தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் விவகாரம் தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. முன்னதாக பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், காவிரி மற்றும் மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், கர்நாடகாவில் அனைத்துக்கட்சிகளும் ஒன்றுபட்டு செயல்படுகின்றன. ஆனால் தமிழகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த ஏன் முதல்வர் விஜய் மறுக்கிறார் எனவும்? என்ன நடக்கிறது? ஏன் முதல்வர் கர்நாடகா செல்லும் திட்டத்தைக் கைவிட்டார்? என்பது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினார். மேலும் கடந்த ஒரு மாதத்தில் மேகதாது அணை கட்டுவது தொடர்பான பல்வேறு பணிகளை கர்நாடகா அரசு செய்து வருகிறது. இதற்காகத் தான் அனைத்துக்கட்சி கூட்டத்தையும் கூட்டியுள்ளது என தெரிவித்த உதயநிதி, இதனால் தான் தமிழகத்திலும் அனைத்துக் கட்சிக்கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று கூறினார். விவசாயிகளுக்கு முழு பயிர்க்கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டு அரைகுறையாக தள்ளுபடி செய்தது ஏன்? குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக தமிழக முதல்வர் விஜய் பதிலளித்துள்ளார்.
காவிரி விவகாரத்தில் அரசியல் பேச மாட்டேன்…
காவிரி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் சில கேள்விகளைக் கேட்டுள்ளதாகவும், காவிரி நம்முடைய உணர்வு ரீதியான ஒரு விஷயம் எனவும், அதை வைத்து அரசியல் செய்யும் எண்ணம் துளி கூட நமது அரசுக்கு இல்லை என தெரிவித்துள்ளார். மேகதாது விவகாரத்தில் நாம் சேர்ந்தே தீர்மானம் நிறைவேற்றி அதை நேர்முக கடிதமாக பிரதமரிடம் கொடுத்துள்ளோம். இன்றைய காலத்தில் பகையுள்ள நாடுகளே தண்ணீர் பிரச்சனையை பேசி தீர்க்கும் போது, ஏன் அண்டை மாநிலத்துடன் பேசிப்பார்க்கலாம் என்ற முயற்சி செய்தேன். அவமானம் ஏற்பட்டாலும் தமிழ்நாட்டு மக்களுக்காக பேசலாம் என்று நினைத்தேன் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.