அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

38 வருடங்களின் பின், இலங்கையில் தடம் பதித்த இந்திய பாதுகாப்பு அமைச்சர்

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மூன்று நாட்கள் அதிகாரப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைத் தந்துள்ளார்.

இந்திய விமானப்படைக்கு சொந்தமான விசேட விமானமொன்றின் மூலம் இன்று பிற்பகல் ராஜ்நாத் சிங், இலங்கையை வந்தடைந்தார்.

இவ்வாறு இலங்கைக்கு வருகைத் தந்த இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், எதிர்வரும் 10ம் தேதி வரை நாட்டில் தங்கியிருப்பார்.

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவை மேம்படுத்திக் கொள்ளும் வகையிலேயே இந்த விஜயம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடாத்தவுள்ளார்.

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர், இலங்கைக்கு சுமார் 38 வருடங்களின் பின்னர் வருகைத் தந்துள்ளமை விசேட அம்சமாகும்.

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் அமைச்சரவையில் இடம்பிடித்திருந்த பாதுகாப்பு அமைச்சர் கே.பி.பாண்டீ, 1988ம் ஆண்டு அதிகாரப்பூர்வ விஜயமாக இலங்கைக்கு வருகைத் தந்திருந்தார்.

அதன்பின்னர் இந்திய பாதுகாப்பு அமைச்சர் பிரனாப் முகர்ஜி, 2005ம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போதிலும், அது அதிகாரப்பூர்வ விஜயமாக கருதப்படவில்லை.

படுகொலை செய்யப்பட்ட முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் இறுதிக் கிரியைகளில் கலந்துக்கொள்வதற்காகவே பிரனாப் முகர்ஜி இலங்கைக்கு வருகைத் தந்திருந்தார்.

இலங்கை விஜயத்தில் என்ன நடக்க போகின்றது?

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்தல் மற்றும் வலயத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டது என அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதன்படி, கடல்சார் பாதுகாப்பு கூட்டாண்மை உள்ளிட்ட பரஸ்பர நன்மைகளை ஏற்படுத்தும் விடயங்கள் குறித்து இந்த விஜயத்தின் போது அதிக கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுமாத்திரமன்றி, இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு விடயங்கள் குறித்தும் அதிக கவனம் செலுத்தப்படவுள்ளன.

அதேபோன்று, வான்பரப்பு பாதுகாப்பு தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடல்கள் நடாத்தப்படவுள்ளதாக அறிய முடிகின்றது.

இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இலங்கைக்கு கடந்த ஆண்டு மேற்கொண்ட விஜயத்தின் போது இருநாடுகளுக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துகின்றமை தொடர்பில் ஆராய்வதே இந்த விஜயத்தின் பிரதான நோக்கம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மூன்று உடன்படிக்கைகள் நாளை கைச்சாத்து

விஜித்த ஹேரத் – வெளிவிவகார அமைச்சர் – இலங்கை

அதிகாரப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைத் தந்துள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மூன்று உடன்படிக்கைகளில் நாளைய தினம் கைச்சாத்திடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவிக்கின்றார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்படி, இலங்கை கெடேட் குழுவிற்கும், இந்திய கெடேட் குழுவிற்கும் இடையில் இருதரப்பு உடன்படிக்கை, இலங்கை தேசிய பாதுகாப்பு கல்லூரி மற்றும் இந்திய பாதுகாப்பு கல்லூரி இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை, இந்திய அரசாங்கத்தினால் கடந்த காலங்களில் வழங்கப்பட்ட வான் பாதுகாப்புக்கான ஆயுதங்களை இலவசமாக பராமரிக்கின்றமை தொடர்பான உடன்படிக்கைகள் நாளைய தினம் கைச்சாத்திடப்படவுள்ளன.

இலங்கையிலுள்ள இந்திய சமூகத்தினரை இன்றைய தினம் சந்தித்து கலந்துரையாடல்களை நடாத்தவுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், நாளைய தினம் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்தித்து கலந்துரையாடல்களை நடாத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

அதனைத் தொடர்ந்து, கொழும்பு கங்காராம விகாரையில் வழிபாடுகளில் ஈடுபடும் இந்திய பாதுகாப்பு அமைச்சர், நாளை மறுதினம் நுவரெலியாவிலுள்ள சீதை அம்மன் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார்.

கொழும்பில் தடம் பதித்தது இந்திய போர்க் கப்பல்

இந்திய கடற்படைக்கு சொந்தமான ”INS UDAYGIRI” போர்க் கப்பல், அதிகாரப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை இன்று வந்தடைந்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான போர்க் கப்பலை, இலங்கை கடற்படை சம்பிரதாயப்பூர்வமாக வரவேற்றனர்.

இவ்வாறு நாட்டிற்கு வருகை தந்துள்ள, 149.02 மீற்றர் நீளமுடைய  Frigate வகையைச் சேர்ந்த ”INS UDAYGIRI” போர்க்கப்பலின் கட்டளை அதிகாரியான கெப்டன் Vikas Sood மற்றும் மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் ஹர்ஷ த சில்வா ஆகியோருக்கு இடையிலான அதிகாரப்பூர்வ சந்திப்பொன்று கட்டளைத் தலைமையகத்தில் இடம்பெற்றதுடன், கெப்டன் Vikas Sood, இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகராக 2020 ஆம் ஆண்டு ஜூலை முதல் 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் வரை கடமையாற்றியுள்ளார்.

மேலும்,  ‘INS UDAYGIRI’ போர்க்கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், அதன் அங்கத்தவர்கள் இருநாட்டு கடற்படைகளுக்கும் இடையிலான நல்லுறவை மேம்படுத்துவதற்காக இலங்கை கடற்படையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளதுடன், நாட்டின் முக்கிய இடங்களைப் பார்வையிடுவதற்காக நாட்டின் பல பகுதிகளுக்கும் விஜயம் செய்யவுள்ளனர்.

அத்துடன், இப் போர்க்கப்பலின் செயல்பாடுகளைப் பார்வையிடுவதற்கும், அது தொடர்பான தொழில்முறை அறிவைப் பரிமாறிக்கொள்வதற்கும் இலங்கை கடற்படை வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவுள்ளதுடன், இலங்கை கடற்படையினரால் கப்பலினுள் பயிற்சித் திட்டங்களை நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of R.A. Prasadh

R.A. Prasadh