அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

தேர்தல் வாக்குறுதியில் ரூ.5 லட்சம்; அரசாணையில் ரூ.2.5 லட்சம்! அண்ணன் சீர் திட்டத்தின் பின்னணி என்ன?

தமிழ்நாட்டில் திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயமும் ஒரு பட்டுப்புடவையும் வழங்கப்படும் என்ற அறிவிப்புடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘அண்ணன் சீர்’ திட்டம், தற்போது அரசியல் விவாதத்தையும் சமூக ரீதியான கேள்விகளையும் எழுப்பியுள்ளது. தேர்தலுக்கு முன்பு ஆண்டுக்கு ரூ.5 லட்சத்திற்கும் குறைவான வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட இத்திட்டத்தில், ஆட்சிக்கு வந்த பிறகு வருமான உச்சவரம்பு ரூ.2.5 லட்சமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.812 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான கடுமையான நிபந்தனைகளும் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. தேர்தல் வாக்குறுதியின் நோக்கம் என்ன? நடைமுறையில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டத்தின் வரம்பு என்ன? உண்மையில் எத்தனை பெண்கள் இதன் மூலம் பயனடைய முடியும்?

தேர்தலுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட அண்ணன் சீர் திட்டம்!

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், மார்ச் 7ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் பெண்களுக்கான பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார்.

பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்குத் தனித்துறை, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை, ஆண்டுக்கு ஆறு இலவச சமையல் எரிவாயு உருளைகள், பெண்களுக்கான இலவசப் பேருந்துப் பயணம் உள்ளிட்ட அறிவிப்புகளுடன் ‘அண்ணன் சீர்’ திட்டத்தையும் அறிமுகப்படுத்தினார்.அதன்படி, திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கமும் ஒரு பட்டுப்புடவையும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

தேர்தல் அறிக்கையில் இந்தத் திட்டத்திற்கான முக்கியமான தகுதியாக, ஆண்டுக்கு ரூ.5 லட்சத்திற்கும் குறைவான வருமானம் கொண்ட குடும்பங்களில் நடைபெறும் திருமணங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

அதாவது, பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் திருமணச் செலவுகளைக் குறைக்கும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஆகஸ்ட் 5: முதல் பட்ஜெட்டில் ரூ.812 கோடி அறிவிப்பு!

தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த பிறகு, தமிழக வெற்றிக் கழக அரசு தனது முதல் பட்ஜெட்டை 2026 ஆகஸ்ட் 5ஆம் தேதி தாக்கல் செய்தது.

நிதியமைச்சர் என். மரிய வில்சன் தாக்கல் செய்த 2026-27ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட வரவு-செலவுத் திட்டத்தில் ‘அண்ணன் சீர்’ திட்டத்திற்காக ரூ.812 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதன்படி, தமிழ்நாட்டில் திருமணமாகும் தகுதியுடைய பெண்களுக்கு 8 கிராம் (22 காரட்) தங்க நாணயமும் ஒரு பட்டுப்புடவையும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

திருமணத்தின்போது அண்ணன் தனது சகோதரிக்கு வழங்கும் சீர் என்பது அன்பு, பாசம், பாதுகாப்பு மற்றும் பொறுப்பின் அடையாளமாகக் கருதப்படுவதாகவும், அதே உணர்வுடன் அரசு மணப்பெண்களுக்குத் துணையாக நிற்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும் அரசு விளக்கமளித்தது.

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 5 லட்சம் திருமணங்கள் நடைபெறுவதாகவும் அரசின் விளக்கத்தில் குறிப்பிடப்பட்டது.

அக்டோபர் 5: வெளியான அரசாணை; மாறிய வருமான உச்சவரம்பு!

