அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

டெல்லி: கண்ணீர் புகைக்குண்டு வீசி தடியடி; CJP அமைதிப் பேரணியை கலைத்த போலீஸார்! ஜந்தர் மந்தரில் இதுவரை நடந்தது என்ன?

நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டுமென வலியுறுத்தி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நடத்திய அமைதிப்பேரணியை, கண்ணீர் புகைக்குண்டு வீசி போலீஸார் தடியடி நடத்தி கலைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜந்தர் மந்தரில் இதுவரை நடந்தது என்ன? விரிவாக படிக்கலாம் வாங்க…

மருத்துவராகும் கனவுடன் பலரும் நீட் தேர்வு எழுதி வரும் நிலையில், தேசிய தோ்வு முகமை நடத்தும் நீட் தோ்வு வினாத்தாள் கசிவு சம்பவம் சமீபத்தில் அரங்கேறி மாணவர்கள் மத்தியில் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தால் இதுவரை 21 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். அதேபோல், சிபிஎஸ்இ தேர்வில் ஓஎஸ்எம் திருத்த முறையில் முறைகேடு நடந்தது.

இந்நிலையில், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்இ தேர்வு முறைகேடு என கல்வித்துறையில் நடந்துள்ள மோசடி, முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த இரண்டு மாதங்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். டெல்லி ஜந்தர் மந்தரில் ஜூன் இறுதி முதல், CJP கட்சியினர் அமைதியான முறையில் போராட்டமும் நடத்தி வந்தனர்.

20 நாட்களாக தொடர் பட்டினிப் போராட்டம்

இப்படியான நிலையில், ஜூன் 28ம் தேதி அக்கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே தலைமையில், சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உண்ணாநிலைப் போராட்டத்தை (பட்டினிப் போராட்டம்) துவங்கினார். இவருக்கு ஆதரவாக நடிகர் பிரகாஷ்ராஜும் உண்ணாநிலைப் போராட்டத்தில் பங்கேற்றார். திமுக, காங்கிரஸ் கட்சி, ஆம்.ஆத்.மி என பல கட்சியினர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

59 வயதான சமூக ஆர்வலர் சோனம் வாங்சுங் 20 நாட்களில் உணவு உண்ணாமல் 9 கிலோ எடை குறைந்து ஆபத்தான நிலையை எட்டிய போதும், ஆளும் பாஜக அரசு இந்தப்போராட்டம் குறித்தோ, CJP கட்சியினரின் கோரிக்கை குறித்தோ வாய் திறக்கவே இல்லை.

இந்நிலையில், சோனம் வாங்சுக்கின் உடல்நிலை மிக மோசமடைந்து வந்ததால், அவருக்கு அவசர மருத்துவ சிகிச்சை வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ராகேஷ் குமார் சைனி என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதிகள் அமர்வு,”போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சோனம் வாங்சுக்கை அரசு மருத்துவர்கள் தினமும் நேரில் சென்று மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும். மருத்துவர்களின் அறிக்கையின் அடிப்படையில், அவருக்கு ஏதேனும் மருந்து அல்லது அவசரச் சிகிச்சை தேவைப்பட்டால் மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு அதை வழங்க வேண்டும். ஒவ்வொரு மனித உயிரும் முக்கியமானது” என உத்தரவிட்டது.

இந்நிலையில், நேற்று முன்தினம் வாங்சுங்கின் 21வது நாள் உண்ணாநிலைப் போராட்டத்தின் போது, ஜந்தர் மந்தரில் போராட்டக் களத்திற்கு வந்த டெல்லி போலீஸார் அவரை வலுக்கட்டாயமாக அங்கிருந்து அகற்ற முயன்றனர், CJP கட்சியினர் தடுக்க முயன்ற நிலையிலும் சோனம் வாங்சுங் குண்டுக்கட்டாக தூக்கிச் செல்லப்பட்டு சஃப்தர்ஜங் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கிருந்து அகற்றுவதற்கு முந்தைய தினம் செய்தியாளர்களிடம் பேசியிருந்த சோனம் வாங்சுக், “நான் வெளியில் பலவீனமாகத் தெரிந்தாலும், உள்ளுக்குள் மிகவும் வலிமையாக இருக்கிறேன். நீங்கள் அனைவரும் உள்ளேயும் வெளியேயும் வலிமையாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஜூலை 20-ம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி நாம் அமைதிப் பேரணியை நடத்தும்போது இந்த ஆற்றல் நமக்குத் தேவைப்படும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து சென்று ஜனநாயகத்தின் ஆலயத்தில் நமது கோரிக்கையை முன்வைப்போம். எந்த விலை கொடுத்தாவது ஜூலை 20 வரை நான் உயிரோடு இருப்பேன். நீங்கள் வராமல் ஜூலை 20 போராட்டம் வெற்றிபெறவில்லை என்றால், நான் ஆவியாக திரும்பி வருவேன்” என்று கூறியிருந்தார்.

