நீட் மதிப்பெண் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் சேர்வதற்கான மாணவர் பட்டியலை மருத்துவ கவுன்சில் வெளியிட்டுள்ளது. அதன்படி முதற்கட்ட அகில இந்திய கலந்தாய்வு இன்று தொடங்கி ஆகஸ்ட் 17 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மேலும் மாநில அளவிலான கலந்தாய்வு ஆகஸ்ட் 13 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 22 ஆம் தேதி நடைபெறும் என தெரிவித்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்துள்ள 72 ஆயிரத்து 627 மாணவர்களின் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அகில இந்திய ஒதுக்கீட்டு குழு புதிய நடைமுறையை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி (Freeze and Float) இடத்தைத் தக்கவைத்தல் மற்றும் வேறு இடத்திற்கு மாற வாய்ப்பு கோருதல் ஆகிய விருப்பங்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களை வகைப்படுத்துதல், ‘Float’ விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பவர்களுக்கு இணையவழி ஆவணச் சரிபார்ப்பு மற்றும் டிஜிட்டல் முறையில் இடத்தைத் துறக்கும் (seat resignation) வசதி போன்றவை உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கலந்தாய்வு மாநிலத்திற்குமா? என்ற குழப்பங்கள் மாணவர்களுக்கு ஏற்பட்டு வந்த நிலையில் தமிழகத்தில் மாநில தேர்வுக்குழு புதிய அறிவிப்பு ஒன்றை தெரிவித்துள்ளது. தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள கலந்தாய்வு நடைமுறை அகில இந்திய கலந்தாய்வுக்கு மட்டுமே பொருந்தும் என அறிவித்துள்ளது. இதோடு தற்போதைய கல்வியாண்டிற்கான மாநிலத்தின் கலந்தாய்வு நடைமுறையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் பழைய நடைமுறையே தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பச் செயல்முறையின்போதே விண்ணப்பதாரர்கள் தங்கள் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் மாணவர் சேர்க்கை நடைமுறைகளை நிறைவு செய்ய ஒதுக்கப்பட்ட கல்லூரிகளில் விண்ணப்பதாரர்கள் நேரில் ஆஜராகும் போது மட்டுமே அசல் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படுகின்றன எனவும் தெரிவித்துள்ளது. மேலும் எதிர்காலக் கொள்கை மாற்றங்கள் முன்கூட்டியே அறிவிக்கப்படும் எனவும் எதிர்கால தேசிய வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப மாநிலக் கலந்தாய்வு நடைமுறையை மாற்றுவது குறித்த எந்தவொரு முடிவும், மாணவர்களின் நலனை முழுமையாகக் கருத்தில் கொண்ட பின்னரே எடுக்கப்படும் என்று மாநில தேர்வுக் குழு தெரிவித்தது.