பட்ஜெட் அறிவிப்புக்குப் பிறகு, அக்டோபர் 5ஆம் தேதி ‘அண்ணன் சீர்’ திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நிர்வாக அனுமதியைத் தமிழக அரசு வழங்கியது.இந்த அரசாணையில்தான் தேர்தல் வாக்குறுதிக்கும் நடைமுறை அறிவிப்புக்கும் இடையிலான முக்கியமான வேறுபாடு வெளிப்பட்டது.

தேர்தல் அறிக்கையில் ஆண்டுக்கு ரூ.5 லட்சத்திற்கும் குறைவான வருமானம் கொண்ட குடும்பங்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், அரசாணையில் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது.

இதனால், தேர்தல் வாக்குறுதியுடன் ஒப்பிடும்போது பயனாளிகளுக்கான வருமான வரம்பு 50 சதவீதம் குறைக்கப்பட்டது.

இந்த மாற்றம் எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கும் வழிவகுத்தது.

தேர்தலுக்கு முன்பு பரந்த அளவிலான குடும்பங்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட திட்டம், ஆட்சிக்கு வந்த பிறகு குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன.

முதற்கட்டமாக ரூ.812 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தாலும், பயனாளிகளின் எண்ணிக்கை, தகுதி மற்றும் திட்டத்தின் செயல்பாட்டு வழிமுறைகள் குறித்த முழுமையான விவரங்கள் அப்போது வெளியிடப்படவில்லை.

அரசியல் விமர்சனங்கள்: வாக்குறுதியைச் சுருக்கியதா தவெக அரசு?

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தேர்தல் நேரத்தில் ஒரு விதமாகவும் ஆட்சிக்கு வந்த பிறகு மற்றொரு விதமாகவும் அரசு செயல்படுவதாக விமர்சித்தார்.

தேர்தல் அறிக்கையில் ரூ.5 லட்சம் என்று அறிவித்துவிட்டு, அரசாணையில் ரூ.2.5 லட்சமாகக் குறைத்திருப்பது நடுத்தரக் குடும்பங்களைப் பாதிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் இன்பதுரையும் இந்த மாற்றத்தை விமர்சித்தார். தேர்தல் வாக்குறுதிகளை வழங்கும்போதே அரசின் நிதிநிலையைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்; ஆட்சிக்கு வந்த பிறகு அவற்றின் வரம்புகளைக் குறைப்பது ஏற்கத்தக்கதல்ல என்பதே அவரது வாதமாக இருந்தது.

இதற்குப் பதிலளித்த தவெக தரப்பின் தேசிய செய்தித் தொடர்பாளர் சத்தியகுமார், தமிழகத்தின் கடன் சுமை மற்றும் நிதிநிலையைக் கருத்தில் கொண்டே வருமான வரம்பு நிர்ணயிக்கப்பட்டதாக விளக்கமளித்தார். எதிர்காலத்தில் இதற்கான வரையறையை மாற்றியமைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஆனால், தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த வாக்குறுதியை மாற்றியமைக்க வேண்டிய அவசியம் என்ன? அந்த முடிவை எடுப்பதற்கு முன்பு மக்களிடம் விளக்கம் அளிக்கப்பட்டதா? என்ற கேள்விகளுக்கு இந்த விளக்கம் முழுமையான பதிலாக அமையவில்லை.

திட்டத்தைச் செயல்படுத்த டெண்டர்: 60,000 தங்க நாணயங்கள் கொள்முதல்!

நவம்பர் 4ம் தேதி, 8 கிராம் தங்க நாணயங்கள் மற்றும் பட்டுப்புடவைகளைக் கொள்முதல் செய்வதற்குத் தமிழக அரசு டெண்டர் அறிவித்தது.

நடப்பு நிதியாண்டில் சுமார் 60,000 பயனாளிகளுக்கு இத்திட்டத்தின் கீழ் உதவி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக டெண்டர் விவரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்காக 60,000 தங்க நாணயங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. ஒவ்வொரு நாணயமும் 8 கிராம் எடையிலும் 22 காரட் தூய்மையிலும் இருக்க வேண்டும். மேலும், தங்க நாணயங்களுக்கு BIS ஹால்மார்க் மற்றும் HUID அடையாள எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தங்க நாணயங்களின் கொள்முதல் விலை, இந்திய புல்லியன் மற்றும் நகை வியாபாரிகள் சங்கம் (IBJA) நிர்ணயிக்கும் விலையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.

