தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வரும் கோயில்களுக்கு அறங்காவலரை நியமனம் செய்யக்கூடிய குழுவினர் 2 ஆண்டு கால பதவிக்காலம் கடந்த ஜூலை 24 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. கோவிலின் திருப்பணிகளை நல்ல முறையில் மேற்கொள்வதற்காக விரைவில் புதிய அறங்காவலர் நியமன குழுவை அமைக்க வேண்டும் என அறநிலையத்துறை ஆணையர் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து தமிழகத்தில் உள்ள அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் வரும் கோயில்களுக்கு அறங்காவலரை நியமிக்க மயிலம் பொம்மபுரம் ஆதீனம் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுக்குறித்து தமிழக அரசு வெளியிட அரசாணையில், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் வரும் கோயில்களுக்கு தகுதியான பரம்பரை முறை வழி சாரா அறங்காவலை தேர்வு செய்து அரசிற்கு பரிந்துரை செய்வதற்காக மாநில அளவில் பிரத்யேக குழுவில், மாநில குழு உறுப்பினராக பாடகர் வேல்முருகன், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ப.ரா. சம்பத், திரைப்பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரம், ஆன்மீகப் பேச்சாளர் மா.சுமதி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள் ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் வருவாய் வரும் கோயில்களுக்கு தகுதியான அறங்காவலரை தேர்வு செய்து அரசுக்கு பரிந்துரை பட்டியலை தயாரித்து வழங்கும் பணிகளை மேற்கொள்வார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அறங்காவலர் தேர்வு குழுவிற்கு எதிரான விமர்சனங்கள்:
தமிழக அரசு அறங்காவலரை நியமனத்தில் சினிமா பிரபலங்கள் இடம் பெற்றுள்ளதாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. ஆன்மீகத்தில் ஈடுபாடுள்ள எத்தனையோ நபர்கள் இருக்கும் போது? ஏன் இவர்களைத் தேர்வு செய்துள்ளீர்கள் என்ற விமர்சனங்கள் எழுந்து வரக்கூடிய சூழலில், இதற்கு பதலளிக்கும் விதமாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் பதிலளித்துள்ளார். அதில், அர்ச்சனா கல்பாத்தி அகோரம் என்பவரை சினிமா தயாரிப்பாளராக மட்டுமே பார்த்து தான் தேவையில்லாத விமர்சனங்களை முன் வைக்கின்றனர். நம்மில் பலருக்கு இரண்டு முகங்கள் உள்ளது. உதாரணமாக எதிர்க்கட்சி தலைவரான உதயநிதி ஸ்டாலினுக்கு தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என்பது மட்டுமல்ல தற்போது எதிர்க்கட்சி தலைவர் என்ற முகம் உள்ளது. இதே போன்று தான் அர்ச்சனா கல்பாத்தி அவர்களுக்கு ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உள்ளது. மேலும் அவரது சொந்த பணத்தில் தமிழகத்தில் உள்ள 10க்கும் மேற்பட்ட கோவில்களில் ஆன்மீக பணிகளை மேற்கொண்டுள்ளார். இதே போன்று சுமதி ஸ்ரீ என்பவர் ஆன்மீக சொற்பொழிவாளர், பாடகர் வேல்முருகனும், சினிமா பாடல்களைத் தவிர்த்து பல்வேறு கோவில்களில் ஆன்மீக பாடல்களைப் பாடியுள்ளார். இவ்வாறு இருக்கும் போது வரக்கூடிய நாட்களில் பல்வேறு கோவில்களில் ஆன்மீகத்தையும், தமிழையும் பெருமைப்படுத்தக்கூடிய வகையில் நிகழ்ச்சிகள் பல நடத்துவதற்கான சூழல் உள்ளதாகவும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் தெரிவிக்கிறார்.
முதல்வருக்கு நன்றி…
ஒரு பாமரனாக பாமரனாக திருக்கோயில்களில் பாடி வரும் எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்ததற்கு உண்மையிலேயே இறைவனுக்கும், அரசுக்கும், முதல்வருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். எல்லாம் வல்ல முருகன் அருளால் எப்பொழுதும் எல்லாருக்கும் நல்லதே நடக்க வேண்டும் என்று பாடகர் வேல்முருகன் தனது நன்றியை அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார். இதே போன்று அர்ச்சனா கல்பாத்தி தெரிவிக்கையில், இந்த நியமனத்தை எனக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு முக்கியமான பொறுப்பாகவே கருதுகிறேன். தமிழ்நாட்டின் திருக்கோயில்கள் நமது பாரம்பரியம், பண்பாடு மற்றும் வாழ்வின் முக்கியமான அடையாளங்களாக விளங்குகின்றன. அவற்றின் சிறப்புக்கு பங்களிக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது என கூறியுள்ளார்.