அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

விஜய் முதல்வராக காங்கிரஸ் கட்சி ஆதரவு! திமுகவுடனான 10 ஆண்டு கூட்டணியை முறித்தது காங்கிரஸ்…

10 ஆண்டுகளாக திமுகவுடன் கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி தங்கள் கூட்டணி உறவை முறித்துக்கொண்டு, விஜய் ஆட்சியமைக்க தவெகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால், காங்கிரஸ் கட்சியை திமுகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 4ம் தேதி வெளியிடப்பட்டது. தமிழகத்தில் மொத்தமுள்ள 234 சட்டசபைத் தொகுதிகளில், முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்ட நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றது. 5 ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்த திமுக 59 இடங்களிலும், எதிர்கட்சியான அதிமுக 47 தொகுதிகளிலும், திமுக ஆதரவில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 5 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மா.கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா இரண்டு தொகுதிகளிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றன.

பெரும்பான்மை இல்லாததால்  தொங்கு சட்டசபை

தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க மொத்தமுள்ள, 234 தொகுதிகளில் 118 தொகுதிகள் தேவைப்படும் நிலையில், நடந்துமுடிந்த தேர்தலில் எந்தக்கட்சியும் பெரும்பான்மை பெறாத நிலையில் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது. விஜயின் தவெக 108 இடங்களை கைப்பற்றியிருக்கும் நிலையில் ஆட்சியமைக்க தவெகவிற்கு இன்னமும் 10 தொகுதிகள் மட்டுமே தேவைப்படுகிறது. விஜய் முதல்வராக பொறுப்பேற்று ஆட்சியமைக்க தவெக கட்சியினர், விசிக, பாமக, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் காங்கிரஸ் கட்சியினரிடம் ஆதரவு கேட்டு வந்தனர்.

ஆனால், 10 ஆண்டுகளாக இரண்டு லோக்சபா, சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கு திமுக கட்சியுடன் கூட்டணியில் இருக்கும், விசிக, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் திமுகவிற்கு துரோகம் செய்துவிட்டு விஜயின் தவெகவிற்கு ஆதரவு தெரிவிக்காது என அரசியல் களத்தில் பரவலாக பேசப்பட்டு வந்தன.

அதிலும், காங்கிரஸ் கட்சியின் எதிர்கட்சித் தலைவரான ராகுல் காந்தியை, பிரதமர் வேட்பாளர் என நாட்டில் முதன்முதலாக அறிவித்த ஸ்டாலின் தலைமையிலான திமுகவிற்கு, காங்கிரஸ் கட்சி ஒருபோதும் துரோகம் செய்யாது என திமுகவினர் பேசி வந்தனர்.

இப்படியான நிலையில், தேர்தல் முடிவு வெளியான மே 4ம் தேதி, ராகுல்காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில், ‘‘தவெக கட்சியின் இந்த அற்புதமான வெற்றிக்கு நான் விஜயை தொடர்பு கொண்டு வாழ்த்தினேன். மக்களின் இந்த முடிவு, புறக்கணிக்க முடியாத, புறக்கணிக்கப்படவும் கூடாத இளைஞர்களின் எழுச்சிமிக்க குரலைப் பிரதிபலிக்கிறது. காங்கிரஸ் கட்சி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களின் பாதுகாப்பிற்காகவும் சேவைக்காகவும் தொடர்ந்து பாடுபடும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்,’’ எனக்கூறி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். வெறும் பதிவை மட்டும் பகிராமல் அவரது எக்ஸ் பக்கத்தில் இந்த பதிவு Pin செய்யப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து தேர்தல் முடிவு வெளியானதில் இருந்தே, சந்தர்ப்பவாத அரசியலுக்காக தவெகவிற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவிக்குமென்ற கருத்தும், காங்கிரஸ் கட்சி திமுகவிற்கு துரோகம் செய்கிறதெனவும் திமுகவினர் சமூக வலைதளங்களில் கடுமையாக காங்கிரஸ் கட்சியை விமர்சித்து வந்தனர்.

ஆனால், மறுபக்கம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில், ‘பா.ஜ.க தமிழ்நாட்டில் ஆட்சியில் அமரக்கூடாது, ஆட்சி அதிகாரத்தில் அவர்களின் தலையீட்டை தகர்த்து மதச்சார்பற்ற ஆட்சியமைக்க காங்கிரஸ் தவெகவிற்கு ஆதரவு தெரிவிக்கிறது’ என பதிவிட்டு வந்தனர்.