டெண்டர் நடைமுறையை டிசம்பர் 8ஆம் தேதிக்குள் இறுதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் திட்டத்திற்கான கொள்முதல் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. இருப்பினும், டெண்டர் இறுதி செய்யப்பட்டு பயனாளிகளுக்கு நகைகளும் பட்டுப்புடவைகளும் வழங்கப்படும் வரையிலான அடுத்தகட்ட நடவடிக்கைகள் முக்கியமானவையாக உள்ளன.

நவம்பர் 17: வெளியான முழுமையான தகுதி மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள்!

அரசாணை வெளியிடப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலான நிலையில், நவம்பர் 17ஆம் தேதி சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அண்ணன் சீர் திட்டத்திற்கான விரிவான தகுதி மற்றும் விண்ணப்ப நடைமுறைகளை வெளியிட்டது.

இதில் வருமான வரம்பு மட்டுமின்றி, குடும்பத்தின் சொத்து விவரங்கள், மின்சாரப் பயன்பாடு, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளும் இடம்பெற்றுள்ளன.

யாரெல்லாம் பயன்பெறலாம்?

  1. மணமக்கள் இருவரும் சட்டப்படியான திருமணத்திற்கான குறைந்தபட்ச வயதைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
  2. மணப்பெண்ணின் பெயர் செயல்பாட்டில் உள்ள குடும்ப அட்டையில் இடம்பெற்றிருக்க வேண்டும்.
  3. மணப்பெண்ணின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  4. பிற அரசுத் துறைகள் அல்லது வாரியங்களின் திருமண நிதியுதவித் திட்டங்களில் ஏற்கெனவே பயனடைந்திருக்கக் கூடாது.

யாரெல்லாம் பயன்பெற முடியாது?

அரசு வெளியிட்டுள்ள பொருளாதாரத் தகுதி நிபந்தனைகளின்படி:

  1. ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மேல் உள்ள குடும்பங்கள்.
  2. ரூ.2.5 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டி வருமான வரி தாக்கல் செய்யும் குடும்பங்கள்.
  3. குறிப்பிட்ட வருமான வரம்பை மீறி தொழில் வரி செலுத்தும் குடும்பங்கள்.
  4. சொந்தப் பயன்பாட்டிற்காக நான்கு சக்கர வாகனம் வைத்திருக்கும் குடும்பங்கள்.
  5. 5 ஏக்கருக்கு மேல் நன்செய் நிலம் வைத்திருக்கும் குடும்பங்கள்.
  6. 10 ஏக்கருக்கு மேல் புன்செய் நிலம் வைத்திருக்கும் குடும்பங்கள்.
  7. ஆண்டுக்கு 3,600 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள்.
  8. ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தவிர்த்துத் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் குடும்பங்கள்.
  9. அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் குடும்பங்கள்.
  10. ஆண்டுக்கு ரூ.50 லட்சத்திற்கும் அதிகமான விற்பனை செய்து ஜி.எஸ்.டி. செலுத்தும் நிறுவனங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய குடும்ப உறுப்பினர்கள்.

இத்தகைய நிபந்தனைகள் மூலம் பொருளாதார ரீதியாகத் தகுதியுடைய குடும்பங்களை அடையாளம் காண்பதே அரசின் நோக்கமாகத் தெரிகிறது.

ஆனால், ஒரு குடும்பத்தின் பொருளாதார நிலையை வருமானம், வாகனம், நிலம், மின்சாரப் பயன்பாடு போன்ற அளவுகோல்களின் அடிப்படையில் மட்டும் தீர்மானிப்பது நடைமுறையில் எத்தகைய சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதும் கவனிக்கப்பட வேண்டியதாகும்.

