விண்வெளித் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் தன்னிறைவை அதிகரிக்கும் முயற்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) மற்றொரு முக்கியமான சாதனையைப் படைத்துள்ளது. நாட்டின் சொந்த செயற்கைக்கோள் வழிகாட்டி அமைப்பான NavIC-ஐ மேம்படுத்தும் வகையில், என்.வி.எஸ்-03 என்ற புதிய வழிகாட்டி செயற்கைக்கோளை ஜி.எஸ்.எல்.வி-எஃப்18 ராக்கெட் மூலம் இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. இந்த ஏவுதல் அக்டோபர் 30, 2026 வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஸ்ரீஹரிகோட்டாவில் நடைபெற்றது.
ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து இரவு 11.51 மணிக்கு ராக்கெட் விண்ணை நோக்கிப் புறப்பட்டது. ஏவப்பட்ட சுமார் 18 நிமிடங்களில், 2,232 கிலோ எடையுள்ள என்.வி.எஸ்-03 செயற்கைக்கோள் திட்டமிடப்பட்ட புவி ஒத்திசைவு இடைநிலைச் சுற்றுப்பாதையில் (Geosynchronous Transfer Orbit – GTO) வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது.
இந்த ஏவுதல் இந்தியாவின் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் திட்டத்தில் 20-வது பயணமாகும். மேலும், அடுத்த தலைமுறை வழிகாட்டி செயற்கைக்கோள்களை உருவாக்கி, நாட்டின் செயற்கைக்கோள் வழிகாட்டி கட்டமைப்பை வலுப்படுத்தும் இஸ்ரோவின் முயற்சியில் முக்கியத் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.
ஜி.எஸ்.எல்.வி-எஃப்18 ராக்கெட்டின் சிறப்பம்சங்கள் என்ன?
என்.வி.எஸ்-03 செயற்கைக்கோளை விண்ணுக்குக் கொண்டு சென்ற ஜி.எஸ்.எல்.வி-எஃப்18 ராக்கெட், அதிக எடையுள்ள செயற்கைக்கோள்களை உயரமான சுற்றுப்பாதைகளில் நிலைநிறுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டதாகும். தகவல் தொடர்பு, வானிலை கண்காணிப்பு மற்றும் வழிகாட்டி சேவைகளுக்கான செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதில் இந்த வகை ராக்கெட்டுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
ஜி.எஸ்.எல்.வி-எஃப்18 என்பது GSLV Mark II வரிசையைச் சேர்ந்த மூன்று நிலைகளைக் கொண்ட ஏவுகலமாகும். சுமார் 50 மீட்டர் உயரம் கொண்ட இந்த ராக்கெட்டின் மொத்த எடை ஏவுதலின்போது சுமார் 420 டன்னாக இருக்கும்.
இதன் செயல்பாடு மூன்று முக்கிய நிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் நிலையில் திட எரிபொருளால் இயங்கும் மைய ராக்கெட் பகுதியுடன் நான்கு திரவ எரிபொருள் பூஸ்டர்கள் இணைக்கப்பட்டுள்ளன. இவை ராக்கெட்டுக்குத் தேவையான ஆரம்ப உந்துவிசையை வழங்கி பூமியின் ஈர்ப்பு விசையைக் கடந்து மேலே செல்ல உதவுகின்றன.
முதல் நிலை செயல்பாடு நிறைவடைந்ததும், இரண்டாவது நிலையில் உள்ள திரவ எரிபொருள் இயந்திரம் ராக்கெட்டின் வேகத்தை அதிகரித்து அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்கிறது. இறுதி நிலையில் திரவ ஹைட்ரஜன் மற்றும் திரவ ஆக்சிஜனைப் பயன்படுத்தும் கிரையோஜெனிக் இயந்திரம் செயல்படுகிறது.
குறிப்பாக, கிரையோஜெனிக் இயந்திரம் அதிக ஆற்றலை வழங்கும் திறன் கொண்டது. அதிக எடையுள்ள செயற்கைக்கோள்களைத் தேவையான வேகத்துடன் உயரமான சுற்றுப்பாதைகளுக்குக் கொண்டு செல்வதற்கு இந்தத் தொழில்நுட்பம் உதவுகிறது.
இவ்வாறு மூன்று நிலைகளும் ஒன்றன்பின் ஒன்றாகச் செயல்பட்டு, என்.வி.எஸ்-03 செயற்கைக்கோளை அதன் இலக்கிடப்பட்ட இடைநிலைச் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்துவதில் ஜி.எஸ்.எல்.வி-எஃப்18வெற்றி பெற்றுள்ளது.

