அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

இன்பதுரை வெற்றி செல்லாது… 10 ஆண்டுகாலப் போராட்டத்தில் வென்ற அப்பாவு!

2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் இன்பதுரை வெற்றி செல்லாது, திமுக வேட்பாளர் மு.அப்பாவு தான் வெற்றி பெற்றுள்ளார் என சென்னை உயர் நீதிமன்றம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பளித்துள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 2016ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் தமிழக முன்னாள் சபாநாயகர் அப்பாவு போட்டியிட்டிருந்தார். அவருக்கு எதிராக அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட இன்பதுரை 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

2016 தேர்தலில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை – தி.மு.க வேட்பாளர் அப்பாவு இடையே கடுமையாக போட்டி இருந்தது. வாக்கு எண்ணிக்கையின் இறுதியில் தான், 49 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இருப்பினும், தபால் வாக்குகள் (Postal Ballots) மற்றும் சில குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்ததாக அப்பாவு குற்றம் சாட்டினார். குறிப்பாக, தகுதி வாய்ந்த தபால் வாக்குகள் பல நிராகரிக்கப்பட்டதாகக் கூறிய அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கை தொடர்ந்தார்.

இந்த விசாரணை கடந்த 10 ஆண்டுகளாக நீண்ட இழுபறியாக ‘ஆமை வேகத்தில்’ நடைபெற்று வந்தது. இந்நிலையில், 2016 தேர்தலில் இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் இன்று தீர்ப்பளித்துள்ளார்.

நீதிபதி தீர்ப்பில் கூறியது என்ன?

இந்த வழக்கில் நீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பில், ‘‘104 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளர் அப்பாவு வெற்றி பெற்றது மறு வாக்கு எண்ணிக்கையில் நிரூபணம் ஆகியுள்ளது.இத்தீர்ப்பால் இன்பதுரை தகுதி நீக்கம் செய்யப்பட மாட்டார். அதே சமயம், கடந்த 5 ஆண்டுகளுக்கான எம்.எல்.ஏ. ஓய்வூதியத்தை அவர் கோர முடியாது,’’ எனத் தீர்ப்பளித்துள்ளார்.

மேலும், 2016 – 2021-ஆம் ஆண்டுகளில் அரசு ஆவணங்களில் ராதாபுரம் எம்.எல்.ஏ என்ற இடங்களில் இன்பதுரை பெயரை நீக்கவும், அதற்கு பதிலாக அப்பாவு பெயரை மாற்றவும் தமிழக அரசுக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

‘நீதி வென்றது’ – அப்பாவு மகிழ்ச்சி!

இந்தத் தீர்ப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அப்பாவு, “2016ம் ஆண்டு ராதாபுரம் தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தபால் வாக்குகளில் 203 வாக்குகளை எண்ணாமலேயே தேர்தல் முடிவுகளை அறிவித்துவிட்டார்கள்.

எனவே, அந்த அறிவிப்பைச் செல்லாது என அறிவிக்கக் கோரி நான் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குத் தொடர்ந்தேன். இந்த வழக்கு உயர்நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை சென்று, பல சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னால் உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கியது.

உச்ச நீதிமன்றத்தின் அந்தத் தீர்ப்பின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் இன்று ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளார். ஏற்கனவே கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில், அக்டோபர் 4ம் தேதி தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அந்த வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில், நான் 105 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதியரசர் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

மேலும், அந்தத் தேர்தலில் ஏற்கனவே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட இன்பத்துரையின் தேர்வு செல்லாது என்றும், சென்னை தலைமைச் செயலகம் உள்ளிட்ட அனைத்து அரசு ஆவணங்களிலும் 2016 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த இன்பத்துரையின் பெயரை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக என் பெயரை பதிக்க வேண்டும் என்றும் மாண்புமிகு நீதியரசர் உத்தரவிட்டுள்ளார். இந்தத் தீர்ப்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இறுதியாக நீதி வென்றுள்ளது.

இத்தனை காலங்களாக நாங்கள் அனுபவித்த அத்தனை வலிகளுக்கும் வேதனைகளுக்கும் மாண்புமிகு நீதியரசரின் இன்றைய தீர்ப்பு ஒரு சிறந்த நிவாரணமாகக் கிடைத்துள்ளது. எனவே, இந்த நீண்ட காலதாமதம் எனக்குப் பெரிதாகத் தெரியவில்லை. இந்த வரலாற்று வெற்றியை நம்முடைய மாண்புமிகு மறைந்த தலைவர் கலைஞர் அவர்களின் நினைவிடத்திலும், முன்னாள் முதல்வர் பாதத்திலும் காணிக்கையாக்குகிறேன்.” என்றார்.

ஒரு எம்.எல்.ஏ வெற்றி பெற்றார் எனத் தவறுதலாக அறிவிக்கப்பட்டு, அதன் மீதான விசாரணையை பத்து ஆண்டுகளாக நடத்தி இந்தத்தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளதால், நீதித்துறை இயந்திரமும், தேர்தல் ஆணையமமும் ‘ஆமை வேகத்தில்’ செயல்படுவதாகவும், அப்பாவு வழக்கில் ‘மிக வேகமாக’ தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் பலரும் கலாய்த்து வருகின்றனர்.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of திலீபன்

திலீபன்