போதைப்பொருள் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் கீழ் இந்தியாவில் கைது செய்யப்பட்டு, கொச்சி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த அழைத்து சென்ற சந்தர்ப்பத்தில் அங்கிருந்து தப்பிய இலங்கையர் ஒருவர், கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாதுவ பகுதியிலுள்ள வீடொன்றில் தலைமறைவாக இருந்த நிலையிலேயே, போலீஸார் கைதுசெய்துள்ளனர்.
நடந்தது என்ன?
இலங்கையின் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான வெல்லே சாரங்க என்பவரின் ஆலோசனைக்கு அமைய, 2024ம் ஆண்டு குறித்த நபர் உள்ளிட்ட சிலர் படகொன்றின் ஊடாக போதைப்பொருளை எடுத்து வருவதற்காக இந்திய எல்லைப் பகுதிக்கு சென்றுள்ளனர்.
மாலைத்தீவை அண்மித்த கடலின் படகொன்றில் கொண்டு வந்த 337 கிலோகிராம் போதைப்பொருளை பெற்றுக்கொண்ட இந்த குழுவினர், குறித்த போதைப்பொருளை இந்தியா நோக்கி கொண்டு சென்றுள்ளனர்.
இவ்வாறு இந்தியா நோக்கி கொண்டு செல்லும் சந்தர்ப்பத்தில், போதைப்பொருளுடன் இந்த சந்தேநபர்களை இந்திய கடற்படையினர் கைதுசெய்து, அந்த நாட்டு போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இந்தியாவின் கொச்சி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த அழைத்து செல்லப்பட்ட சந்தர்ப்பத்தில், குறித்த சந்தேகநபர் அங்கிருந்து தப்பியுள்ளமை, விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியேறிய குறித்த நபர், அங்கிருந்த சைக்கிள் ஒன்றை திருடியுள்ளதுடன், அந்த சைக்கிளை சுமார் 9 நாட்கள் செலுத்தி, தமிழ் நாட்டை வந்தடைந்துள்ளதாக சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலத்தில் தெரியவந்துள்ளது.
சுமார் 900 கிலோமீற்றர் சைக்கிளில் பயணித்துள்ளதாகவும் சந்தேகநபர், இலங்கை போலீஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இதையடுத்து, தமிழகத்திலுள்ள மீன்பிடித்துறைமுகமொன்றிற்கு சென்ற குறித்த நபர், அங்கிருந்த 9 படகுகளிலிருந்து எரிபொருளை திருடியுள்ளார்.
அதேநேரம், அதே துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகொன்றை திருடியதுடன், தான் திருடிய எரிபொருளை பயன்படுத்தி இலங்கையை நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
இடையில், இந்திய மீனவர்களை கடலில் சந்தித்த குறித்த நபர், ”இலங்கைக்கு எப்படி செல்வது?” என வினவியுள்ளார்.
சுமார் 3 நாட்கள் சூரிய ஒளியை அவதானித்து தனது பயணத்தை மேற்கொண்டதுடன், இடையில் இலங்கை மீனவர்களை சந்தித்து, அவர்களின் உதவியுடன் இலங்கையை வந்தடைந்துள்ளார்.
இலங்கையின் வென்னப்புவ பகுதியை வந்தடைந்த சந்தேகநபருக்கு திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக, அவர் நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நீர்கொழும்பு மருத்துவமனையில் வைத்து, இலங்கை போலீஸார் குறித்த சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மாரவில நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
நீதவானின் உத்தரவுக்கு அமைய, சிறை வைக்கப்பட்ட சந்தேகநபர், மூன்று மாதங்களின் பின்னர் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும் சந்தர்ப்பத்தில் இலங்கை சிறையிலிருந்தும் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு தப்பியோடிய சந்தேகநபர், வாதுவ பகுதியில் மறைந்திருந்த தருணத்திலேயே போலீஸாரினால் கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக சர்வதேச போலீஸாரின் ஊடாக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சந்தேகநபரை விரைவில் இந்தியாவிடம் ஒப்படைக்க இலங்கை போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.