பெங்களூரு -இளைஞர்களிடையே எச்.ஐ.வி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தானாக முன்வந்து பரிசோதனை செய்துகொள்வதை ஊக்குவிக்கவும், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பொறியியல் மற்றும் கலை-அறிவியல் கல்லூரிகளில் ஒருங்கிணைந்த சுகாதார முகாம்களை நடத்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.கர்நாடக மாநில எய்ட்ஸ் தடுப்புச் சங்கம் இந்தத் திட்டத்தைப் பரிந்துரைத்துள்ளது. உயர் கல்வி நிறுவனங்களில் இதனை நடைமுறைப்படுத்த கல்லூரி மற்றும் தொழில்நுட்பக் கல்வித் துறை மற்றும் விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (VTU) ஆகிய அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன.
கல்லூரிகளில் எச்.ஐ.வி பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும், கர்நாடகாவில் சுமார் 7,000 கல்லூரி மாணவர்களுக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் வெளியான தவறான தகவல்களைத் தொடர்ந்து இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது. இந்த இரண்டு தகவல்களுமே முற்றிலும் தவறானவை என்றும், இவை தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறி KSAPS அமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.இது குறித்து KSAPS திட்ட இயக்குநர் பத்மா பசவந்தப்பா கூறுகையில், எச்.ஐ.வி தரவுகளைத் தொழில் அல்லது கல்வித் தகுதியின் அடிப்படையில் தங்கள் அமைப்பு வகைப்படுத்துவதில்லை என்றும், இதனால் எச்.ஐ.வி தொற்றோடு வாழும் கல்லூரி மாணவர்களின் எண்ணிக்கை குறித்து எந்தவித அதிகாரப்பூர்வப் பதிவும் இல்லை என்றும் விளக்கமளித்தார்.
மேலும், 18 முதல் 35 வயதுக்குட்பட்ட பிரிவில் சுமார் 39,000 எச்.ஐ.வி தொற்றாளர்கள் இருப்பதாகக் கூறப்படும் தரவு, 2004-ஆம் ஆண்டு முதல் பதிவான ஒட்டுமொத்த எண்ணிக்கையைக் குறிப்பதே தவிர, அதை மாணவர்கள் பற்றிய தரவாகக் கருதக் கூடாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.இந்த ஒருங்கிணைந்த சுகாதார முகாம்கள் விழிப்புணர்வு அமர்வுகள், ஆலோசனைகள் மற்றும் விருப்பத்தின் பேரில் எச்.ஐ.வி பரிசோதனை செய்துகொள்வதற்கான வாய்ப்புகளை வழங்குவதை மட்டுமே நோக்கமாக்கக் கொண்டுள்ளன என்று அதிகாரிகள் வலியுறுத்தினர்.
எச்.ஐ.வி பரிசோதனை செய்ய விரும்பும் எந்தவொரு மாணவரும், அதற்கு முன்னதாகத் தனது முழுச் சம்மதத்தைத் தெரிவிக்க வேண்டும். ஏனெனில், எச்.ஐ.வி/எய்ட்ஸ் (தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் 2017-ன் படி கட்டாய எச்.ஐ.வி பரிசோதனை செய்வது சட்டப்படி தடைசெய்யப்பட்டுள்ளது.தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் ‘சங்கலக்: தேசிய எய்ட்ஸ் மற்றும் எஸ்.டி.டி தடுப்பு நிலை 2024’ அறிக்கையின்படி, கர்நாடகா நாட்டில் எச்.ஐ.வி பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. அங்கு சுமார் 2.60 லட்சம் பேர் எச்.ஐ.வி தொற்றோடு வாழ்கின்றனர். அவர்களில் சுமார் 2.05 லட்சம் பேர் சிகிச்சையைப் பெற்று வருகின்றனர்.
மேலும், சுமார் 54,000 பேர் தங்களுக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பதை அறியாமல் இருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது.18 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே எச்.ஐ.வி பாதிப்புகள் அதிகரித்து வருவதாக மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாகவே கல்வி நிறுவனங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஆரம்பகட்டத்திலேயே கண்டறியவும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.இந்த விழிப்புணர்வு இயக்கத்திற்கு ஆதரவளிக்கும் வகையில், KSAPS ‘பிரேக் ஃப்ரீ’ என்ற கைபேசி செயலி மூலம் டிஜிட்டல் சுய-ஆபத்து மதிப்பீட்டு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. பயனர்கள் ஒரு QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம், தங்களது எச்.ஐ.வி ஆபத்து நிலையை ரகசியமாக மதிப்பீடு செய்ய முடியும். மேலும், ஆலோசனைகளைப் பெறவும், அருகிலுள்ள எச்.ஐ.வி பரிசோதனை மையங்களைக் கண்டறியவும் இது உதவுகிறது.இந்த விழிப்புணர்வுப் பிரச்சாரம்,எய்ட்ஸ் சுரக்ஷாவுக்கான திரட்டல் இயக்கத்தின் ஒரு பகுதியாகும். இது எச்.ஐ.வி பற்றிய அறிவை மேம்படுத்துவதையும், தன்னார்வப் பரிசோதனையை ஊக்குவிப்பதையும், எச்.ஐ.வியுடன் வாழும் அதிகமானோரைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. உயர்கல்வி மன்றம் (UGC) மற்றும் ஒன்றிய கல்வி அமைச்சகமும் கல்லூரி வளாகங்களில் எச்.ஐ.வி விழிப்புணர்வு திட்டங்களை வலுப்படுத்த ஊக்கம் அளித்துள்ளன.