இலங்கை தமிழ் தேசிய அரசியலின் முக்கிய நபரான விளங்கிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தனது 69வது வயதில் காலமானார்.
கடந்த சில மாதங்களாக சுகயீனமுற்றிருந்த நிலையில், அவர் நேற்றிரவு காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்திருந்த நிலையில், அண்மை காலமாக உடல் நலக் குறைவு காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருந்தார்.
இந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காத நிலையில், அவர் வீட்டுக்கு அழைத்து வரப்பட்ட பின்னணியிலேயே நேற்றிரவு அவர் தனது வீட்டில் வைத்து இறையடி எய்தினார்.
வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் களத்தில் நீண்ட கால அனுபவத்தை கொண்ட மூத்த அரசியல்வாதியாவார்.
தமிழர்களின் உரிமை போராட்டத்திற்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்த எம்.கே.சிவாஜிலிங்கம், ராணுவம், போலீஸாரின் அச்சுறுத்தல்களுக்கும் தொடர்ச்சியாக உள்ளாகியிருந்தார்.
இலங்கையில் 3 தசாப்தங்களுக்கு மேல் இடம்பெற்ற உள்நாட்டு போர் மௌனிக்கப்பட்டதை அடுத்து, ராணுவம், போலீஸார் மற்றும் புலனாய்வு பிரிவுகளின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் மாவீரர் தினம், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினம் உள்ளிட்ட பல்வேறு தமிழ்த் தேசிய நினைவேந்தல்களை முன்னின்று நடாத்தியிருந்தார்.
இதனால், தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டும், விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டும் தனது அரசியல் நகர்வுகளை முன்னெடுத்திருந்த ஒரு அரசியல்வாதியாக எம்.கே.சிவாஜிலிங்கம் திகழ்ந்தார்.
ரெலோ அமைப்பின் மூத்த உறுப்பினராக இருந்த எம்.கே.சிவாஜிலிங்கம், 2001 மற்றும் 2004ம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான மக்கள் சேவையாற்றியிருந்தார்.
2013ம் ஆண்டு நடைபெற்ற வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட எம்.கே.சிவாஜிலிங்கம், யாழ். மாவட்டத்தில் போட்டியிட்டு மாகாண சபை உறுப்பினராகவும் கடமையாற்றியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, ரெலோ கட்சியிலிருந்து விலகிய அன்னார், தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக கடமையாற்றியிருந்தார்.
இறுதியாக நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்டு வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினராக தெரிவாகி, அதன் தவிசாளராக செயற்பட்டிருந்தார்.
அன்னார் மருத்துவமனையில் தனது இறுதி நொடிகளை கடத்தி வந்த தருணத்தில் கூட, அவரது மனையியிடம் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை நடாத்தியிருந்தனர்.
அன்னாரின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் தமது இறுதி அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளைய தினம் வல்வெட்டித்துறை பகுதியிலுள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெறவுள்ளது.
அன்னாரின் புதவுடல் வல்வெட்டித்துறை சந்தியில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் ஊறணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளதாக உறவினர்கள் அறிவித்துள்ளனர்.