சௌதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் என்ற இலங்கையரின் விடுதலை தொடர்பில் மேன்முறையீடு செய்வதற்கு இன்னும் 15 நாட்கள் மாத்திரமே இருப்பதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
அனோஜனின் விடுதலை தொடர்பிலான மேன்முறையீடு தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு அவர்களது குடும்பத்தினர் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதேவேளை, சிவராசா அனோஜனின் விடுதலை தொடர்பில் தேவையான அரச தலையீடுகளை மேற்கொள்ள விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமஞ்ஞ மற்றும் அமரபுர பீடங்களின் மகாநாயக்க தேரர்களினால், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கு மகஜரொன்று கையளிக்கப்பட்டு, அதனூடாக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

இதேவேளை, அனோஜனின் விடுதலை தொடர்பில் விரைந்து கவனம் செலுத்துமாறு இந்து மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி இந்து குருமார் சங்கத்தின் தலைவரும் அகில இலங்கை இந்து கலாசார சபையின் தலைவருமான கலாநிதி சிவஸ்ரீ கே.வி.கே.வைதீஸ்வர குருக்கள், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நபிகள் நாயகத்திற்கு சமூக வலைத்தளத்தின் ஊடாக அவதூறாக கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டின் கீழ் இலங்கையைச் சேர்ந்த சிவராசா அனோஜனுக்கு சௌதி அரேபியாவில் கடந்த 17ம் தேதி மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.
இந்த தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தி, அந்த நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வதற்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டு, 15 நாட்கள் கடந்துள்ள நிலையில், இன்னும் 15 நாட்கள் மாத்திரமே மேன்முறையீடு செய்வதற்கு எஞ்சியுள்ளது.
இந்த நிலையில், அனோஜனின் விடுதலையை கோரிய ஜனாதிபதியின் கடிதத்துடனான நாடாளுமன்ற குழுவொன்று விரைவில் சௌதி அரேபியா நோக்கி பயணிக்கவுள்ளது.
பிரதி சபாநாயகர் தலைமையில் ஆளும் மற்றும் எதிர்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்களாக குழுவொன்றே இவ்வாறு சௌதி நோக்கி பயணிக்கவுள்ளது.
அத்துடன், அனோஜனின் விடுதலை தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்துவதற்காக மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் நஷிட்டின் உதவியை இலங்கை அரசாங்கம் நாடவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத் தொடருக்கு சென்றுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், சௌதி அரேபிய வெளிவிவகார அமைச்சரை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையின் போதும், அனோஜனின் விடுதலை தொடர்பில் கோரிக்கை விடுக்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் மேலும் குறிப்பிடுகின்றார்.
அத்துடன், சௌதியிலுள்ள இலங்கை தூதரகத்தின் ஊடாகவும் அனோஜனின் விடுதலை தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் குறிப்பிடுகின்றது.
மரண தண்டனை நிறைவேற்றும் சிறைக்கு மாற்றப்பட்ட அனோஜன்
சௌதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சிவராசா அனோஜன், மரண தண்டனை நிறைவேற்றப்படும் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவரது சகோதரன் ஹம்சிதன் தெரிவிக்கின்றார்.
கடந்த வெள்ளிக்கிழமை தொலைபேசியூடாக தொடர்புக் கொண்ட போதே அனோஜன் இந்த விடயத்தை தனக்கு கூறியதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
அதன்பின்னர், தமது குடும்பத்துடன் அனோஜன் தொடர்புக் கொள்ளவில்லை என அவர் கூறுகின்றார்.
தனது சகோதரனின் தற்போதைய நிலைமை என்னவென்பது தொடர்பில் தம்மால் அறிந்துக்கொள்ள முடியாத நிலைமை காணப்படுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த நிலையில், தனது சகோதரனின் விடுதலை தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அனோஜனின் குடும்பத்தினர் கோரிக்கை விடுக்கின்றனர்.
தொடர்புடைய செய்தி :- சௌதியில் இலங்கை இளைஞனுக்கு வழங்கப்பட்ட சிறைத் தண்டனை, எவ்வாறு மரண தண்டனையானது?