ஜூலை 18ம் தேதி சோனம் வாங்சுங் தூக்கிச் செல்லப்பட்ட போது செய்தியாளர்களிடம் பேசிய அவரது மனைவி கீதாஞ்சலி, ‘‘நான் தற்போது டெல்லி சஃப்தர்ஜங் மருத்துவமனையில் இருக்கிறேன். என்னுடைய அல்லது எங்களது குடும்பத்தினரின் அல்லது கடந்த 20 நாட்களாக அவரது உடல்நிலையை கண்காணித்து வரும் எங்களது குடும்ப மருத்துவர்களின் அனுமதியின்றி சோனம் வாங்சுக்கிற்கு வாய்வழியாகவோ அல்லது நரம்பு வழியாகவோ எந்த ஒரு சிகிச்சையையும், மருந்துகளையும் வழங்க கூடாது.

மருத்துவமனையில் உள்ள சோனம் வாங்சுக்கை சந்திக்க எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அவரது மருத்துவ அறிக்கைகளின் டிஜிட்டல் பிரதிகளை எனக்கு வழங்க மருத்துவமனை நிர்வாகம் மறுக்கிறது” என்று கீதாஞ்சலி குற்றம்சாட்டினார்.

நாடாளுமன்றம் நோக்கி பேரணி; போலீஸார் தடியடி!

இப்படியான நிலையில், சோனம் வாங்சுங் அங்கிருந்து தூக்கிச்செல்லப்பட்ட நிலையில், தானும் உண்ணாவிரதம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்து அபிஜித் தீப்கேவும் பட்டினிப் போராட்டத்தை துவங்கியிருந்தார்.

தனது போராட்டம் குறித்துப் பேசிய அவர், “நான் இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்குகிறேன். இங்குள்ள யாரும் பின்வாங்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த இயக்கம் இன்னும் பெரிதாக வளரும். சோனம் வாங்சுக்கை அப்புறப்படுத்தி அவர்கள் மிகப்பெரிய தவற்றை செய்துள்ளனர். எல்லோரும் ஜந்தர் மந்தர் பகுதிக்கு திரும்புங்கள். நமது இயக்கம் இங்கிருந்து வளரட்டும், ஜூலை 20-ம் தேதி (சலோ சன்சாத்) நாடாளுமன்றம் நோக்கிய பயணம் திட்டமிட்டபடி நடக்கட்டும்,” எனக்கூறி, போராளிகளுக்கு அழைத்து விடுத்திருந்தார்.

இருப்பினும் இதற்கு டெல்லி காவல்துறையினர் அனுமதி மறுத்தது மட்டுமின்றி, ஜந்தர் மந்தர் தவிர மற்ற பொது இடங்களில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஒன்று கூடவோ, பொதுக்கூட்டம் மற்றும் ஊர்வலம் நடத்த தடை விதித்தனர். மேலும், போராட்டக்காரர்கள் லத்திகள், கம்புகள், பதாகைகள் அல்லது எந்த விதமான ஆயுதங்களையும் எடுத்துச் செல்ல கூடாது என்றும் உத்தரவிட்டது.

அதன்படி, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று காலை துவங்கிய நிலையில், காக்ரோச் ஜனதா கட்சியின் போராட்டக்காரர்கள் காலை நாடாளுமன்றத்தை முற்றுகையிட பேரணியைத் துவங்கினர்.

கண்ணீர் புகைக்குண்டு வீச்சு… பலருக்கும் மண்டை உடைப்பு…

பேரணியின் போது போராட்டக்காரர்கள் பலரும் புத்தகங்கள், மலர்களை கைகளில் ஏந்திச் சென்றனர். ஆனால், டெல்லி காவல்துறையினரோ கைகளில் லத்தி, கண்ணீர் புகைக்குண்டு மற்றும் துப்பாக்கிகளுடன் அவர்களை எதிர்கொண்டனர்.

அபிஜித் தீப்கே, சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி ஆகியோர் முன்னதாக நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக நடந்து சென்ற போது அவர்கள் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இருப்பினும் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் அங்கு திரண்டு நாடாளுமன்றம் நோக்கி நடந்த போது, அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் தடியடி நடத்தி அவர்களைக் கலைக்க முயன்றனர்.

ஆனாலும், போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாததால் போலீஸார் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசியும், கொடூரமான முறையில் தடியடி நடத்தித் தாக்கியும் கூட்டத்தை கலைத்ததை பல ஊடகங்களும், போராட்டக்காரர்களும் வீடியோக்களாக வெளியிட்டுள்ளனர். பலரும் ரத்த வெள்ளத்தில், மண்டை உடைக்கப்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

தடியடி, கண்ணீர்ப் புகைக்குண்டு வீச்சால் அப்பகுதியே களேபரமாகி பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், நாடாளுமன்ற வளாகத்தின் கதவுகள் அடைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸார், நாடாளுமன்றத்தினுள் அனுமதியின்றி வந்தாலே சுட்டுவிடுவதாக எச்சரிக்கை வெளியிட்டனர்.

