இலங்கையை அண்மித்த சர்வதேச கடல் பரப்பில் நிர்க்கதியாகியுள்ள இரான் கப்பல்களுக்கு சேவை வழங்கும் பட்சத்தில், இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கக்கூடும் என இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் இலங்கை அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் ”The Wall Street Journal” செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்க அதிகாரிகள் விடுத்துள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவினால் தடங்கல் ஏற்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து, இலங்கையை அண்மித்த சர்வதேச கடல் பரப்பில் சுமார் 20 இரான் கப்பல்கள் நிர்க்கதியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கப்பலிலிருந்து உணவு பொருட்களை கோருகின்ற போதிலும், இலங்கை அரசாங்கத்தின் அனுமதி கிடைக்காமையினால் தமக்கு சேவை வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கையிலுள்ள கப்பல் நிறுவனங்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரானுக்கு சொந்தமான சுமார் 20 வெற்று எரிபொருள் கப்பல்களே இவ்வாறு இலங்கையை அண்மித்த சர்வதேச கடல்பரப்பில் நங்கூரமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹோமுஸ் நீரிணை பகுதியின் ஊடான போக்குவரத்துக்கு கடந்த ஜுலை மாதம் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இலங்கையிலிருந்து தென்மேற்கு திசையில் சுமார் 15 கடல் மைல் தொலைவில் இந்த கப்பல்கள் நங்கூரமிட்டுள்ளன.
இந்த கப்பலிலுள்ளவர்கள் பாரிய உணவு தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கி வருவதாகவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் தடைகளுக்கு உள்ளாகியுள்ள இரான் மசகு எண்ணெய்யை, சீனாவிற்கு கொண்டு சென்று மீண்டும் தமது தாய் நாட்டிற்கு திரும்பும் கப்பல்களே இவ்வாறு நிர்க்கதி நிலையை எதிர்நோக்கியுள்ளன.
இலங்கை, சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளை அண்மித்த கடல் பரப்பிலேயே இந்த கப்பல்கள் நங்கூரமிட்டுள்ளன.
இரான் கப்பல்களுக்கு இதற்கு முன்னர் எரிபொருள் விநியோகித்தமையினால், எரிபொருளை பெற்றுக்கொள்ளும் எதிர்பார்ப்புடன் இலங்கையை அண்மித்து இந்த கப்பல்கள் வருகைத் தந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், இரான் கப்பல்களுக்கு எரிபொருள் உள்ளிட்ட சேவைகளை வழங்கக்கூடாது என அமெரிக்க அதிகாரிகள், இலங்கையிடம் கடந்த ஆகஸ்ட் மாதம் தெரிவித்துள்ளனர்.
அவ்வாறு சேவை வழங்கப்படும் பட்சத்தில், இலங்கைக்கு எதிராக தடைகள் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரான் கொடியை எந்திய இரண்டு கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை அண்மித்துள்ள போதிலும், அவர்களுக்கும் சேவை வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக இலங்கை துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு எதிராக தடை ஏற்படுத்தப்படும் என்ற அச்சத்திலேயே சேவை வழங்குவதை இலங்கை அதிகாரிகள் புறக்கணித்து வருகின்றனர்.
இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கை

இலங்கையை அண்மித்த கடல் பரப்பில், இரானிய கப்பல்கள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்னை மற்றும் அதனுடன் தொடர்புப்பட்டு வெளியாகி வரும் செய்திகள் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இலங்கையை அண்மித்த சர்வதேச கடல்பரப்பில் நங்கூரமிட்டுள்ள இரானிய கப்பல்களுக்கு சேவை வழங்கப்படும் பட்சத்தில், தடை விதிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ள அறிவிப்பானது, இலங்கை அல்லது வேறொரு நாட்டை இலக்காக கொண்டு தெரிவித்து கருத்து அல்லவெனவும், அது உலகளாவிய ரீதியில் அவர்கள் கடைப்பிடிக்கும் சாதாரண சர்வதேச கொள்கை எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளரும், பணிப்பாளர் நாயகமுமான துஷார ரோட்ரிகோ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவினால் இந்த தடை தொடர்பில் ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்காவின் தடைக்குள்ளாகியுள்ள கப்பல்களுக்கு சேவை வழங்கும் நபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு அமெரிக்க நிதி கட்டமைப்புக்குள் பிரவேசிக்கும் மார்க்கம் தடை செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையானது, அமெரிக்காவின் தடை கொள்கையின் ஒரு பகுதி எனவும், அது சர்வதேச ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த விடயமானது இலங்கையை மாத்திரம் இலக்காக கொண்டு விடுக்கப்பட்ட எச்சரிக்கை அல்லவெனவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ள கப்பல்கள் இந்து சமுத்திரத்தில் மாத்திரம் மட்டுப்படுத்தப்படவில்லை எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள மோதல்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பூகோள அரசியல் நிலைமையினால், உலகம் முழுவதும் உள்ள ஏனைய சமுத்திர வலயங்களிலும் இவ்வாறான கப்பல்கள் நங்கூரமிட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையை அண்மித்த கடலில் இரான் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்

இலங்கையை அண்மித்த சர்வதேச கடல் பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த இரான் கப்பல் மீது அமெரிக்கா கடந்த மார்ச் மாதம் 04ம் தேதி தாக்குதல் நடாத்தியிருந்தது.
அமெரிக்க நீர்மூழ்கி கப்பலினால் இந்த இரான் கப்பல் மீது தாக்குதல் நடாத்தப்பட்டிருந்தது.
இந்த தாக்குதலில் 87 பேர் உயிரிழந்திருந்ததுடன், சுமார் 32 பேர் வரை காப்பாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.