மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் தமிழக அரசின் தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தொடக்கி வைத்தார். 2026 ஆம் ஆண்டு ஜூன் 22 ஆம் தேதி முதல் பிறந்த குழந்தைகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் தங்க மோதிரம் வழங்கப்படவுள்ளது. இதற்காக தமிழக அரசின் சார்பில் ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 1.28 லட்சம் தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டன.
மதுரையில் தாய்மாமன் சீர்..
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் வகையில் இத்திட்டமான செயல்படவுள்ளது. முதற்கட்டமாக இன்று மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் பிறந்த 30 குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை அணிவித்து தொடக்கி வைத்தார். தமிழகத்தின் முதல் குழந்தையாக அழகுமலை பகுதியைச் சேர்ந்த முத்துயாழினி என்ற பச்சிளம் குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை முதல்வர் விஜய் அணிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளின் பிறப்பை நினைவுகூரும் வகையிலும், தாய்மையின் மகிழ்ச்சியை கொண்டாடும் வகையிலும் திட்டம் செயல்படுத்தப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக ஜூன் 22 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகள் அனைவரும் பயன்பெறும் வகையில், 107 மையங்கள் மூலம் நாளொன்றுக்கு 100 குழந்தைகள் வீதம் இத்தங்க மோதிரங்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
யார் யார் பயன்பெறுவார்கள்.?
தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் தாய்மார்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவார்கள். PICME-யில் பதிவு செய்யப்பட்டு ஆர்.சி.எச் (RCH) அடையாள எண் (RCHID) பெற்றிருக்க வேண்டும். தாய்மார்களின் பிரசவம் அரசு மருத்துவமனைகளில் இருக்க வேண்டும். அரசு மருத்துவ சேவைகளில் மக்களின் நம்பிக்கையை அதிகரிப்பதோடு, மருத்துவமனைகளில் பாதுகாப்பான பிரசவமுறையை ஊக்குவிப்பதாகவும், தாய்-சேய் நலப் பாதுகாப்பை வலுப்படுத்துவதாகவும், குழந்தை நலனில் அரசின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாகவும் இத்திட்டம் அமையவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.