NVS-03 செயற்கைக்கோள் எதற்காக உருவாக்கப்பட்டது?
இந்தியாவின் இரண்டாம் தலைமுறை வழிகாட்டி செயற்கைக்கோள் திட்டத்தின் மூன்றாவது விண்கலம்தான் என்.வி.எஸ்-03 . நாட்டின் பிராந்திய செயற்கைக்கோள் வழிகாட்டி அமைப்பான NavIC-ன் செயல்பாட்டைத் தொடர்ந்து பராமரிப்பதுடன், அதன் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்துவதும் இதன் முக்கிய நோக்கமாகும்.
NavIC என்பதன் விரிவாக்கம் Navigation with Indian Constellation என்பதாகும். இந்தியாவுக்கென தனியாக உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, செயற்கைக்கோள்களின் உதவியுடன் இருப்பிடத்தைக் கண்டறியவும், பயண வழிகளைத் தீர்மானிக்கவும், துல்லியமான நேரத் தகவல்களைப் பெறவும் உதவுகிறது.
உலகின் பல்வேறு நாடுகள் தங்களுக்கென தனித்துவமான செயற்கைக்கோள் வழிகாட்டி அமைப்புகளைக் கொண்டுள்ளன. அமெரிக்காவின் GPS, ரஷ்யாவின் GLONASS, சீனாவின் BeiDou ஆகியவை இதற்கான உதாரணங்களாகும். அந்த வரிசையில் இந்தியாவின் சொந்த தொழில்நுட்ப அமைப்பாக NavIC செயல்படுகிறது.
இந்தியாவின் முழுப் பகுதிக்கும், நாட்டின் எல்லைகளுக்கு அப்பால் சுமார் 1,500 கிலோமீட்டர் வரையிலான பிராந்தியத்திற்கும் வழிகாட்டி சேவைகளை வழங்கும் வகையில் NavIC உருவாக்கப்பட்டுள்ளது.
இத்தகைய அமைப்பில் என்.வி.எஸ்-03 இணைக்கப்படுவது மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில், வழிகாட்டி சேவைகள் இடையூறின்றித் தொடர்ந்து கிடைக்க செயற்கைக்கோள்களின் எண்ணிக்கையும் அவற்றின் தொழில்நுட்பத் திறனும் போதுமானதாக இருக்க வேண்டும்.
இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அணுக்கடிகாரம்!
என்.வி.எஸ்-03 செயற்கைக்கோளின் முக்கியத் தொழில்நுட்ப அம்சங்களில் ஒன்று உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ரூபிடியம் அணுக்கடிகாரம் (Rubidium Atomic Clock) ஆகும். இதனுடன் தேவையான நேரக் கணிப்பு வசதிக்காக வெளிநாட்டிலிருந்து பெறப்பட்ட அணுக்கடிகாரங்களும் இடம்பெற்றுள்ளன.
செயற்கைக்கோள் வழிகாட்டி அமைப்பில் நேரக் கணிப்பு என்பது மிகவும் முக்கியமான அம்சமாகும். ஒரு நபர் அல்லது வாகனம் பூமியில் எந்த இடத்தில் இருக்கிறது என்பதைக் கண்டறிய, பல செயற்கைக்கோள்களிலிருந்து அனுப்பப்படும் சமிக்ஞைகள் பயன்படுத்தப்படுகின்றன.
ஒவ்வொரு செயற்கைக்கோளும் தனது இருப்பிடத் தகவலுடன் சமிக்ஞையை அனுப்பிய நேரத்தையும் பூமியில் உள்ள கருவிகளுக்கு வழங்குகிறது. அந்தச் சமிக்ஞைகள் பூமியை வந்தடைய எடுத்துக்கொள்ளும் நேரத்தின் அடிப்படையில், பெறும் கருவிகள் செயற்கைக்கோளிலிருந்து உள்ள தூரத்தைக் கணக்கிடுகின்றன. பல செயற்கைக்கோள்களின் தகவல்களை ஒன்றிணைத்து இறுதியாகத் துல்லியமான இருப்பிடம் கணக்கிடப்படுகிறது.
