தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மின்வெட்டு அடிக்கடி ஏற்படுகிறது. குறிப்பாக மாலை நேரத்தில் ஏற்படக்கூடிய மின்வெட்டு நள்ளிரவு வரை தொடர்வதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கு தேர்வு சமயங்களில் ஏற்படக்கூடிய மின்வெட்டால் அவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகவும், தவெக அரசு பொறுப்பேற்ற பின்னதாக இந்த பிரச்சனைகள் அதிகமாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டுகளை பொதுமக்கள் முன்வைக்கின்றனர். இது குறித்து சமூக வலைத்தளங்களிலும் பல்வேறு புகார்கள் எழுந்து வந்தது. இந்நிலையில் மினவெட்டு பாதிப்பு ஏன் ஏற்பட்டது? இதைத் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து அறிந்துக் கொள்வதற்காக தமிழக முதல்வர் விஜய், சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மின் உற்பத்தி, தற்போதைக்கு எத்தனை யூனிட் மின் தேவை, மின் பகிர்மானம் மற்றும் மின்தடையின் போது என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்? என்பது குறித்து கேட்டறிந்தார்.
தமிழகத்தில் 600 துணை மின்நிலையங்கள்:
சென்னையில் தலைமை மின்வாரிய அலுவலகத்தை ஆய்வு செய்த பின்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார், மாநிலத்தில் மின் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு மின் தொடரமைப்பு மற்றும் துணை மின் நிலையப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என தெரிவித்தார். குறிப்பாக, அதிகரித்து வரும் மின் தேவையை சமாளிப்பதற்கான கட்டமைப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார். மேலும் முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற ஆய்வில், துணை மின் நிலையங்களின் பணிகள், மின் விநியோகத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால மின் தேவையை சமாளிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக நிர்மல் குமார் தெரிவித்தார். இதோடு தமிழகத்தில் சீரமைப்பு செய்யப்படாத நிலையில் லோடு தாங்க முடியாமல் டிரான்ஸ்பார்மர்கள் பழுதடைகின்றன என்று முதல்வரிடம் மனுவாக வழங்கினோம். இதையடுத்து போர்க்கால அடிப்படையில் பழைய உபகரணங்களை மாற்றவம், தமிழகத்தில் புதிதாக 600 துணை மின்நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மின்வாரிய துறையின் அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.