விண்ணப்பிப்பது எப்படி? காலக்கெடு என்ன?

அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி, திருமணத் தேதிக்கு 60 நாட்களுக்கு முன்பிருந்து திருமண நாள் வரை விண்ணப்பிக்கலாம்.

குறிப்பாக, 2026 அக்டோபர் 5ம் தேதி முதல் 2027 ஜனவரி 15ஆம் தேதி வரை திருமணம் நடைபெறவுள்ளவர்கள், 2027 ஜனவரி 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

அருகிலுள்ள அரசு இ-சேவை மையங்கள் அல்லது https://www.tnesevai.tn.gov.in இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்களின் ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டை எண் அடிப்படையில் தகுதி சரிபார்க்கப்படும். தகுதியுடையவர்கள் திருமண அழைப்பிதழைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

சரிபார்ப்புக்குப் பிறகு ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் தனித்துவ அடையாள எண் வழங்கப்படும். விண்ணப்பத்தின் நிலை குறித்த தகவல்கள் குறுஞ்செய்தி, வாட்ஸ்அப் மற்றும் மின்னஞ்சல் வழியாகத் தெரிவிக்கப்படும்.

மேலும், திருமணம் நடைபெற்ற 15 நாட்களுக்குள் தமிழ்நாட்டில் திருமணத்தைப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தகுதி இல்லாத காரணத்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், அதற்கான காரணம் தெரிவிக்கப்பட வேண்டும். நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.

அண்ணன் சீர் திட்டம்: பெண்களின் பொருளாதாரச் சுமையைக் குறைக்குமா? அல்லது திருமணச் சீரை ஊக்குவிக்குமா?

தமிழகத்தில் திருமணத்தின்போது பெண்ணுக்கு நகை, பட்டுப்புடவை, பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை வழங்குவது பல குடும்பங்களில் வழக்கமாக உள்ளது. இந்த வழக்கம் சில இடங்களில் குடும்பங்களின் பொருளாதார வசதியை மீறிய செலவுகளுக்கும் கடன் சுமைகளுக்கும் வழிவகுக்கிறது.

இத்தகைய சூழலில், பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த மணப்பெண்ணுக்கு 8 கிராம் தங்கமும் பட்டுப்புடவையும் வழங்குவது உடனடியாகப் பொருளாதார உதவியாக அமையலாம்.

குறிப்பாக, சகோதரர்கள் இல்லாத பெண்கள் மற்றும் திருமணச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் தவிக்கும் குடும்பங்களுக்கு இத்திட்டம் உதவியாக இருக்கலாம் என்ற ஆதரவான கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன.

அதேநேரத்தில், ‘அண்ணன் சீர்’ என்ற பெயரில் திருமணத்தின்போது தங்கம் மற்றும் பட்டுப்புடவை வழங்குவதை அரசு ஊக்குவிப்பது, ஏற்கெனவே சமூகத்தில் நிலவும் சீர்வரிசை எதிர்பார்ப்புகளை வலுப்படுத்துமா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

திருமணத்தில் பெண்ணுக்குச் சீர் வழங்குவது குடும்பத்தின் கடமையாகக் கருதப்படும் மனநிலையை மாற்ற வேண்டிய சூழலில், அரசே அதே நடைமுறையைத் திட்டமாக முன்னெடுப்பது சரியான அணுகுமுறையா என்ற விவாதமும் முக்கியத்துவம் பெறுகிறது.

திருமண உதவி என்பது பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு, சுயசார்பு, சொத்துரிமை மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் இருக்க வேண்டுமா அல்லது திருமணச் செலவுகளைக் குறைப்பதோடு நின்றுவிட வேண்டுமா என்பதும் விவாதிக்கப்பட வேண்டியதாகும்.

பழைய திருமண உதவித் திட்டங்களின் தொடர்ச்சியா?