இந்தக் கணக்கீட்டில் ஒரு நொடியின் மிகச்சிறிய பகுதிக்குள் ஏற்படும் நேர வேறுபாடுகூட இருப்பிடத் துல்லியத்தைப் பாதிக்கக்கூடும். இதனால்தான் செயற்கைக்கோள்களில் அணுக்கடிகாரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்தியாவிலேயே இத்தகைய முக்கியமான தொழில்நுட்பக் கருவியை உருவாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் வெளிநாட்டு உற்பத்தி மற்றும் தொழில்நுட்பங்களைச் சார்ந்திருக்கும் நிலையைப் படிப்படியாகக் குறைத்து, விண்வெளித் துறையில் உள்நாட்டு உற்பத்தித் திறனை அதிகரிக்க முடியும்.
L1 அதிர்வெண் அறிமுகம்: ஸ்மார்ட்போன்களிலும் NavIC பயன்பாடு அதிகரிக்குமா?
என்.வி.எஸ்-03 செயற்கைக்கோளில் இடம்பெற்றுள்ள மற்றொரு முக்கியமான மாற்றம் L1 வழிகாட்டி அதிர்வெண் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாகும்.
இதுவரை NavIC அமைப்பில் பயன்படுத்தப்பட்ட L5 மற்றும் S-band அதிர்வெண்களுடன் தற்போது L1 அதிர்வெண்ணும் இணைக்கப்பட்டுள்ளது. உலகளவில் பல்வேறு செயற்கைக்கோள் வழிகாட்டி அமைப்புகள் L1 அதிர்வெண்ணைப் பயன்படுத்தி வருகின்றன.
இதனால், இந்தப் புதிய வசதி NavIC அமைப்பை ஆதரிக்கும் சாதனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஸ்மார்ட்போன்கள், வாகன வழிகாட்டி கருவிகள் மற்றும் இருப்பிட அடிப்படையிலான மின்னணு சாதனங்களில் இந்தியாவின் சொந்த வழிகாட்டி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கலாம்.
இதன் மூலம் இந்தியாவில் தயாரிக்கப்படும் மின்னணு சாதனங்களில் NavIC தொழில்நுட்பத்தை இணைப்பதற்கும் புதிய வாய்ப்புகள் உருவாகும்.
இருப்பினும், L1 அதிர்வெண் அறிமுகப்படுத்தப்பட்டதன் காரணமாக அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் இந்தச் சேவை தானாகவே கிடைத்துவிடாது. NavIC சமிக்ஞைகளைப் பெறுவதற்குத் தேவையான வன்பொருள் மற்றும் மென்பொருள் வசதிகள் அந்தந்த சாதனங்களில் இருக்க வேண்டும்.
அன்றாட வாழ்க்கையில் NavIC மூலம் கிடைக்கும் நன்மைகள்!
செயற்கைக்கோள் வழிகாட்டி அமைப்புகள் இன்று மனிதர்களின் அன்றாடப் பயன்பாட்டில் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளன. ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வது முதல் பெரிய அளவிலான போக்குவரத்தைக் கண்காணிப்பது வரை பல்வேறு தேவைகளுக்கு இத்தொழில்நுட்பம் பயன்படுகிறது.
சாலைப் போக்குவரத்தில் வாகனங்கள் பயணிக்கும் இடத்தை அறிந்துகொள்ளவும், சரியான பாதையைத் தேர்வு செய்யவும், சரக்குகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களைக் கண்காணிக்கவும் செயற்கைக்கோள் வழிகாட்டி சேவைகள் உதவுகின்றன.
ரயில்வே துறையில் ரயில்களின் இருப்பிடத்தை அறிதல் மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல் போன்ற பணிகளுக்கு இத்தகைய தகவல்கள் பயன்படுகின்றன. கடல் போக்குவரத்திலும் கப்பல்கள் தங்களின் இருப்பிடத்தைத் துல்லியமாகக் கண்டறிய செயற்கைக்கோள் வழிகாட்டி அமைப்புகள் உதவுகின்றன. குறிப்பாக, கடலுக்குச் செல்லும் மீனவர்கள் தங்களின் இருப்பிடத்தை அறிந்துகொள்வதற்கும் வழிகாட்டி தொழில்நுட்பம் பயனுள்ளதாக இருக்கும்.
இயற்கைப் பேரிடர்களின்போது இதன் தேவை மேலும் அதிகரிக்கிறது. வெள்ளம், புயல் போன்ற பேரிடர்கள் ஏற்படும்போது பாதிக்கப்பட்ட இடங்களைக் கண்டறிதல், மீட்புப் பணியாளர்களின் நகர்வுகளைக் கண்காணித்தல் மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்தல் போன்றவற்றுக்கு துல்லியமான இருப்பிடத் தகவல்கள் உதவுகின்றன.
