கடந்த இரண்டு தசாப்தங்களாக திடீர் மழை, வறட்சி, புயல் என, நம் விவசாயிகளை விவசாயத்தை விட்டு வெளியில் விரட்டிக் கொண்டிருக்கிறது பருவநிலை மாற்றம். பலரும் பயிர்களை வளர்க்க சிரமப்படும் நிலையில், கொங்கு மண்டல விவசாயிகளை பாதுகாத்து வருகிறது அறிவியல் பூர்வமான பலஅடுக்குப்பயிர் சாகுபடி முறை.
இந்திய உணவு உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு என்ன?
இந்திய அளவில் விவசாயம் அதிகம் நடக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முதல் ஐந்து மாநிலங்களுக்குள் உள்ளது. எண்ணெய் வித்துக்கள், நிலக்கடலை, கரும்பு உற்பத்தியில் முதலிடத்திலும், சோளம் உற்பத்தியில் இரண்டாமிடமும், நெல் உற்பத்தியில் மூன்றாமிடமும் பிடித்துள்ளது.
தமிழ்நாடு வேளாண்மை துறையின் 2025 அதிகாரப்பூர்வ தகவலின் படி, தமிழ்நாட்டில் எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகை, கரும்பு, பழங்கள், காய்கறிகள், millets, பருத்தி என ஒட்டு மொத்தமாக அனைத்து பயிர்களும் சேர்த்து 1.21 கோடி ஹெக்டேருக்கு (2.99 கோடி ஏக்கருக்கு) விவசாய சாகுபடி நடக்கிறது. Paddy, Millet, Pulses மட்டுமே 115.02 லட்சம் மெட்ரிக் டன், கரும்பு 141.19 லட்சம் மெட்ரிக் டன் மற்றும் காய்கறிகள், பழங்கள், பூக்கள் என தோட்டக்கலை பயிர்கள் மட்டுமே 193 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தியாகிறது.

தமிழ்நாட்டின் நான்கு மண்டலங்களில், ஆண்டு முழுவதிலும் மிதமான மழை, நல்ல தட்பவெப்ப நிலை நிலவுவது, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், சேலம் மற்றும் நாமக்கல் அடங்கிய மேற்கு மண்டலம் எனப்படும் கொங்கு மண்டலம் தான். இதனால், டெல்டா பகுதிகளுக்கு அடுத்தபடியாக மேற்கு மண்டலத்தில் தான் நெல், கரும்பு, வாழை, காய்கறிகள் அதிகம் சாகுபடி செய்யப்படுகின்றன.
இந்நிலையில் கடந்த இரண்டு தசாப்தங்களாக, climate change காரணமாக தமிழ்நாடு விவசாயிகள் கடுமையான பாதிப்பை சந்தித்து, மாற்று பயிர்களை பயிர் செய்துள்ளனர். தொடர் நஷ்டம் காரணமாக சிலர் விவசாயத்தை விட்டே வெளியேறிவிட்டனர்.
குறிப்பாக Climate change மேற்கு மண்டலத்தின் பாரம்பரிய விவசாய முறையை முற்றிலுமாக மாற்றியுள்ளது. ஆடிப்பட்டம் தேடி விதை, கோடை உழவு செய்தால் மானாவாரி நடவு செய்யலாம் என்பது போன்ற பாரம்பரிய விவசாய நடைமுறைகளை முற்றிலுமாக மாற்றியுள்ளது பருவநிலை மாற்றம்.
குறிப்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ தகவலின்படி தமிழ்நாட்டின் ஆண்டு சராசரி பருவ மழைப்பொழிவு, 6 – 7.8 சதவீதம் குறைந்துள்ளது. அதுமட்டுமின்றி, பல நேரங்களில் திடீர் பருவமழைப் பொழிவு மற்றும் சில மாதங்கள் தொடர் வறட்சி ஏற்படுவதால் கடுமையாக பாதிப்பை விவசாயிகள் சந்தித்துள்ளனர். குறிப்பாக அதிக பாசன நீர் தேவைப்படும், நெல், கரும்பு, வாழை போன்ற பயிர்களின் சாகுபடி கடந்த பத்து ஆண்டுகளில் மட்டுமே, 56% குறைந்துள்ளது.

