தமிழகத்தில் பெண்கள் அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்யும் திட்டம் ஏற்கனவே நடைமுறையில் இருந்து வருகிறது. பெண்களின் பயணச் செலவை குறைப்பதுடன், வேலைக்குச் செல்லும் பெண்கள், மாணவிகள் மற்றும் பல்வேறு தேவைகளுக்காக பேருந்துகளைப் பயன்படுத்தும் பெண்களுக்கு இந்தத் திட்டம் பயனளித்து வருகிறது. இந்த நிலையில், பெண்களுக்கு வழங்கப்படும் கட்டணமில்லா பேருந்து பயண வசதியை மேலும் விரிவுபடுத்தும் வகையில் ‘வெற்றிப் பயணம்’ என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் முன்பு கட்டணமில்லா பயணம் அனுமதிக்கப்பட்ட பேருந்து வகைகளுடன் கூடுதல் வகை அரசுப் பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாகப் பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஈரோட்டைச் சேர்ந்த தனியார் பேருந்து உரிமையாளர் கலாமணி மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், சட்டப்பேரவையில் முதல்வரின் அறிவிப்பு அடிப்படையில் செயல்படுத்தப்படும் இந்த திட்டம் தொடர்பாக எந்த அரசாணையும் பிறப்பிக்கப்படாத நிலையில், திட்டத்தை அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என அறிவித்து வழக்கு முடியும் வரை, வெற்றி பயண திட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன், சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பின் அடிப்படையில் இந்த திட்டம் துவங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஈரோட்டில் இரண்டு வழித்தடங்களில் மட்டும் பேருந்துகளை இயக்கும் தனியார் பேருந்து உரிமையாளர் தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் வெற்றிப் பயணத் திட்டத்தை எதிர்த்து எப்படி வழக்கு தொடர முடியும்? என கேள்வி எழுப்பினர். ஒட்டுமொத்த திட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்துள்ள இந்த வழக்கை பொதுநல வழக்காக கருத முடியாது எனவும் தெரிவித்ததோடு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.