தவெகவிற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு…

தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்க உரிமை கோரி தமிழக ஆளுநருக்கு கடிதம் எழுதியிருந்தார், அதில், ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை நிரூபிக்க இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்க வேண்டுமென கேட்டிருந்தார். மேலும், ஆதரவு தெரிவிக்குமாறு விஜய், காங்கிரஸ், விசிக போன்ற கட்சிகளுக்கு கடிதம் எழுதியிருந்ததாக தகவல்கள் வெளியாகின.

நேற்று, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் கிரிஸ் சோடன்கருடன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்திருந்த, காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், ‘‘தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க தவெக தலைவர் விஜய் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியிடம் ஆதரவு கேட்டுள்ளார். எந்த வகையிலும் பாஜகவும் அதன் கைப்பாவைகளும் தமிழக அரசை வழிநடத்துவதை அனுமதிக்கக் கூடாது என்பதில் இந்திய தேசிய காங்கிரஸ் உறுதியாக உள்ளது. விஜயின் கோரிக்கை குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முடிவெடுக்க வேண்டுமென கட்சித்தலைமை உத்தரவிட்டுள்ளது,’’ எனக்கூறியிருந்தார்.

இப்படியான நிலையில், இன்று மதியம் 12:00 மணியளவில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பணையூரில், தவெக தலைவர் விஜய் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து விஜய் தலைமையிலான தவெக ஆட்சியமைக்க தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர், ‘அரசமைப்பின் மீது நம்பிக்கையில்லாத வகுப்புவாத சக்திகளை சேர்க்கக்கூடாது,’ என்ற நிபந்தனையுடன் ஆதரவு தெரிவித்துள்ளது காங்கிரஸ் கட்சி. இதனால், 10 ஆண்டுகளாக திமுக கூட்டணியுடன் வைத்திருந்த கூட்டணி உறவை காங்கிரஸ் முறித்துள்ளது.

காங்கிரஸின் இந்த முடிவை திமுகவினர் கடுமையாக விமர்சித்து வருவதுடன், காங்கிரஸ் கட்சி தங்களுக்கு துரோகம் செய்துள்ளதாகவும், ‘காங்கிரஸ் துரோகிகள்’ என பதிவிட்டு கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக செய்தித்தொடர்பாளர் சரவணன் அண்ணாத்துரை, காங்கிரஸ் கட்சி மீது கடும் தாக்குதலைத் தொடுத்துள்ளார்.

‘‘பாஜக விமர்சித்தபோதும் திமுக, காங்கிரஸுக்கும் ராகுல் காந்திக்கும் திமுக ஆதரனவளித்துள்ளது. ஆனால், தற்போது காங்கிரஸ் ஒரு நம்பகமற்ற கூட்டாளியாகச் செயல்படுகிறது. 2029-க்குள் காங்கிரஸ் தனது அரசியல் முடிவுகளுக்காக வருந்தும்,’’ என சரவணன் விமர்சித்துள்ளார்.

தவெக ஆட்சியமைக்க இன்னமும் 6 எம்.எல்.ஏக்கள் தேவை…

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. அக்கட்சி 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும், இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள விஜய் அதில் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே, தவெகவின் பலம் 108–ல்  இருந்து 107 ஆக குறையும். சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை எனும் நிலையில் தவெகவுக்கு கூடுதலாக 11 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது.

தற்போது, காங்கிரஸ் தரப்பிலிருந்து 5 எம்எல்ஏக்கள் ஆதரவு கிடைத்துள்ள நிலையில், இன்னும் ஆறு எம்.எல்.ஏக்கள் தேவைப்படுகின்றனர். விஜய் ஆட்சியமைக்க 4 எம்.எல்.ஏக்களை வைத்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மா.கம்யூனிஸ்ட்கள் ஆதரவு தெரிவிக்குமா? இரண்டு எம்.எல்.ஏக்களை வைத்துள்ள வி.சி.க ஆதரவு தெரிவிக்குமா என்ற எதிர்ப்பார்ப்புகள் எழுந்துள்ளன. தமிழ்நாடு அரசியல் களத்தில் நொடிக்கு நொடி மாற்றங்களும், அதிர்ச்சியும் ஆச்சரியங்களும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. பொறுத்திருந்து பார்ப்போம் எந்தக்கட்சிகள் எல்லாம் தவெகவிற்கு ஆதரவு தெரிவிக்குமென்று…

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of திலீபன்

திலீபன்