழில்முறைப் படிப்பு (Professional Courses) மாணவர்களுக்கும் மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளன.
இதன் மூலம் முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டுமின்றி, முந்தைய திட்டத்தில் வாய்ப்பு கிடைக்காத சில மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு தொழில்முறைப் படிப்பு மாணவர்களுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, உயர்கல்வியின் வெவ்வேறு நிலைகளில் பயிலும் மாணவர்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு பயனாளிகள் வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் மாணவர்களுக்கு Intel Core i5!
மடிக்கணினிகளை வழங்குவதுடன் அவற்றின் தொழில்நுட்பத் தரத்திலும் அரசு கவனம் செலுத்தியுள்ளது. குறிப்பாக, பொறியியல் மாணவர்களுக்கு Intel Core i5 அல்லது அதற்கு இணையான செயலி கொண்ட மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளன.
பொறியியல் கல்வியில் மென்பொருள் வடிவமைப்பு, நிரலாக்கம், கணினி சார்ந்த மாதிரியாக்கம் (Simulation), தொழில்நுட்ப ஆய்வுகள் உள்ளிட்ட பணிகளுக்கு ஒப்பீட்டளவில் அதிகக் கணினித் திறன் தேவைப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, அந்த மாணவர்களுக்கு உயர்தரச் செயலி கொண்ட மடிக்கணினிகளை வழங்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாணாக்கர்களின் முன்னேற்றமே மாநிலத்தின் முன்னேற்றம் என்ற உயர்ந்த நோக்கத்தில், கல்லூரி மாணாக்கர்களின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்த ரூ.2,000 கோடி மதிப்பீட்டில் வெற்றி மடிக்கணினித் திட்டத்தைச் செயல்படுத்திட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
— TN DIPR (@TNDIPRNEWS) November 7, 2026
திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு.… pic.twitter.com/Fv9lP8EKi3
மடிக்கணினிகளின் கொள்முதல் மற்றும் தரக்கட்டுப்பாட்டுப் பணிகளைத் தமிழ்நாடு மின்னணு நிறுவனமான எல்காட் (ELCOT) மேற்கொள்ள உள்ளது. இதற்கான நிர்வாக அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், திட்டத்தின் செயல்பாடுகளைக் கண்காணித்து ஒருங்கிணைக்க முதலமைச்சர் தலைமையில் உயர்மட்ட வழிகாட்டுதல் குழு (High-Level Steering Committee) அமைக்கப்பட உள்ளது.
தி.மு.க. ஆட்சியில் தொடங்கிய திட்டம்; புதிய பெயரில் தொடர்ச்சி!
கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் தமிழக அரசியலிலும் கல்விக் கொள்கையிலும் ஏற்கெனவே முக்கிய இடம் பெற்றுள்ளது. கடந்த தி.மு.க. ஆட்சியில் 2025–2026ஆம் நிதிநிலை அறிக்கையில் ‘உலகம் உங்கள் கையில்’ என்ற பெயரில் இத்திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்காக ரூ.2,000 கோடி ஒதுக்கப்பட்டதுடன், இரண்டு ஆண்டுகளில் 20 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
2026 ஜனவரி 5ம் தேதி அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கத் திட்டமிடப்பட்டது. அப்போது மூன்றாம் ஆண்டு மற்றும் இறுதியாண்டு மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், 2026 ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப்பட்ட 2026–2027ஆம் நிதிநிலை அறிக்கையில், முந்தைய திட்டம் ‘வெற்றி மடிக்கணினித் திட்டம்’ என்ற பெயரில் தொடரப்படும் என்றும், இதற்காக ரூ.2,000 கோடி ஒதுக்கப்படும் என்றும் தற்போதைய தவெக அரசு அறிவித்தது.
தற்போதைய திட்டத்தில் முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், முந்தைய திட்டத்தில் பயன்பெறாத மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு தொழில்முறைப் படிப்பு மாணவர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். எனவே, இது பெயர் மாற்றத்துடன் தொடரும் திட்டமாக மட்டுமின்றி, பயனாளிகள் வரம்பிலும் மாற்றங்களைக் கொண்டுள்ளது.
அறிவிப்பைக் கடந்து கவனம் பெற வேண்டியவை!
மடிக்கணினி வழங்குவதற்காக ரூ.2,000 கோடி ஒதுக்கப்பட்டிருப்பது முக்கியமான அறிவிப்பு என்றாலும், அதன் செயல்பாட்டில்தான் திட்டத்தின் உண்மையான பயன் அடங்கியுள்ளது.
முதலில், கொள்முதல் செய்யப்படும் மடிக்கணினிகளின் தரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். மாணவர்கள் பயன்படுத்தும் சாதனங்கள் குறைந்தபட்சம் அவர்களின் பட்டப்படிப்பு காலம் முழுவதும் தடையின்றிச் செயல்பட வேண்டும். அதற்கான உத்தரவாதம், தொழில்நுட்ப உதவி, பழுதுபார்க்கும் வசதி போன்றவற்றுக்கும் அரசு ஏற்பாடு செய்ய வேண்டியது அவசியம்.
அதேபோல், மடிக்கணினி கிடைத்துவிட்டால் மட்டும் டிஜிட்டல் கல்விக்கான இடைவெளி முழுமையாக நீங்கிவிடாது. பல கிராமப்புறங்களில் இணைய இணைப்பு, கணினிப் பயிற்சி மற்றும் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு தொடர்பான சிக்கல்கள் இன்னும் உள்ளன. மடிக்கணினிகளைப் பயன்படுத்துவதற்கான அடிப்படைப் பயிற்சிகளையும், கல்விக்குத் தேவையான மென்பொருள் வசதிகளையும் வழங்குவது திட்டத்தின் பயனை அதிகரிக்கும்.

மேலும், மொத்தம் எத்தனை மாணவர்கள் பயன்பெற உள்ளனர், கொள்முதல் செய்யப்படும் மடிக்கணினிகளின் விலை மற்றும் முழுமையான தொழில்நுட்ப விவரங்கள் என்ன, விநியோகம் எப்போது தொடங்கும், பயனாளிகள் எவ்வாறு தேர்வு செய்யப்படுவார்கள் போன்ற விவரங்களையும் அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
கல்வி தொடர்பான நலத்திட்டங்கள் ஆட்சி மாற்றங்களைக் கடந்து தொடர்வதுடன், அவை காலத்திற்கேற்ப மேம்படுத்தப்படுவதும் அவசியம். மடிக்கணினி வழங்குவது என்பது மாணவர்களுக்கு ஒரு சாதனத்தை வழங்குவதோடு முடிந்துவிடக் கூடாது. அதை அறிவைப் பெறுவதற்கும், புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்வதற்கும், வேலைவாய்ப்புக்கான திறன்களை வளர்த்துக்கொள்வதற்கும் பயன்படுத்துவதற்கான சூழலை உருவாக்க வேண்டும்.
அரசின் அறிவிப்பில் இடம்பெற்றுள்ள ரூ.2,000 கோடி ஒதுக்கீடும், விரிவுபடுத்தப்பட்ட பயனாளிகள் வரம்பும் முக்கியமானவை. ஆனால், இந்தத் திட்டம் உண்மையில் எத்தனை மாணவர்களின் கல்விப் பயணத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதே அதன் வெற்றிக்கான அளவுகோலாக இருக்கும்.