சீனாவில் 19 வயது இளைஞன் ஒருவர், தனது குடும்பத்தினரைத் தவிர்த்துவிட்டு, தனக்குச் சொந்தமான 28 கோடி ரூபாய் (20 மில்லியன் யுவான்) மதிப்பிலான சொத்துக்கள் அனைத்தையும் தனது சிறுவயது நண்பனுக்கு உயில் எழுதி வைத்துள்ள சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

லீ (Li) என்ற அந்த மாணவனின் பெற்றோர் விவாகரத்து பெற்று, வேறு நபர்களை மறுமணம் செய்து கொண்டனர். லீ-க்கு சொத்துக்களைக் கொடுத்திருந்தாலும், அவர்கள் அவனுடன் நேரம் செலவிடாமல் ஒதுக்கியே வைத்துள்ளனர், இதனால் லீ (Li) மனதளவில் தூரமானார்.
ஏன் நண்பனுக்கு எழுதினார்? லீ ஆபத்தான விளையாட்டுகளில் (Extreme Sports) ஆர்வம் கொண்டவர். ஒருவேளை தனக்கு ஏதேனும் நேர்ந்தால், தனது சொத்துக்கள் முற்றிலும் அந்நியர்களான தனது பெற்றோரின் புதிய வாழ்க்கைத் துணைவர்களுக்குச் சென்று சேரக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். எனவே, சிறுவயது முதல் தன்னுடன் ஆழமான நட்பில் இருக்கும், தனக்கு மிகவும் நம்பிக்கையான நண்பனுக்குச் சொத்துக்களை உயில் மூலம் சட்டப்பூர்வமாகப் பதிவு செய்து வைத்துள்ளார்.

சீன சட்டப்படி, உயில் இல்லாதபட்சத்தில் சொத்துக்கள் பெற்றோருக்கே செல்லும். ஆனால், இந்த மாணவன் அதிகாரப்பூர்வமாக உயில் எழுதி வைத்துள்ளதால், அவர் மறைந்த 60 நாட்களுக்குள் அவரது நண்பன் இதை முறைப்படி ஏற்றுக்கொண்டால் சொத்துக்கள் அனைத்தும் நண்பனுக்கே சேரும்.
இளம் வயதிலேயே இவ்வளவு பெரிய தொகையை நண்பனுக்கு எழுதிக் கொடுத்த இந்த மாணவனின் முடிவு இணையத்தில் பலதரப்பட்ட விவாதங்களை உருவாக்கியுள்ளது.