மேலும், தொலைத்தொடர்பு வலையமைப்புகள் சீராக இயங்குவதற்குத் தேவையான நேர ஒத்திசைவிலும் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் முக்கியப் பங்கு வகிக்கிறது.
எனவே, NavIC என்பது வெறும் இருப்பிடத்தைக் கண்டறியும் தொழில்நுட்பம் மட்டுமல்ல. நாட்டின் போக்குவரத்து, தகவல் தொடர்பு, பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை போன்ற முக்கியத் துறைகளுக்கு ஆதரவளிக்கும் உள்கட்டமைப்பாகவும் விளங்குகிறது.
என்.வி.எஸ்-02 செயற்கைக்கோளில் ஏற்பட்ட கோளாறு: என்.வி.எஸ்-03 -ல் செய்யப்பட்ட மாற்றங்கள் என்ன?
என்.வி.எஸ்-03 ஏவுதலுக்கு முந்தைய பின்னணியில், அதன் முன்னோடியான NVS-02 செயற்கைக்கோள் சந்தித்த தொழில்நுட்பப் பிரச்சினையும் முக்கியத்துவம் பெறுகிறது.
2025 ஜனவரி மாதம் GSLV-F15 ராக்கெட் மூலம் NVS-02 செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. செயற்கைக்கோள் ஆரம்பச் சுற்றுப்பாதையை வெற்றிகரமாக அடைந்தபோதிலும், திட்டமிட்ட இறுதி சுற்றுப்பாதையை அடைவதற்கான உயர்த்தும் நடவடிக்கைகள் எதிர்பார்த்தபடி நடைபெறவில்லை.
இதற்கான காரணத்தை ஆராய்ந்தபோது, செயற்கைக்கோளின் ஆக்சிஜனேற்ற எரிபொருள் குழாயில் பொருத்தப்பட்டிருந்த பைரோடெக்னிக் வால்வுக்குத் தேவையான மின்சார இயக்கச் சமிக்ஞை சென்றடையாதது தெரியவந்தது. இதனால் செயற்கைக்கோளின் உந்துவிசை அமைப்பு தேவையான முறையில் செயல்படவில்லை.
விண்வெளி ஆராய்ச்சியில் ஒவ்வொரு சிறிய தொழில்நுட்பக் கூறும் எவ்வளவு முக்கியமானது என்பதை இந்தச் சம்பவம் வெளிப்படுத்தியது. செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டாலும், அதன் உள்ளமைப்பில் ஏற்படும் சிறிய கோளாறுகூட அடுத்தகட்டச் செயல்பாடுகளைப் பாதிக்கலாம்.
இந்தப் பிரச்சினையைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், அடுத்தடுத்த செயற்கைக்கோள் திட்டங்களில் தேவையான பொறியியல் மாற்றங்களைச் செய்ய இஸ்ரோ நடவடிக்கை எடுத்தது.
அதன்படி, என்.வி.எஸ்-03 செயற்கைக்கோளில் தொடர்புடைய பைரோடெக்னிக் வால்வுகள் ஏவுதலுக்கு முன்பே திறந்த நிலையில் வைக்கப்படும் வகையில் மாற்றியமைக்கப்பட்ட ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டது. முந்தைய செயற்கைக்கோளில் ஏற்பட்ட சிக்கல் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான நடவடிக்கையாக இது அமைந்தது.
தற்போது என்.வி.எஸ்-03 வெற்றிகரமாக இடைநிலைச் சுற்றுப்பாதையை அடைந்துள்ளதால், அடுத்தகட்டச் செயல்பாடுகள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
வண்ணில் செலுத்தப்பட்ட பிறகு செயற்கைக்கோளுக்கு என்ன நடக்கும்?
ராக்கெட்டில் இருந்து செயற்கைக்கோள் வெற்றிகரமாகப் பிரிந்து விண்ணில் நிலைநிறுத்தப்படுவது அதன் பணியின் முதல் கட்டமாகும். அதன் பிறகு, செயற்கைக்கோள் தனது இறுதி செயல்பாட்டு இடத்தை அடைவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
தற்போது என்.வி.எஸ்-03 புவி ஒத்திசைவு இடைநிலைச் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அங்கிருந்து தனது இறுதி புவி ஒத்திசைவு சுற்றுப்பாதையை அடைவதற்கு செயற்கைக்கோள் பல கட்டங்களில் சுற்றுப்பாதையை உயர்த்த வேண்டும்.
