அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

முதல்வர் விஜய் பேச்சு முதல் தி.மு.க.வின் ஆர்ப்பாட்டம் வரை… என்ன நடந்தது?

தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் பேசிய கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களிலும் காலை 10.30 மணிக்கு, அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது.

சர்ச்சைக்கு காரணமான முதல்வர் உரை!

செப்டம்பர் 7-ம் தேதி சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்த முதலமைச்சர் விஜய், தி.மு.க.வின் கடந்தகால ஆட்சி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து கடுமையாக விமர்சித்தார். வீராணம் திட்டம், சர்க்காரியா ஆணைய அறிக்கை உள்ளிட்டவற்றையும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார். அதே உரையில், அவசரநிலை காலத்தில் மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விஜய் பேசியதும், அவர் செய்ததாக கூறப்படும் ஒரு உடல்மொழியும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பேரவையில் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் சபாநாயகர் உத்தரவின்பேரில் திமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

“எனது போராட்ட வரலாறு தெரியுமா?” – ஸ்டாலின் பதிலடி

இந்த விவகாரத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 10-ம் தேதி வீடியோ வெளியிட்டு விஜய்க்கு பதிலளித்தார். அவசரநிலை காலத்தில் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டபோது சிறையில் தான் எதிர்கொண்ட கொடுமைகளை அவர் நினைவுகூர்ந்தார். தனது தாடை பகுதியில் ஏற்பட்ட காயம் உள்ளிட்ட சம்பவங்களை குறிப்பிட்ட ஸ்டாலின், தனது அரசியல் போராட்ட வரலாற்றை அறிந்து கொண்டு பேச வேண்டும் என விஜய்க்கு பதிலடி கொடுத்தார். மேலும், சமூக வலைதளங்களில் ரீல்ஸ் மற்றும் விளம்பரங்கள் மூலம் நிர்வாகத் தோல்விகளை மறைக்க முயற்சிப்பதாகவும் விஜய் அரசை ஸ்டாலின் விமர்சித்தார்.

விஜய் விளக்கம் என்ன?

சர்ச்சைக்குள்ளான உடல்மொழி குறித்து முதலமைச்சர் விஜய் பின்னர் விளக்கம் அளித்தார். அந்த சைகை யாரையும் காயப்படுத்தும் அல்லது அவமதிக்கும் நோக்கத்துடன் செய்யப்படவில்லை என்றும், அது தன்னிச்சையாக ஏற்பட்டது என்றும் அவர் தெரிவித்தார். ஆனால், விஜயின் விளக்கத்தைத் தொடர்ந்து விவகாரம் முடிவுக்கு வராமல், அரசியல் கட்சிகளிடையே எதிர்வினைகள் தொடர்ந்தன.

திருமாவளவன் கண்டனம்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனும் விஜயின் உடல்மொழிக்கு எதிர்ப்பு தெரிவித்தார். அரசியல் விமர்சனம் என்பது தனிநபரின் மனித மாண்பையும் கண்ணியத்தையும் பாதிக்கும் வகையில் இருக்கக்கூடாது என்றும், முதலமைச்சர் தனது உடல்மொழியில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

“விஜய் நிஜ வாழ்க்கையில் வில்லன்” – டிடிவி தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் முதலமைச்சர் விஜயின் பேச்சை கடுமையாக விமர்சித்துள்ளார். மு.க.ஸ்டாலின் மிசா கால சிறைவாசம் குறித்து விஜய் பேசியது தரக்குறைவானது என்று விமர்சித்த தினகரன், விஜயை “நிஜ வாழ்க்கையில் வில்லன்” எனக் குறிப்பிட்டார்.

தி.மு.க.வின் போராட்ட கோரிக்கைகள் என்ன?

தி.மு.க. வெளியிட்டுள்ள அறிவிப்பில், விஜய் ஆட்சிக்கு வந்தது சினிமா புகழ் மற்றும் சமூக வலைதளப் பிரசாரத்தின் மூலம் உருவாக்கப்பட்ட பிம்பத்தை அடிப்படையாகக் கொண்டது என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, திராவிட மாடல் அரசின் திட்டங்களை நிறுத்துகிறது, சமூக வலைதளங்கள் மூலம் மக்களை ஏமாற்றுகிறது, சட்டப்பேரவையை அரசியல் பிரசாரத்துக்கான மேடையாக பயன்படுத்துகிறது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளையும் தி.மு.க. முன்வைத்துள்ளது. இதனை கண்டித்து அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் சார்பு அணியினர் போராட்டத்தில் பங்கேற்குமாறு தி.மு.க. தலைமையில் கேட்டுக்கொண்டுள்ளது.

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு… ஆளும் தரப்பின் பதிலடி!

ஒருபுறம் தி.மு.க. தலைமையில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெறும் நிலையில், முதலமைச்சர் விஜயின் சட்டப்பேரவை உரைக்கு ஆளும் தரப்பும் ஆதரவு தெரிவித்து வருகிறது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சட்டப்பேரவை நடவடிக்கைகள் குறித்து பேச தி.மு.க.வுக்கு தார்மீக உரிமை இல்லை என்றும், தி.மு.க.வின் அரசியல் காலம் முடிவை நோக்கி செல்கிறது என்றும் விமர்சித்துள்ளார். இதனால், சட்டப்பேரவையில் தொடங்கிய விஜய்–தி.மு.க. மோதல் தற்போது தெருப்போராட்டம் வரை தீவிரமடைந்துள்ளது. தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு இருக்கிற தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் முன்வைக்கப்படும் முழக்கங்கள் மற்றும் தலைவர்களின் பேச்சுகள், தமிழக அரசியலில் அடுத்தகட்ட அரசியல் மோதலுக்கு வழிவகுக்குமா என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of பிரீத்தி காளியப்பன்

பிரீத்தி காளியப்பன்