அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளின் வர்த்தக நடைமுறைகள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளது. இதன் அடிப்படையில், இந்தியாவின் உற்பத்தித் துறையில் நிலவும் அதிகப்படியான உற்பத்தித் திறன், அரசின் மானியங்கள் மற்றும் சந்தை அணுகல் தொடர்பான கட்டுப்பாடுகள் உள்ளிட்டவற்றை அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது. இதோடு கடந்த 1974ஆம் ஆண்டின் அமெரிக்க வர்த்தகச் சட்டத்தின் பிரிவு 301-ன் கீழ் நடவடிக்கை எடுக்க முன்மொழியப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவின் உற்பத்தித் திறன் தேவைக்கு அதிகமாக இருப்பதாகவும், இந்தியா தனது சந்தையை வெளிநாட்டு நிறுவனங்கள் எளிதில் அணுக அனுமதிப்பில்லை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை அமெரிக்க தெரிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டால் 25 சதவீத வரியானது 17 சதவீதமாகக் குறைக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை இந்திய ஏற்றுமதித் துறையினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
எந்தெந்த பொருட்களுக்கு பாதிப்பு ஏற்படும்?
இந்த வரி விதிப்பு அமலுக்கு வந்தால், அமெரிக்காவுக்கு அதிக அளவில் பொருட்களை ஏற்றுமதி செய்யும் இந்திய நிறுவனங்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக ஜவுளி, ஆயத்த ஆடைகள், தங்கம் மற்றும் வைர நகைகள், கடல் உணவுப் பொருட்கள், பொறியியல் பொருட்கள் உள்ளிட்ட துறைகளுக்கு சவால்கள் ஏற்படலாம்.
இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களின் விலை அமெரிக்கச் சந்தையில் அதிகரிக்கும்போது, அங்குள்ள இறக்குமதியாளர்கள் குறைந்த விலையில் பொருட்களை வழங்கும் பிற நாடுகளை நாட வாய்ப்புள்ளது. இதனால் இந்திய நிறுவனங்களின் ஏற்றுமதி வர்த்தகம் மற்றும் லாபம் பாதிக்கப்படலாம் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
புதிய வரியை ஆய்வு செய்யும் இந்தியா:
அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை இந்தியா ஏற்கவில்லை. இந்தியாவின் உற்பத்தித் துறையில் கட்டமைப்பு ரீதியாக உபரி உற்பத்தித் திறன் இருப்பதாகக் கூறப்படும் கருத்தையும் மத்திய அரசு மறுத்துள்ளது. அமெரிக்காவின் முன்மொழிவை ஆய்வு செய்து வருவதாகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பிரச்சினைகளைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க விரும்புவதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இந்தியா – அமெரிக்கா இடையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டால், முன்மொழியப்பட்டுள்ள 25 சதவீத வரி 17 சதவீதமாகக் குறைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த வரி விதிப்பு தற்போது முன்மொழிவு நிலையிலேயே உள்ளது. இதற்கான பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் கருத்துகளைக் கேட்டறிந்த பிறகே அமெரிக்கா இறுதி முடிவை எடுக்கும். இதனால் உடனடியாக இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீத வரி அமலுக்கு வந்துவிட்டதாகக் கூற முடியாது. அமெரிக்காவின் இறுதி முடிவு இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளின் முடிவை இந்திய ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.