பயணிகளை தவறாக வழிநடத்தும் விளம்பரங்கள், நியாயமற்ற வணிக நடைமுறைகள், ஒருதலைப்பட்சமான ஒப்பந்த விதிமுறைகள் மற்றும் செயலியில் பயனர்களை குறிப்பிட்ட முடிவுகளை எடுக்கத் தூண்டும் முறைகளைப் பயன்படுத்தியதாகக் கூறி, ரேபிடோ பயண சேவையை இயக்கும் ரோப்பன் டிரான்ஸ்போர்டேஷன் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையை மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் மேற்கொண்டுள்ளதாக மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் செப்டம்பர் 15 அன்று தெரிவித்தது.
கூடுதல் கட்டணம் செலுத்தத் தூண்டியதாக குற்றச்சாட்டு:
ரேபிடோ செயலியில் பயணத்தை முன்பதிவு செய்யும் போது முதலில் ஒரு கட்டணம் காட்டப்பட்டதாகவும், அந்தத் தொகைக்கு ஓட்டுநர்கள் பயணத்தை ஏற்காத நிலையில், பயணிகள் கூடுதல் தொகையை வழங்குமாறு ஊக்குவிக்கப்பட்டதாகவும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே பயண முன்பதிவைத் தொடங்கியுள்ள நிலையில், கூடுதல் பணம் செலுத்தாவிட்டால் பயணம் கிடைக்காமல் போய்விடும் என்ற மனநிலையை ஏற்படுத்தும் வகையில் இந்த நடைமுறை அமைந்திருக்கலாம் என ஆணையம் கூறியுள்ளது.
பயனர்களிடம் தயக்கம் அல்லது மன அழுத்தத்தை உருவாக்கி, அவர்கள் விரும்பாத முடிவை எடுக்கத் தூண்டும் இந்த முறையை “உறுதிப்படுத்துவதற்கான மன அழுத்தம்” என்ற வகை நடைமுறையாக ஆணையம் வகைப்படுத்தியுள்ளது.
கட்டணத்தை பயனர்களே நிர்ணயிக்கும் வசதியிலும் ஆய்வு:
ரேபிடோ செயலியில் உள்ள “விலையை நீங்களே நிர்ணயிக்கலாம்” என்ற வசதியையும் ஆணையம் ஆய்வு செய்தது.இந்த வசதியில் இடம்பெற்றுள்ள வண்ண அடிப்படையிலான கட்டணத் தேர்வு அமைப்பு, பயணிகள் அதிக தொகையை தேர்வு செய்யும் வகையில் அவர்களின் முடிவை பாதிக்கக்கூடும் என ஆணையம் தெரிவித்துள்ளது.
பயனர்களின் தேர்வில் தேவையற்ற தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த நடைமுறையை “இணையதள இடைமுகத் தலையீடு” என்ற வகைக்குள் ஆணையம் கொண்டு வந்துள்ளது. இது 2023-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தவறான டிஜிட்டல் வடிவமைப்பு நடைமுறைகளைத் தடுக்கும் வழிகாட்டுதல்களின் கீழ் வருகிறது.
கூடுதல் தொகையை செலுத்துவது பயணிகளின் விருப்பம் மட்டுமே என ரேபிடோ நிறுவனம் தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், கூடுதல் தொகையை செலுத்துவதன் மூலம் பயணத்தைப் பெறுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது என்பதை நிரூபிக்கும் போதுமான தரவுகளை நிறுவனம் சமர்ப்பிக்கவில்லை என ஆணையம் தெரிவித்துள்ளது.
பயணம் தொடங்கும் முன்பே கூடுதல் தொகை ஏன்?
2025-ஆம் ஆண்டுக்கான மோட்டார் வாகனப் பயண சேவை ஒருங்கிணைப்பாளர்களுக்கான வழிகாட்டுதல்களையும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதன்படி, ஓட்டுநருக்கு கூடுதல் தொகை அல்லது பரிசுத் தொகை வழங்கும் வசதி பயணம் நிறைவடைந்த பிறகே பயணிக்கு வழங்கப்பட வேண்டும். பயணத்தை முன்பதிவு செய்யும் நேரத்திலோ அல்லது பயணம் நடைபெறும் போதோ இதற்கான கோரிக்கை இருக்கக்கூடாது என வழிகாட்டுதல்கள் குறிப்பிடுகின்றன.
மேலும், முன்பதிவு செய்யும்போது பயணிக்குக் காட்டப்படும் கட்டணத்தில் பயணிக்கும் தூரம், பயண நேரம், போக்குவரத்து நெரிசல் மற்றும் சுங்கக் கட்டணம் போன்ற காரணிகள் ஏற்கனவே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன என ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனால், பயணம் தொடங்குவதற்கு முன்பே பயணிகளிடம் கூடுதல் தொகையை செலுத்துமாறு கேட்பது தொடர்பாக நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.
ரேபிடோ மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தனிப்பட்ட ஒன்றல்ல. பயண முன்பதிவுக்கு முன்பே கூடுதல் தொகை செலுத்துமாறு பயணிகளை ஊக்குவிக்கும் நடைமுறைகள் மற்றும் கட்டண நிர்ணய முறைகள் குறித்து நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் பல்வேறு பயண சேவை நிறுவனங்களிடம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
ஊபர், ஓலா, ரேபிடோ மற்றும் நம்ம யாத்ரி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ஏற்கனவே ஆணையம் விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதில் ஊபர் மற்றும் ஓலா நிறுவனங்களின் நடைமுறைகள் தொடர்பான ஆய்வு தொடர்ந்து நடைபெற்று வருவதாக நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
புகார் அளிப்பது எப்படி?
தவறான விளம்பரங்கள், நியாயமற்ற வணிக நடைமுறைகள் அல்லது நுகர்வோர் உரிமை மீறல்கள் தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.
இதற்காக தேசிய நுகர்வோர் உதவி மையத்தின் 1915 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளலாம் என மத்திய நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.