இலங்கையில் போதைப்பொருள் உள்ளிட்ட நிழலுலக செயற்பாடுகள் காரணமாக நடாத்தப்படும் துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகின்றது.
இதன்படி, இந்த ஆண்டின் இதுவரையான காலம் வரை 21 துப்பாக்கி பிரயோகங்கள் நடாத்தப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
இவ்வாறு நடாத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகங்களில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், 12 பேர் காயமடைந்துள்ளனர்.
இலங்கையில் 2025ம் ஆண்டு முழுவதும் 114 துப்பாக்கி பிரயோகங்கள் நடாத்தப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
இந்த துப்பாக்கி பிரயோகங்களில் 60 பேர் உயிரிழந்துள்ளதுடன், 57 பேர் காயமடைந்துள்ளனர்.
குறிப்பாக போதைப்பொருள் மற்றும் நிழலுலக செயற்பாடுகளினால் ஏற்படுகின்ற மோதல்களே, துப்பாக்கி சூடு நடாத்துவதற்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது என போலீஸார் குறிப்பிடுகின்றனர்.
இந்தியாவில் இருவர் கைது
சட்டவிரோதமான முறையில் படகு மூலம் இந்தியாவிற்கு சென்ற இரண்டு இலங்கையர்கள் இந்திய கரையோர பாதுகாப்பு போலீஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனுஷ்கோடியை அண்மித்த கரையோர பகுதியில் வைத்தே இந்த இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு புறநகர் பகுதியான வத்தளை பகுதியைச் சேர்ந்த 30 மற்றும் 31 வயதான இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வத்தளை பகுதியில் கடந்த புதன்கிழமை நடாத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்திற்கும், தனுஷ்கோடியில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் இடையில் தொடர்புகள் இருக்கக்கூடும் என பாதுகாப்பு பிரிவினர் சந்தேகம் வெளியிடுகின்றனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களுக்கு எதிராகவும் இலங்கை நீதிமன்றங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் இலங்கை பாதுகாப்பு பிரிவினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் கடந்த 23ம் தேதி சுமார் 3 மணிநேரத்திற்குள் இருவேறு பகுதிகளில் துப்பாக்கி சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியிருந்தன.
வத்தளை மற்றும் தெமட்டகொடை ஆகிய பகுதிகளிலேயே இந்த துப்பாக்கி பிரயோக சம்பவங்கள் பதிவாகியிருந்தன.
வத்தளை – பள்ளியாவத்தை பகுதியிலுள்ள ஹோட்டல் வளாகமொன்றில் இரவு 9.30 மணியளவில் துப்பாக்கி பிரயோகமொன்று நடாத்தப்பட்டிருந்தது.
போதைப்பொருள் வர்த்தகராக சந்தேகிக்கப்படும் குடு ரோஷான் என அழைக்கப்படும் நபரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகம் வெளியிடுகின்றனர்.
குடு ரோஷான் என அழைக்கப்படும் நபர் அணிந்திருந்த ஆடைக்கு ஒத்ததான ஆடையொன்றை அணிந்திருந்த மற்றுமொரு நபர் மீதே துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களுக்கு இந்த இருவரையும் அடையாளம் கண்டுக்கொள்வதில் ஏற்பட்ட குழப்பம் காரணமாகவே மற்றைய நபர் மீது துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவத்தில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, கொழும்பு – தெமட்டகொடை பகுதியில் அன்றைய தினம் மாலை வேளையில் துப்பாக்கி சூட்டு சம்பவமொன்று பதிவாகியிருந்தது.
மோட்டார் சைக்கிளில் வருகைத் தந்த இரண்டு சந்தேகநபர்கள் வீதியிலிருந்த ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் நடாத்தியிருந்தனர்.
துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த நபர் அந்த இடத்தை விட்டு தப்பிச் செல்ல முயற்சி செய்கின்ற போதிலும், துப்பாக்கிதாரிகள் அவரை துறத்தி துறத்தி துப்பாக்கி பிரயோகம் நடாத்தியுள்ளதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதேவேளை, தேவேந்திரமுனை பகுதியிலுள்ள விஷ்ணு தேவாலயத்தின் வருடாந்த உற்சவம் தற்போது ஆரம்பமாகியுள்ள நிலையில், அந்த பகுதிக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரராக விளங்கும் கஞ்சிபானை இம்ரான் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட நபரொருவரினால் அந்த தேவாலயத்தின் பிரதானிக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
தேவாலயத்தின் காவடி நடன குழு குறைக்கப்பட்டு, வருடாந்த உற்சவம் நடாத்தப்படுகின்றமையை அடுத்தே இந்த மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், தேவேந்திரமுனை தேவாலயத்தின் வருடாந்த உற்சவம் தொடர்பில் நிழலுலக தலைவர்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடு தற்போது துப்பாக்கி பிரயோகம் வரை வலுப்பெற்றுள்ளது.
தேவேந்திரமுனை தேவாலயத்திற்கு அருகிலுள்ள வீடொன்றின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் அண்மையில் துப்பாக்கி பிரயோகத்தை நடாத்தியிருந்தனர்.
தேஹிபாலே மல்லி மற்றும் கஞ்சிபானி இம்ரான் ஆகிய நிழலுலக தலைவர்கள் இந்த சம்பவத்தின் பின்னணியில் இருக்கக்கூடும் என போலீஸார் சந்தேகம் வெளியிடுகின்றனர்.
இந்த சம்பவங்கள் தொடர்பில் இலங்கை போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.