தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னதாக நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடர் தினமும் நேரலையில் ஒளிப்பரப்பட்டு வருகிறது. தற்போது சோசியல் மீடியாக்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில், யார் என்ன செய்தாலும்? அடுத்த நொடியே மீம்ஸ் மற்றும் ரீல்ஸ்களாக வைரலாகிறது. இந்த சூழலில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேரலையில் ஒளிப்பரப்பப்படுவதால் சட்டமன்ற உறுப்பினர்கள் பேசுவது ரீல்ஸ்களாக்கப்படுகிறது. இது குறித்து சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் கே.என்.நேரு இரண்டு பொருள் குறித்து பேசினால் அவை உரிமை குழுக்கு அனுப்பப்படும் என்று கூறுகிறீர்கள். ஆனால் சட்டப்பேரவை கூட்டத்தொடர் அனைத்து நேரலை ஒளிப்பரப்பு செய்யப்படும் நிலையில் நீக்கப்பட்ட குறிப்புகள் ரீல்ஸ்சாக பதிவிடப்படுகிறது. இது குறித்து ஏன் அவை உரிமை தீறல் குழு அமைக்கவில்லை என்றும், பேரவையில் தீர்மானம் கொண்டு வரலாம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் அவைக்குறிப்பில் இருந்து சிலவற்றை நீக்கினாலும், நேரலையாக செல்லும் போது சமூக வலைத்தளங்களில் ரீல்ஸாக அதிகம் பகிரப்படுகின்றன. இதனால் அவைக்குறிப்பில் இருந்து நீக்குவது அர்த்தமில்லாமல் போகிறது எனவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இதற்கு பதில் அளித்த சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர், இந்த வார இறுதியில் சட்டப்பேரவையில் அனைத்து கமிட்டியும் அமைப்பதற்கு தேர்தல் நடைபெறவுள்ளது என கூறினார். அப்போது அவை உரிமை மீறல் குழுவும் அமைக்கப்பட்டு இந்த விவகாரம் குறித்து நாம் கலந்து பேசி தீர்மானம் குறித்து முடிவெடுக்கப்படும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
.