நம்முடைய அன்றாட தேவைகளில் முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது பெட்ரோல், டீசல். ஆம் பலரது வீடுகளில் ஒன்றுக்கு அதிகமாக இருசக்கர வாகனங்கள் இருப்பதால், அருகாமையில் உள்ள கடைகளுக்குச் செல்ல வேண்டும் என்றால் கூட இதைத் தான் எடுத்துச் செல்கிறார்கள். இதனால் உடல் அளவிலும் மனதளவிலும் சோம்பேறித்தனமாக மாறிவிடுகிறோம். வாகனங்கள் இல்லாமல் வெளியில் செல்ல முடியாத மனநிலையில் இருக்கும் போது சமானிய மக்களுக்கு பேரிடியாக அமைகிறது பெட்ரோல் டீசல் விலை உயர்வு. ஈரான் போர் அந்த நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கிவிட்டது. முதலில் எல்.பி.ஐ தட்டுப்பாடு, சிலிண்டர் உயர்வு என பாதிப்புகளைச் சந்தித்த மக்களுக்கு தற்போது பெட்ரோல், டீசல் விவை உயர்வு பேரிடியாக வந்துள்ளது.
குறிப்பாக இந்தியாவில் பாரத் பெட்ரோலியம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ஹெச்பி ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. இதுவரை கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் மாறவே இல்லை. இந்நிலையில் பிப்ரவரி 28 ல் தொடங்கிய ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதனால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்து வருவதால் நயாரா, ஷெல் போன்ற தனியார் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தின. ஆனாலும் பொதுத்துறை நிறுவனங்கள் கடந்த 3 மாதங்களாக விலையை உயர்த்தாமல் இருந்து வந்தன. ஈரான் போர் முடிந்து கச்சா எண்ணெய் சப்ளை சரியாதவதற்கான அறிகுறிகளே இல்லை. இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடி மக்கள் பெட்ரோல், டீசலை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இந்தியாவில் கடந்த மே 15 ல் பெட்ரோல் டீசல் விலையானது லிட்டருக்கு 3 ரூபாய் 6 காசு உயர்ந்தால் ஒரு லிட்டர் 103.90 ரூபாய்க்கு விற்பனையானது. இதே போல் டீசல் லிட்டருக்கு 3 ரூபாய் 8 காசு அதிகரித்து ஒரு லிட்டர் 95.47 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில் மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் இரண்டாவது முறையாக பெட்ரோல் விலையை லிட்டருக்கு 87 காசுகள் அதிகரித்து ரூ.104.49 விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 91 காசுகள் அதிகரித்து 96.11 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பட்ஜெட்டில் வாழ்க்கை நடத்தும் பல சமானிய குடும்பங்களுக்கு பெட்ரோல், டீசல் விலையானது பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
பலதரப்பட்ட குடும்பங்களின் பட்ஜெட்டில் கை வைப்பதோடு மட்டுமல்ல, அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலையும் கணிசமாக உயரக்கூடும். குறிப்பாக வாடகை கார், ஸ்விக்கி, சோமாட்டோ ஆர்டர் போன்றவற்றை அதிக விலைக் கொடுத்து வாங்க நேரிடும்.