‘மாணவர்களின் குரல்களை ஒடுக்கும் பாஜக’

போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலுக்கு ஆம்ஆத்மி, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் என பல தேசியக் கட்சிகள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும், இன்று நாடாளுமன்றத்தில் பேசிய அகில இந்திய காங்கிரஸ் கட்சித்தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ‘‘வினாத்தாள் கசிவு, நீட் தேர்வு முறைகேடு குறித்த எனது கருத்துக்களை முன்வைக்க எனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது மாணவர்கள் நலன் சார்ந்த விவகாரம், லட்சக்கணக்கான குழந்தைகளின் எதிர்காலம் குறித்து நான் பேசுகிறேன்.

ஜந்தர் மந்தரில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கூடியுள்ளனர். அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டுள்ளது. வன்முறையைப் பயன்படுத்தி, அவர்களின் குரல்களை ஒடுக்கவும், அங்கிருந்து விரட்டியடிக்கவும் அரசு முயற்சிக்கிறது,’’  என, கடுமையான கண்டனத்தை பதிவு செய்தார்.

ஜே.பி.நட்டாவை சந்தித்த CJP நிர்வாகிகள்!

ஒரு பக்கம் தடியடி, கண்ணீர்ப் புகைக்கண்டு வீச்சு, பல போராட்டக்காரர்கள் படுகாயம் என டெல்லியே களேபரமாகி இருக்கும் சூழலில், CJP நிறுவனர் அபிஜித் தீப்கேவை போலீஸார் கைது செய்து தூக்கிச் சென்றதாக தகவல் பரவியது.

இந்நிலையில், CJP செய்தித் தொடர்பாளரான செளரவ் தாஸ், அஷூதோஷ் ரங்கா ஆகியோர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவை சந்தித்துள்ளனர்.

அபிஜித் கைது செய்யப்படவில்லை எனவும், ஒன்றிய அரசு தங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள செளரவ் தாஸ், ‘‘அஷுதோஷ் ரங்காவும் நானும் இன்று மதியம் 12 மணிக்கு ஜே.பி. நட்டாவை சந்தித்தோம். கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை உடனடியாக ராஜினாமா செய்யச் செய்வது அல்லது பதவியில் இருந்து நீக்குவது உள்ளிட்ட எங்களது கோரிக்கைகள் அவரிடம் தெரிவிக்கப்பட்டன. இந்த விவகாரத்தை உரிய மட்டத்தில் எடுத்துச் சென்று விவாதிப்பதாக அமைச்சர் உறுதியளித்தார். இருப்பினும், இதுவரை எந்த உறுதியான வாக்குறுதியும் அளிக்கப்படவில்லை. எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை அமைதியான போராட்டம் தொடரும். ஜந்தர் மந்தர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இனி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று அமைச்சரும் எங்களுக்கு உறுதியளித்துள்ளார். இருப்பினும், காவல்துறையின் தலையீடு நிறுத்தப்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை.” என்று சௌரவ் தாஸ் குறிப்பிட்டுள்ளார்.

ஜே.பி.நட்டாவிடம் கொடுத்த கடிதத்தில் என்ன இருந்தது?

அவரது எக்ஸ் தள பதிவில், ஜே.பி.நட்டாவிடம் வழங்கிய கடிதத்தையும் பதிவேற்றியுள்ளார்.

அதில், ‘‘சோனம் வாங்சுக்கை மருத்துவமனையில் இருந்து உடனடியாக விடுவிக்க வேண்டும்; அவர் மேற்கொண்ட போராட்டம் தொடர்பாக எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும். நீட் 2026 வினாத்தாள் கசிவு விவகாரத்துக்குப் பிறகு தற்கொலை செய்துகொண்ட 21 மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்,’’ என பல கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா, சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், “இன்று காலை, போராட்டக்காரர்கள் தரப்பில் இருந்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான கோரிக்கை முதன்முறையாக வந்தது. அதன்பிறகு காலை 11.50 மணி முதல் எங்களுக்கிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இந்தச் சந்திப்பு சுமுகமான சூழலில் நடைபெற்றது. அவர்களின் பிரதிநிதிகள் குழுவுடன் விரிவான விவாதம் நடத்தப்பட்டது.

பிற்பகல் 4 மணி அளவில் அவர்கள் எனக்கு எழுத்துப்பூர்வமான கோரிக்கை மனுவையும் வழங்கினர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் தங்களது தர்ணா போராட்டத்தை முடித்துக்கொண்டு, இயல்பு நிலையை மீட்டெடுக்க நிர்வாகத்துக்கு ஒத்துழைக்குமாறு நான் கேட்டுக்கொண்டேன்,” என அவர் பதிவிட்டுள்ளார்.

இருப்பினும் இன்று காலையில், ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்வாரா? கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தின் அடுத்தகட்டம் என்ன? என்பது விடையறியா கேள்விகளாகவே உள்ளன.

அடுத்து என்ன நடக்கும் பொறுத்திருந்தது பார்ப்போம்…

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of திலீபன்

திலீபன்