அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள காவன்திஸ்ஸ யானையின் இறப்பு – 16 வருடங்களின் 5098 யானைகள் மரணம்

இலங்கையில் காவன்திஸ்ஸ காட்டு யானை அண்மையில் இறந்த சம்பவமானது பாரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என பலரும் இந்த யானையை காப்பாற்ற அரசாங்கம் தவறியுள்ளதாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.

துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான காவன்திஸ்ஸ யானைக்கு சரியான முறையில் சிகிச்சைகளை அளிக்க தவறியுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற பின்னணியில், இந்த யானைக்கு சிகிச்சைகளை வழங்கிய வனவிலங்கு மிருக மருத்துவர் இசுறு ஹேவாகொட்டகே, தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இந்த இராஜினாமா கடிதத்தை வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காவன்திஸ்ஸ யானைக்கு சிகிச்சைகளை அளித்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் மற்றும் விமர்சனங்களினாலேயே இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, காவன்திஸ்ஸ யானையின் இறப்பு தொடர்பில் சமூகத்தில் எழுந்துள்ள சர்ச்சையை தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடாத்துவதற்கும், காட்டு யானைகளின் நலன்களுக்கான முறைமையை தயாரிப்பதற்கும், காட்டு யானைகளை பாதுகாக்கும் தேசிய வேலைத்திட்டமொன்றை தயாரிக்கும் வகையிலான பரிந்துரைகளை முன்வைப்பதற்கும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள இந்த குழுவின் அறிக்கையை எதிர்வரும் 30 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இலங்கையில் தொடரும் யானைகளின் மரணங்கள்

கடந்த 16ம் தேதி இறந்த காவன்திஸ்ஸ யானை

இலங்கையின் உக்கிர நிலைமையை எட்டியுள்ள யானை – மனித மோதல் காரணமாக 2010ம் ஆண்டு முதல் 2026ம் ஆண்டு வரையான காலம் வரை 5098 காட்டு யானைகள் இறந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இதன்படி, 2010ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரையான 10 வருட காலத்தில் 2631 யானைகள் இறந்துள்ளன.

2020ம் ஆண்டு 328 யானைளும், 2021ம் ஆண்டு 375 யானைகளும், 2022ம் ஆண்டு 439 யானைகளும் இறந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

2023ம் ஆண்டு 488 யானைகள் இறந்துள்ள அதேவேளை, 2024ம் ஆண்டு 388 யானைகள் இறந்துள்ளன.

2025ம் ஆண்டு 245 யானைகள் இறந்துள்ளதுடன், 2026ம் ஆண்டின் ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையான 8 மாத காலப் பகுதியில் மாத்திரம் 204 யானைகள் இறந்துள்ளன.

இந்த தரவுகளின் பிரகாரம், 2023ம் ஆண்டே அதிகளவிலான யானைகள் இறந்துள்ளன.

இந்த காலப் பகுதியில் இலங்கை மக்களின் அன்பை வென்ற யானைகளின் இறப்புக்கள்

2010 – சியம்பலாகமுவ மஹ யானை
2017 – கல்கமுவ தலபுட்டுவா
2018 – மிஸ்ஸக்க
2018 – முகலன்
2020 – ரேவத
2022 – மனபரண
2023 – தெக்க ராஜா
2023 – மஹேஷாகய
2024 – தீகதந்;து
2025 – பாதிய
2025 – யுனிகோன்
2025 – தனுத்தர
2026 – காவன்திஸ்ஸ

மனித – யானை மோதல் தொடர்ந்த நிலையிலேயே யானைகளும், மனிதர்களும் தொடர்ச்சியாக உயிரிழந்து மற்றும் காயமடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில். காவன்திஸ்ஸ யானையின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் தொடர்ச்சியான போலீஸார் மற்றும் வனவிலங்கு திணைக்களம் விசாரணைகளை நடாத்தி வருகின்றது.

அத்துடன், காடுகளில் உள்ள ஏனைய யானைகள் தொடர்பிலும் தற்போது தேடுதல்கள் நடாத்தப்பட்டு தரவுகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நடவடிக்கைகளுக்கான வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளுக்கு மேலதிகமாக முப்படையினரும் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of R.A. Prasadh

R.A. Prasadh