இதற்காக அதன் உந்துவிசை இயந்திரம் பயன்படுத்தப்படும். ஒவ்வொரு கட்டத்திலும் செயற்கைக்கோளின் உயரம் மற்றும் சுற்றுப்பாதை அமைப்பு தேவைக்கேற்ப மாற்றப்படும்.
இந்தப் பணிகள் நடைபெறும்போது இஸ்ரோவின் தரைக்கட்டுப்பாட்டு மையங்கள் செயற்கைக்கோளுடன் தொடர்பில் இருந்து அதன் செயல்பாடுகளைக் கண்காணிக்கும். தகவல் தொடர்பு வசதிகள், எரிபொருள் அமைப்பு மற்றும் பிற தொழில்நுட்பக் கருவிகளும் பரிசோதிக்கப்படும்.
இறுதி சுற்றுப்பாதையை அடைந்த பின்னரும் செயற்கைக்கோளின் அனைத்துப் பகுதிகளும் முறையாகச் செயல்படுகின்றனவா என்பது ஆய்வு செய்யப்படும். இந்தச் சோதனைகள் முடிந்த பிறகே அது NavIC அமைப்பின் செயல்பாட்டு செயற்கைக்கோள்களில் ஒன்றாக இணைக்கப்படும்.
இந்தியாவின் வழிகாட்டி அமைப்பில் தொடர்ந்து சேவைகளை வழங்குவதற்குத் தேவையான செயற்கைக்கோள்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தற்போது முக்கியத் தேவையாக உள்ளது. அந்த வகையில் என்.வி.எஸ்-03 முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும்போது NavIC சேவைகளின் தொடர்ச்சியை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் சொந்த வழிகாட்டி அமைப்பை வலுப்படுத்தும் இஸ்ரோ!
விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா தொடர்ந்து புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி வரும் நிலையில், ஜி.எஸ்.எல்.வி-எஃப்18 ஏவுதல் அந்தப் பயணத்தில் மற்றொரு முக்கியமான சாதனையாக அமைந்துள்ளது.
இந்த முறை ராக்கெட்டின் செயல்திறன் மட்டுமின்றி, அதில் கொண்டு செல்லப்பட்ட என்.வி.எஸ்-03 செயற்கைக்கோளின் தொழில்நுட்ப அம்சங்களும் கவனம் பெற்றுள்ளன. உள்நாட்டில் உருவாக்கப்பட்ட அணுக்கடிகாரம், புதிதாக இணைக்கப்பட்ட L1 அதிர்வெண் மற்றும் மேம்படுத்தப்பட்ட வழிகாட்டி வசதிகள் ஆகியவை இந்தியாவின் விண்வெளித் தொழில்நுட்ப வளர்ச்சியை எடுத்துக்காட்டுகின்றன.
எதிர்காலத்தில் போக்குவரத்து, தகவல் தொடர்பு, பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை போன்ற துறைகளில் செயற்கைக்கோள் சார்ந்த சேவைகளின் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதற்குத் தேவையான தொழில்நுட்பக் கட்டமைப்பை இந்தியாவே உருவாக்கி நிர்வகிப்பது நாட்டின் நீண்டகால வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் முக்கியமானதாகும்.
என்.வி.எஸ்-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், அதன் இறுதிச் சுற்றுப்பாதை அடைதல், தொழில்நுட்பச் சோதனைகள் மற்றும் NavIC அமைப்பில் இணைக்கப்படும் நடவடிக்கைகள் அடுத்தகட்ட முக்கிய நிகழ்வுகளாக உள்ளன.
இந்தச் செயற்கைக்கோளின் செயல்பாடு வெற்றிகரமாகத் தொடங்குவதுடன், எதிர்காலத்தில் திட்டமிடப்பட்டுள்ள அடுத்த தலைமுறை செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டால், இந்தியாவின் சொந்த வழிகாட்டி அமைப்பு மேலும் வலுப்பெறும். இதன் மூலம் உலகின் முன்னணி விண்வெளித் தொழில்நுட்ப நாடுகளின் வரிசையில் இந்தியாவின் நிலையை மேலும் உறுதிப்படுத்தும் முயற்சியில் இஸ்ரோ மற்றொரு அடியை எடுத்துவைத்துள்ளது.