தற்போது, தமிழ்நாட்டில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த விவசாயிகள், இயற்கை விவசாயத்துடன் இணைந்த பல அடுக்குப்பயிர் சாகுபடி முறையை பின்பற்றி வருவதால், இந்த பருவநிலை மாற்றத்தை அறிவுப்பூர்வமாக எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்த முறையை பின்பற்றி விவசாயம் செய்வதால், பயிர்களுக்கான நீர் தேவையை இவர்கள் வெகுவாக குறைத்துள்ளதுடன், உரம் மற்றும் பூச்சிக்கொல்லி பயன்பாட்டை குறைத்து உற்பத்தி செலவை கட்டுக்குள் வைத்து அதிக லாபம் பெற்றுள்ளனர்.
அதிக நீர் தேவைப்படும் பயிர்களுக்கு மாற்றாக தென்னை மரங்கள் சாகுபடி செய்து அதற்கு அருகே பாக்கு, ஜாதிக்காய், கோகோ, வாழை போன்ற பல்வேறு பயிர்களை, பல அடுக்குப்பயிர் சாகுபடி முறையில், ஊடுபயிராக சாகுபடி செய்துள்ளனர். இதன் மூலம் அறிப்பூர்வமாக பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதாக தெரிவிக்கிறார்கள் இயற்கை விவசாயிகள்.
குறைந்த நீரில் அதிக பயிர் சாகுபடி!
TNCயிடம் பேசிய கோவை மாவட்டம் ஆனைமலை கிராமத்தைச் சேர்ந்த 78 வயதான மூத்த இயற்கை விவசாயி மதுராமகிருஷ்ணன், ‘‘நான் 5 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். கிட்டத்தட்ட 55 ஆண்டுகளாக விவசாயம் செய்து வரும் நான், கடந்த 30 ஆண்டுகளாக நேரடியாக பருவநிலை மாற்றத்தால் பாதித்துள்ளேன். முன்பு நெல், கரும்பு, வாழை சாகுபடி செய்த நான், தற்போது நீர் பற்றாக்குறை, வறட்சி அல்லது அதீத மழை காரணமாக இவற்றை சாகுபடி செய்வதில்லை, அதற்கு மாற்றாக பல அடுக்குப்பயிர் சாகுபடிக்கு மாறிவிட்டேன்.

ஒரு ஏக்கருக்கு 70 தென்னை மரங்கள் சாகுபடி செய்து அதற்கு அருகே, 40 ஜாதிக்காய் மரங்கள், 40 பாக்கு மரங்கள், 30 மிளகு நாற்றுகள் சாகுபடி செய்து வருகிறேன்.
ஒரு தென்னை மரத்திற்கு ஒரு நாளைக்கு 80 – 100 லிட்டர் நீர் பாசனத்திற்கு தேவைப்படுகிறது. தனியாக வளர்த்தால் ஜாதிக்காய், பாக்கு அல்லது மிளகு நாற்றுக்கும் கிட்டத்தட்ட தனித்தனியாக ஒரு நாளைக்கு 70 லிட்டர் நீர் தேவை.
ஆனால், பல அடுக்குப்பயிர் சாகுபடி முறையால், தென்னைக்கு வழங்கும் வெறும் 100 லிட்டர் நீரிலேயே மற்ற பயிர்களையும் நான் சாகுபடி செய்கிறேன். பல அடுக்குப்பயிர் சாகுபடி முறையால் குறைந்த நீரில் அதிக பயிர்கள் சாகுபடி செய்ய முடிகிறது,’’ என்கிறார் அவர்.
மேலும் பேசிய அவர், ‘‘வெயில் என்பது பயிர்களுக்கு நண்பன், ஆனால் மண்ணிற்கு எதிரி. வெறும் தென்னை சாகுபடி செய்துள்ள தோட்டங்களில் சூரிய ஒளி நேரடியாக மண்ணில் படுவதால் எளிதில் மண்ணில் ஈரப்பதம் குறைந்து வறட்சி ஏற்படும். இதனால், கூடுதலாக ஒரு மரத்திற்கே 20 – 30 லிட்டர் நீர் தேவை. அதுமட்டுமின்றி சூரிய ஒளி அதிகம் பட்டால், மண்ணிலுள்ள நுண்ணுயிரிகள் மற்றும் மண் புழு அழிந்து மண் வளமும் குறையும்.
பல அடுக்குப்பயிர் சாகுபடியால், தோட்டம் சிறு காடு போல இருப்பதால் மண்ணில் சூரிய ஒளி நேரடியாக படுவது குறைந்துள்ளது. பல அடுக்காக இருப்பதால் சூரிய ஒளி மண்ணில் படாது, மண்ணில் எப்போதும் ஈரப்பதம் இருக்கும், நுண்ணுயிரிகள் மற்றும் மண்புழுக்கள் மரணிப்பதும் தவிர்க்கப்பட்டு மண் வளம் பாதுகாக்கப்படுகிறது,’’ என்கிறார் அவர்.
இரண்டு மாடு போதும் உரம் தயாரிக்க!
இயற்கை உரம் தயாரிப்பு குறித்து பேசிய மதுராமகிருஷ்ணன், ‘‘பயிர்களுக்கு நான் இயற்கை உரம் தான் பயன்படுத்துகிறேன். இரண்டு மாடு இருந்தால் போதும் குறைந்தது ஐந்து ஏக்கருக்கு உரமிடலாம்.
நாட்டு மாட்டின் சாணத்தை தென்னை, வாழை, ஜாதிக்காய் மற்றும் பாக்கு மரங்களுக்கு அடியில் வைக்கிறேன். இது பயிர்களுக்கு சிறந்த உரமாக பயன்படுகிறது. அதேபோல், மாட்டின் சிறுநீர், சாணம் மற்றும் பண்ணைக் கழிவுகளை பயன்படுத்தி இயற்கை உரம் மற்றும் மண்புழு உரம் தயாரித்து பயன்படுத்துகிறேன்.