தமிழ்நாட்டில் திருமண உதவித் திட்டங்கள் புதிதல்ல.

1989ஆம் ஆண்டு அப்போதைய திமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம், பின்னர் பல்வேறு ஆட்சிக் காலங்களில் மாற்றங்களைக் கண்டது.

ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் ‘தாலிக்குத் தங்கம்’ திட்டத்தின் கீழ் திருமணமாகும் பெண்களுக்கு தங்கம் மற்றும் நிதியுதவி வழங்கப்பட்டது.

பின்னர், முந்தைய திமுக ஆட்சியில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம் மாற்றியமைக்கப்பட்டு, அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகளின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் ‘புதுமைப் பெண்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், தவெக அரசு மீண்டும் திருமணத்துடன் தொடர்புடைய தங்கம் வழங்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

ஆனால், முந்தைய திருமண உதவித் திட்டங்களைப் போல கல்வித் தகுதியை அடிப்படையாகக் கொள்ளாமல், குடும்பத்தின் பொருளாதார நிலையை முதன்மையாகக் கொண்டு அண்ணன் சீர் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனால், கல்வியைத் தொடர ஊக்குவிக்கும் திட்டங்களுக்கும் திருமணச் செலவைக் குறைக்கும் திட்டங்களுக்கும் இடையிலான கொள்கை வேறுபாடு குறித்த விவாதமும் அவசியமாகிறது.

தேர்தல் வாக்குறுதியிலிருந்து நடைமுறை வரை: எழும் முக்கியக் கேள்விகள்!

தேர்தலுக்கு முன்பு ரூ.5 லட்சம் வருமான உச்சவரம்புடன் அறிவிக்கப்பட்ட திட்டம், தற்போது ரூ.2.5 லட்சம் வருமான வரம்புடன் செயல்படுத்தப்படுகிறது. அதற்காக ரூ.812 கோடி ஒதுக்கப்பட்டு, 60,000 தங்க நாணயங்களைக் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஆனால், திட்டத்தின் உண்மையான வெற்றி என்பது நிதி ஒதுக்கீட்டிலும் அறிவிப்புகளிலும் மட்டும் இல்லை. தகுதியுடைய பெண்களுக்கு எவ்வித இடையூறுமின்றி உதவி கிடைக்கிறதா என்பதில்தான் இருக்கிறது.

தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட ரூ.5 லட்சம் வருமான வரம்பை ஏன் குறைக்க வேண்டியிருந்தது? இந்தத் திட்டத்தின் மூலம் எத்தனை பெண்கள் உண்மையில் பயன்பெறுவார்கள்? குடும்பத்தின் பொருளாதார நிலையை மதிப்பிடுவதற்கான நிபந்தனைகள் நடைமுறையில் எவ்வாறு செயல்படுத்தப்படும்? தகுதியுடைய பெண்களுக்கு திருமணத்துக்கு முன்பே தங்க நாணயமும் பட்டுப்புடவையும் கிடைக்குமா? எதிர்காலத்தில் வருமான உச்சவரம்பு மாற்றப்படுமா?

இவை அனைத்தும் இன்னும் கவனிக்கப்பட வேண்டிய கேள்விகளாக உள்ளன.

பெண்களின் திருமணச் செலவுகளைக் குறைப்பது ஒரு நலத்திட்டத்தின் நோக்கமாக இருக்கலாம். ஆனால், பெண்களின் பொருளாதாரச் சுதந்திரம், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்வதே நீண்டகால அதிகாரமளித்தலுக்கான அடிப்படையாகும்.

தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்ட திட்டத்தைச் செயல்படுத்துவது மட்டுமல்ல; அந்த வாக்குறுதி எந்த அளவுக்குப் பொதுமக்களைச் சென்றடைகிறது என்பதையும் உறுதி செய்வதே ஓர் அரசின் உண்மையான பொறுப்பாகும்.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of பிரீத்தி காளியப்பன்

பிரீத்தி காளியப்பன்