கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய பளுதூக்குதல் வீரர்கள் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மீராபாய் சானு, பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவில் தங்கப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் அவர் தொடர்ந்து மூன்றாவது முறையாக காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

2018 கோல்ட் கோஸ்ட் மற்றும் 2022 பர்மிங்காம் காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்றிருந்த மீராபாய் சானு, தற்போது கிளாஸ்கோ போட்டியிலும் தங்கத்தை கைப்பற்றி தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்துள்ளார். காமன்வெல்த் போட்டிகளில் தொடர்ந்து மூன்று முறை தங்கம் வென்ற இந்திய விளையாட்டு வீராங்கனைகளில் ஒருவராக அவர் இடம்பிடித்துள்ளார். கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்குக் கிடைத்த முதல் தங்கப் பதக்கமும் இதுவாகும்.
மீராபாய் சானுவின் வெற்றியைப் பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி, தனது X தள பதிவில், “இந்திய பளுதூக்குதல் வரலாற்றில் மேலும் ஒரு பெருமைக்குரிய அத்தியாயம். 48 கிலோ எடைப்பிரிவில் மீராபாய் சானு அபாரமான செயல்பாட்டை வெளிப்படுத்தி தங்கப் பதக்கம் வென்றுள்ளார். தொடர்ந்து காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்று, ஒட்டுமொத்தமாக நான்கு காமன்வெல்த் பதக்கங்களைப் பெற்றுள்ள அவர், ஒவ்வொரு இந்தியருக்கும் ஒரு உத்வேகமாகத் திகழ்கிறார். அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.
போட்டிக்குப் பிறகு பேசிய மீராபாய் சானு, தனது அதிகபட்ச திறனை முழுமையாகப் பயன்படுத்தாமல், உடல்தகுதியைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தியதாகத் தெரிவித்தார். வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை கருத்தில் கொண்டு, நீண்டகால இலக்குடன் செயல்படுவதாகவும் அவர் கூறினார்.
மணிப்பூரின் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள நோங்க்போக் கக்சிங் கிராமத்தில் 1994ஆம் ஆண்டு பிறந்த மீராபாய் சானு, சிறுவயதிலிருந்தே பளுதூக்குதலில் ஆர்வம் கொண்டிருந்தார். இந்திய பளுதூக்குதல் முன்னோடி குஞ்சராணி தேவியின் சாதனைகள் அவருக்கு மிகப்பெரிய ஊக்கமாக அமைந்தன. 2017 உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற அவர், 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவின் பெருமையை உயர்த்தினார்.

இதனிடையே, தமிழகத்தைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டியும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் அசத்தி, ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். அவர் ஸ்நாட்ச் பிரிவில் 126 கிலோவும், கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 160 கிலோவும் தூக்கி, மொத்தம் 286 கிலோ எடையைப் பதிவு செய்தார்.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த 26 வயதான ராஜா முத்துப்பாண்டியின் வெற்றி பல்வேறு சவால்களைக் கடந்து வந்ததாகும். 2019ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான முழங்கை காயம் மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற அறுவை சிகிச்சை காரணமாக அவரது விளையாட்டு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனால் 2022 பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியிலும் பங்கேற்க முடியவில்லை. பல போராட்டங்களுக்குப் பிறகு மீண்டும் சர்வதேச அரங்கில் பதக்கம் வென்று அவர் தனது திறமையை நிரூபித்துள்ளார்.
ராஜா முத்துப்பாண்டியின் வெற்றியைப் பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி, “காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான 65 கிலோ பளுதூக்குதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டிக்கு வாழ்த்துகள். அவரது கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சி இந்த வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளன. அவரது எதிர்கால முயற்சிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.
ராஜா முத்துப்பாண்டியின் சாதனையைப் பாராட்டிய தமிழக முதலமைச்சர் விஜய், அவருக்கு தமிழக அரசின் சார்பில் ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். “தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளார். அவரது வெற்றி தமிழக இளைஞர்களுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும்” என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.மீராபாய் சானுவின் வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கமும், ராஜா முத்துப்பாண்டியின் போராட்டத்துக்குப் பிறகு கிடைத்த வெள்ளிப் பதக்கமும், கிளாஸ்கோ 2026 காமன்வெல்த் போட்டிகளில் இந்திய பளுதூக்குதலின் வலிமையை மீண்டும் உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளது. இந்த வீரர்களின் சாதனைகள் இந்திய விளையாட்டு வரலாற்றில் முக்கிய இடத்தைப் பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.