கொழும்பிலுள்ள புதிய மெகஸின் சிறைச்சாலை, குருவிட்ட சிறைச்சாலை மற்றும் பல்லன்சேன சிறைச்சாலைகளில் கடந்த 12 மணிநேரத்திற்குள் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக மூன்று கைதிகள் உயிரிழந்துள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
இரத்தினபுரி – குருவிட்ட சிறைச்சாலையில் நேற்றிரவு முதல் ஏற்பட்டுள்ள அமைதியின்மை காரணமாக இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த நால்வர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குருவிட்ட சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக துப்பாக்கி சூடு நடாத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டதாக நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவிக்கின்றார்.
நீர்கொழும்பு, தளுபொத்த, பல்லன்சேனை திறந்தவெளி சிறைச்சாலையில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது கைதிகள் சிலர் சிறைச்சாலையின் கூரையின் மீது ஏறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மாதம் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தையடுத்து, அங்கு இருந்த கைதிகளில் சிலர் பல்லன்சேனை திறந்தவெளி சிறை முகாமிற்கு மாற்றப்பட்டிருந்தனர்.
இதேவேளை, கொழும்பு புதிய மெகஸின் சிறைச்சாலையில் நேற்றிரவு ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் தொடரும் மோதல்
இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் அடுத்தடுத்து அமைதியின்மை ஏற்பட்டு வருகின்றமை தற்போது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த மாதம் 5ம் தேதி ஆரம்பமான பிரச்சினை இன்று காலை வரை நான்கு சிறைச்சாலைகளில் பிரச்சினை வலுப் பெற்றுள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் சிறை அதிகாரிகள் உள்ளிட்ட 28 பேர் உயிரிழந்திருந்ததுடன், சுமார் 100 பேர் வரை காயமடைந்திருந்தார்கள்.
இந்த பிரச்சினை இரண்டு தினங்களாக தொடர்ந்த நிலையில், அது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, இந்த மாதம் முதலாம் தேதி மஹர சிறைச்சாலையில் அமைதியின்மை சம்பவமொன்று பதிவாகியிருந்தது.
இந்த மோதலில் சுமார் 10 கைதிகள் காயமடைந்த நிலையில், ஒருவர் உயிரிழந்திருந்தார்.
மஹர சிறைச்சாலையிலுள்ள பல சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த கைதிகள், சிறைச்சாலை அலுவலகங்களை தீ வைத்து எரித்திருந்தனர்.
இந்த மோதல் சம்பவத்தினால் சுமார்ம 15 கோடி ரூபாவிற்கும் மேல் சேதம் ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட ஆய்வுகளின் ஊடாக தெரிவந்துள்ளது.
இந்த பிரச்சினையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட பின்னணியில், மீண்டும் தற்போது சிறைச்சாலைகளுக்குள் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
கொழும்பு – மெகஸின் சிறைச்சாலையில் நேற்றிரவு அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.
சிறை வளாகத்திற்குள் வீசப்பட்ட போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பொதியொன்றை, சிறை அதிகாரியொருவர் கைப்பற்றியுள்ளார்.
இதையடுத்து, சிறை கைதிகள் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர்.
அதைத் தொடர்ந்து, சிறை கூடங்களின் பூட்டை உடைத்துக்கொண்டு சுமார் 40ற்கும் அதிகமான கைதிகள் வெளியில் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு வெளியில் வந்த கைதிகள், சிறை அதிகாரிகளின் அலுவலகங்களை சேதப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், சிறைச்சாலை அதிகாரிகள், போலீஸார், போலீஸ் விசேட அதிரடிப்படை, போலீஸ் கலகத் தடுப்பு பிரிவு உள்ளிட்டோர் சிறைக்குள் சென்று நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.
புதிய மெகஸின் சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
இதையடுத்து, சிறைச்சாலை மற்றும் சிறைச்சாலை வளாகத்திற்கு நேற்றிரவு முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, குருவிட்ட சிறைச்சாலையில் தற்போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளதுடன், கைதிகளை நோக்கி கண்ணீர் புகை தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
குருவிட்ட சிறைச்சாலையில் நேற்றிரவு சிறு அளவில் ஏற்பட்ட அமைதியின்மை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
எனினும், குறித்த சிறைச்சாலையிலுள்ள கைதிகளுக்கு இடையில் இன்று காலை மீண்டும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
சிறைச்சாலையின் மருத்துவமனைக்கு கைதிகள் சிலர் சேதம் விளைவித்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
இதையடுத்து, பாதுகாப்பு பிரிவினர் நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர கண்ணீர் புகை பிரயோகம் நடாத்தியுள்ளனர்.
சிறைச்சாலையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர பாரிய பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.