நாட்டு மாட்டு சாணம் ஏழு கிலோ, மாட்டு பாலில் இருந்து தயாரித்த நெய் ஒரு லிட்டர், மாட்டின் கோமியம் 10 லிட்டர், மாட்டு பால் மூன்று லிட்டர், தயிர் இரண்டு லிட்டர், ரசாயன கலப்பில்லாத நாட்டுச் சர்க்கரை மூன்று கிலோ, இளநீர் மூன்று லிட்டர், பூவன் பழம் – 12, தண்ணீர் – 10 லிட்டர் ஆகியவற்றை, 60 கிலோ கொள்ளவுள்ள பிளாஸ்டிக் டிரம்மில் கலக்கப்படுகிறது. இப்படி தயாராகும் இயற்கை உரமான பஞ்சகாவ்யம் பயன்படுத்துகிறேன். இதனால், பயிர்களுக்கான உரச்செலவு மிகவும் குறைவு தான், உற்பத்தி செலவு கட்டுக்குள் உள்ளது.
இப்படித்தான் இயற்கை மாட்டு சாணத்தில் இயற்கை உரம், பல அடுக்குப்பயிரில் குறைந்த நீரில் அதிக பயிர் சாகுபடி என இயற்கை விவசாயத்தின் மூலம் பருவநிலை மாற்றத்தை எதிர்கொண்டு வருகிறேன்,’’ என்கிறார் அவர்.
ஆண்டு முழுவதிலும் நிலையான வருமானம் கிடைக்கிறது!
நம்மிடம் பேசிய நா.மூ.சுங்கத்தை சேர்ந்த 56 வயதான இயற்கை விவசாயி ராஜகோபால், ‘‘நான் இரண்டு ஏக்கரில் இயற்கை முறையில், பல அடுக்குப்பயிர் சாகுபடி செய்துள்ளேன்.
தென்னை, அதற்கு இடையே வாழை, பாக்கு, மிளகு, ஜாதிக்காய் சாகுபடி செய்துள்ளேன். 60 நாளுக்கு ஒரு முறை தேங்காய் பறிப்பு, ஆண்டிற்கு இரண்டு முறை ஜாதிக்காய் மற்றும் மிளகு அறுவடை, ஆண்டிற்கு மூன்று முறை பாக்கு மற்றும் வாழை அறுவடை செய்கிறேன். இப்படி பல பயிர்களில் ஆண்டு முழுவதிலும் அறுவடை நடப்பதால் தொடர்ச்சியான நிலையான வருமானம் கிடைக்கிறது.

பஞ்சகவ்யம், பூச்சிவிரட்டி, ஜூவாமிர்தம் போன்ற இயற்கை உரங்கள் பயன்படுத்தி இயற்கை விவசாயம் செய்வதால், இயற்கையாக விளைவிக்கப்படும் இந்தப்பொருட்களுக்கு சந்தையில் அதிக விலை கிடைக்கிறது. ரசாயன விளைபொருட்களை விட 15 – 30 சதவீதம் கூடுதல் விலை கிடைக்கிறது,’’ என்றார் மகிழ்ச்சியுடன்.
தமிழ்நாடு முழுவதிலும் தற்போது பருவநிலையை எதிர்கொண்டு, அறிவுப்பூர்வமாக பல அடுக்குப்பயிர் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு வேளாண் துறையின் அதிகாரப்பூர்வ தகவலின் படி 2025ம் ஆண்டு மட்டுமே, 8,762 விவசாயிகள் இயற்கை விவசாயிகளாக பதிவு செய்துள்ளனர்.
இயற்கையும், பல அடுக்குப்பயிர் சாகுபடி முறையும், பருவநிலை மாற்றத்திற்கு எதிராக தமிழக விவசாயிகளை தகவமைத்து வருகின்றன. அதற்கு முன்னோடியாகத் திகழ்கிறார்கள் கொங்கு மண்டல விவசாயிகள்.